Fairway விருதுக்கு ஐந்து தமிழ் நாவல்கள் - ஜீவா சதாசிவம்
September 17, 2018தெரிவு செய்யப்பட்ட நாவல்கள்.... |
இலங்கையில் இலக்கிய முயற்சிகளை ஊக்குவிக்கின்ற பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பெயார்வே ஹோல்டிங்ஸ் நிறுவனம் 4ஆவது தடவையாக நடத்தவுள்ள பெயார்வே–2018 தேசிய இலக்கிய விருது விழா எதிர்வரும் ஆண்டு நடத்தப்படவுள்ள நிலையில் அவ்விழாவில் விருதுகளைப் பெறுவதற்கு மும்மொழியிலும் தெரிவுசெய்யப்பட்ட விருதாளர்களின் பெயர்ப்பட்டியலானது கடந்தவாரம் கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அறிவிக்கப்பட்டது.
"மும்மொழிகளிலும் தெரிவுசெய்யப்பட்ட நாவல்களுக்கே பணப்பரிசில்களும் விருதும் வழங்கப்படும். ஒவ்வொரு மொழியிலும் முதலாவது இடத்துக்குத் தெரிவு செய்யப்படும் தலைசிறந்த நாவலுக்கு 5 இலட்சம் ரூபா பரிசாக வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து குறும்பட்டியலுக்குