ஊடகவியலின் சக்தி - The Media Power - ஜீவா சதாசிவம்

October 19, 2018


"ஊடகம் என்பது சுதந்திரமானதும் சுயாதீனமானதும் பொறுப்புடையதும் விழுமியங்களைக் கொண்டதுமானதாக இல்லாதபோது ஊடகவியலின் சக்தி பற்றிய வினா எழுப்புவதில் அர்த்தமில்லை" என்கிறார்  ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்குமான கனடாவின் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் டொபி மென்டேல்.

மேற்படி கருத்து நிலையில் நின்று ஊடகவியலையும் அதன் தற்காலப் போக்கையும் அலசி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகிறது. 

கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெற்ற  "ஊடக சுதந்திரத்துக்கும் சமூகப்பொறுப்புக்குமான கொழும்பு பிரகடனம்" என்னும் சர்வதேச மாநாட்டில் பிரதான பேச்சாளராக கலந்துகொண்ட ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்குமான கனடாவின் மத்திய நிலையத்தின் பணிப்பாளரான டொபி மென்டேல் ஊடகம் என்பது சுதந்திரமானதும் சுயாதீனமானதும் பொறுப்புடையதுமாக மாத்திரமின்றி ஒழுக்க விழுமியங்களையுடையதாகவும் இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

ஊடகவியலுக்கு ஒரு சக்தி உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் மாறிவரும் உலகில் சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெகுஜன ஊடகத்துறை அதன் சக்தியை கொண்டியங்குவது சவாலுக்குரியதே. 

இதற்கான அவசியத்தை வலியுறுத்துவதாகவும் அதனை கண்டடைவதற்கான வழிமுறையாகவுமே "கொழும்பு பிரகடனம்" அமைகிறது என்பதாகவே இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் 4 நாட்கள் நடைபெற்ற மாநாட்டின் இறுதியில் அவர் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவதூறுக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதிகாரமிக்க தனிநபர்களினால் பத்திரிகைகள், பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்,  தொடுக்கப்பட்ட வழக்குகளின் அடிப்படையே கொழும்பு பிரகடனத்துக்கான தோற்றுவாயானது. ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களே ஊடகச் சமூகம் ஓரணியில் திரண்டு போராடுவதற்கான களத்தை தோற்றுவிக்கிறது. இதனாலேயே 1998 ஆம் ஆண்டு கொழும்பு பிரகடனத்தை ஊடக சமூகம் ஏற்றுக்கொண்டது.

 ஊடக சுதந்திரத்தை  வலியுறுத்தும் சட்ட, கொள்கை சூழலை உருவாக்குவதிலும் சர்வதேச சட்ட பாதுகாப்பையும் அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகளை செய்வதிலும் ஒரு முக்கிய மாற்றத்தை அது செய்துள்ளது. ஆனாலும் கொழும்பு பிரகடனத்தைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை  ஒன்றை அன்றும் இன்றும் எங்கும் காண முடியாமல் உள்ளது. 

உதாரணமாக நேபாளத்தில் கொழும்பு பிரகடனத்தை தமது அரசியலமைப்பு தயாரிப்பின்போது ஒரு தரவு மூலமாக பயன்படுத்தியதையும் இலங்கை அவதூறுக்கு எதிரான குற்றவியல் சட்டத்தை மீளப்பெற்றதையும் மாத்திரமே கொள்ள முடியும். இதனை மேற்கொண்ட முதலாவது பொதுநலவாய அமைப்பு நாடுகளில் ஒன்று என்பதற்கு அப்பால்  ஐக்கிய ராஜ்ஜியம்,  கானா போன்ற நாடுகளில் சில சிறிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. 


இந் நடவடிக்கைகளுக்கு அப்பால் இலங்கையில், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் அதன் உறுப்பு அமைப்புகள், இலங்கை இதழியல் கல்லூரி, இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு போன்றவை இலங்கையில் உருவாக்கப்பட்டதை இம் மாநட்டில் உரையாற்றிய பலரும் வரவேற்றனர். இவை உருவாக்கப்பட்டது மாத்திரமின்றி நடைமுறையில் இயங்கிக்கொண்டிருப்பது முக்கியமானது என்றும் தெரிவித்தனர். 

ஓலி(ளி)பரப்புத்துறையும் இணைய (Online) ஊடகத்தையும் இதில் இணைத்துக்கொள்வது குறித்து தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றபோதிலும் அது இன்னும் பெரிதாக நடைபெறவில்லை. இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் உறுப்புரிமை அமைப்புகளாக இத்தகைய ஊடகத்துறைகளையும் இணைக்கும் பட்சத்தில் ஊடகத்துறையின் வளர்ச்சிக்கு அது பலமாக அமையும். இத்தகைய அமைப்புகளை கட்டியெழுப்புவதற்கு அப்பால் பத்திரிகைப் பேரவை, பத்திரிகைப் பேரவை சட்டம் போன்றவற்றை மீளப்பெறச் செய்வதையும் வலியுறுத்தவேண்டும். 

தற்காலத்தில் துறைசார் ஊடகத்துக்கும் சமூகவலைத்தள ஊடகத்துக்குமான இடைவெளியை பிரித்துப்பார்ப்பது கடினமாகியுள்ளது. தவறான தகவல்களும் வதந்திகளும் கூட செய்திகளாகி விடுகின்றன. ஊடக மற்றும் தகவல்சார்  கல்வி என்பது ஊடகத்தினதும் அது தரும் தகவல்களினதும் நம்பகத்தன்மையை பொதுமக்களிடத்தில் கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும். 

கொழும்பு பிரகடனத்தின் சில பக்கங்கள் இலங்கை அரசாங்க ஊடகங்களில் நிலவும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. ஏரிக்கரை பத்திரிகைகள், அரசாங்க ஒலி(ளி)பரப்பு ஊடக நடைமுறைகள் போன்றன பொதுச்சேவை என்பதற்கு அப்பால் அவை இன்னும் அரசாங்கத்தின் ஊதுகுழல்களாக இயங்குவதையே காட்டிநிற்கின்றன. 

அரசாங்க ஊடகங்களின் வகிபாகம் என்பது நம்பகரமான பிரதான செய்தி மூலம் என்பதற்கு அப்பால் அதில்  நிலைமாற்ற தேவைப்பாடு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. வெளிப்பாட்டு சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்பன தொடர்பாக பேசும்போது பாதுகாப்பு பற்றி அதிகம் உணரப்பட்டது. 

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களினூடாக அவர்களைக் கொல்லும் முன்னிலை நாடுகளில் ஒன்றாக இருந்த துரதிர்ஷ்ட நிலை இன்று இலங்கையில் பின்தள்ளப்பட்டுள்ளது. எனினும் அவை இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. இன்றும் கூட அச்சுறுத்தல்களும்  தாக்குதல்களும் இடம்பெறுகின்றன. 

 இலங்கையிலும் உலகளவிய ரீதியிலும் தகவல் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் தேசிய ரீதியானதும் சர்வதேச ரீதியானதுமான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான தளத்தை உருவாக்கும் முறைமையை வேண்டி நிற்கின்றது. 

மாநாட்டின் இரண்டாவது நாளானது "சர்வதேச தகவல் அறியும் உரிமை" நாளாக அமைந்தது. உலகளாவிய ரீதியாக மக்கள் தகவல் அறியும் சட்டங்களைக் கொண்டாடும் நாளாகவும் அமைந்தது. இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவர் இலங்கை அதற்காக மேற்கொண்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்தும் அரசியலமைப்பின் உறுப்புரிமை 14  ஊடாகவும் 2016 ஆம் ஆண்டு தகவல் உரிமைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பலமான ஏற்பாடு களையும் சுட்டிக்காட்டினார். எது எவ்வாறாயினும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பிலான மதிப்பாய்வில் இலங்கை மூன்றாம் நிலையில் இருந்து நான்காம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அண்மித்த நாடான ஆப்கானிஸ்தானிலும் தகவல் அறியும் உரிமை சட்டம் உலகின் முதன்மையானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேநேரம் இலங்கையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை நடை முறைப்படுத்த எடுக்கும் முயற்சியை குறைத்து மதிப்பிடமுடியாது. 

சுயாதீனமானதும் பலமானதுமன தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு அதனை தலைமை ஏற்று நடத்துகிறது. அது நிறைவேற்றியுள்ள பல தீர்மானங்கள்  கொழும்பைத் தளமாகக் கொண்ட சிவில் சமூக குழுக்களிடமிருந்து அல்லாமல் நாட்டின் பலதுறைகளிலும் வாழும் மக்களின் கோரிக்கைகளின் பால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் ஆதரவுள்ள பலமான தகவல் அறியும் சட்டமானது அத்துறை எதிர்நோக்கும் சவால்களைப் பின்தள்ள அவசியமானது. 

மாநாட்டின் மிக முக்கிய சொல்லாடலாக அமைந்தது. "போலிச் செய்திகள்" என்ற ஒன்று இல்லை என்பதாகும். "போலிச் செய்திகள்" என்னும் நாணயம் ஊடக எதிரிகளால் சுரண்டப்படுகிறது. குறிப்பாக ஊடகங்களைத் தாக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. சமூக ஊடகங்களில் வரும் திட்டமிடப்பட்ட செய்தியல்லாத தவறான தகவல்களுக்கு மீளவும் உயிரூட்டி இரண்டாவது தடவையாகவும் அதனை வெளிப்படுத்துவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும். சமூக ஊடகங்களில் இருந்து மரபுசார் ஊடகங்களை வேறுபடுத்தி அறியும் இடமாக அது அமைய வேண்டும். 

ஊடகங்கள் வாயிலாக பணத்தைத் தேடுவதற்கும்  கவனயீர்ப்பைப் பெறுவதற்கும் முயற்சிப்பதிலும் பார்க்க சரியான செய்தியை வழங்குவதற்கான தேவையே அதிகம் இருக்கிறது. நடைமுறை விடயங்கள் தொடர்பில் கவனமாக பெறப்பட்ட தகவல்தேடல் அவசியமானது.  துறைசார் ஊடவியலாளருக்கு உரிய பண்புகளோடு செயற்படுதல் அவசியம். பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது தவிர்க்கப்பட வேண்டும். 

புதிய எண்ணிம சூழல் (Digital Environment)  எண்ணிலடங்கா சவால்களை மரபுசார் ஊடகங்கள் மீது சுமத்தியுள்ளது. மரபுசார் ஊடகங்களிலிருந்து நிதியீட்டமானது சமூக ஊடகம் சார்ந்து மாற்றப்பட்டு வருகிறது. செய்திச் சுற்றின் வேகம், எல்லா பிரஜைகளுக்கும் கொண்டுசேர்த்தல், தகவல் கசிவுகள் முதலான சவால்களிலிருந்து மரபுசார் ஊடகத்தைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. 

நீதிமன்ற அவமதிப்பு சட்ட திட்டங்கள் இருக்கும்போது அதன் நிறை – குறைகளை வெளிப்படுத்துவதில் நியமங்களை உருவாக்கிக் கொள்வதில் உலகளாவிய ரீதியில் சவால்கள் காணப்படுகின்றன. நவீன ஊடக சூழலில் பயிற்சி என்பது மிகுந்த சவாலுக்குரியதாகியுள்ளது. அது மிகவும் யதார்த்தமானதாகவும் இயற்கையானதாகவும் அமைய வேண்டியதாக உள்ளது. அது நுட்பம் சார்ந்ததாக மட்டுமல்லாமல் இதழியல் சார்ந்ததாக வளர்த்தெடுக்கப்பட வேண்டியதாகவுள்ளது. புதிய யுகமானது தொழில்நுட்பம் சார்ந்தது. 

 ரேோபோக்களையும் செயற்கை புத்திகூர்மைகளையும் கூட ஊடகவியல் துறையில் கையாளும் காலம் வெகுதொலைவில் இல்லை. அவை எமக்கு புதிய சவால்களை வழங்குவதாக உள்ளன. இது எங்கே போய் முடியும் என்று கூறமுடியாது. ஊடக நிறுவனங்கள் தமது துறையை நவீனமாகவும் முறையானதாகவும் கையாளும் திறன் கொண்டவையாக மாறவேண்டியுள்ளது.


மாநாடானது ஊடகவியலின் சக்தி என்பதாகவே முடிவுற்றது. எனினும் ஊடவியலின் சக்தி என்பது உண்மையானதா, கற்பனையானதா என்னும் கேள்வி எல்லோர் மத்தியிலும் எழாமல் இல்லை. இது ஒரு தொடர்ச்சியான உரையாடலாக அமையும். ஒரு ஊடகவியலாளர் என்பவர் பார்வையாளராக இருப்பவரல்ல. அவர் கண்காணிப்பாளர் என்பதை உணர வேண்டும் என்னும் வாசகம் இதன்போது உணர்த்தப்பட்டது. 

அத்துடன்  இளம் ஊடகவியலாளர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் மிகவும் அருகியதாகவே உள்ளது.  எதிர்காலத்தில் சிறப்பான தகைமையான ஊடகவியலாளராக வரவேண்டுமானால் ஆக்கத்திறன் மிக்க ஊடகவியலாளராக இருக்க வேண்டும். இளம் ஆண், பெண் ஊடகவியலாளர்களினதும் ஊடகவியல் மாணவர்களினதும் கருத்தாக அமைந்தது "ஏன் நாங்கள் சிரமமானதும் குறைந்த வருமானத்தைத் தருவதுமான இத் தொழிலில் ஈடுபட வேண்டும்?" என்பதாகும். 

இக் கேள்வி இன்று ஊடகவியலை எதை நோக்கி நகர்த்திச் செல்கின்றது என்பது பற்றி ட்சிந்திக்க வேண்டியுள்ளது. ஊடகவியல் சிரமமான துறையாக கருதுவதால் செய்தி சேகரிப்பு பற்றிய தேடல்கள் குறைந்து கேள்விப்படவற்றையும் முகநூல் அலம்பல்களையும் செய்தியாக்குவதிலும் உட்கார்ந்த இடத்தில் கிடைக்கின்ற தகவல்களை புனைவுகளாக சோடித்து எழுதுதல், ஊடக சுதந்திரம் என்னும் போர்வையில் குறைகளை மாத்திரம் அடையாளம் காணுதல் ஊடகத்துறையின் இயல்பாகிவிட்டிருக்கிறது. 

வருமான நிலையில் நின்று பார்க்கும்போது இலஞ்சம் பெறுவதை தவறு என சுட்டிக்காட்டும் ஊடகத்துறை இலஞ்சமின்றி இயங்குகின்றதா? செய்திகளை பிரசுரிக்க கையூட்டல் பெறப்படுகின்றதா? என்பது போன்ற கேள்விகளையும் ஊடகத்துறை சார்ந்தவர்கள் தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்துகொள்ளும் தேவையை உணர்த்துவதாக உள்ளது.  

அரசாங்கத்தையோ அரசியல்வாதிகளையோ நிந்திக்கும் அதே ஊடகம் அவர்களின் அனுசரணைகளை வெவ்வேறு வடிவங்களில் பெற்றுக்கொள்ள   எத்தனித்துக் கொண்டே எவ்வாறு ஊடகவியலின் சக்தியைக் காட்ட முடியும் என்பது கேள்விக்குறியே. பக்கச்சார்பாகவும் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலும் ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் செயற் படுவதால் ஊடக ஒழுக்க விழுமியங்களிலிருந்து விலகிச்செல் கின்றனர் என்பதுவே அர்த்தமாகும். 

எனவேதான் "ஊடகம் என்பது சுதந்திரமானதும் சுயாதீனமானதும் பொறுப்புடையதுமாக மட்டுமல்ல. ஊடக ஒழுக்க விழுமியங்களைக் கொண்டதுமானதாக இல்லாதபோது ஊடகவியலின் சக்தி பற்றிய வினா எழுப்புவதில் அர்த்தமில்லை"  என ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்குமான கனடாவின் மத்திய நிலையத்தின் பணிப்பாளரான டொபி மென்டேலின் கருத்தை மறுதலிக்க முடியாதுள்ளது.

நன்றி வீரகேசரி - அக். 11. 2018

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images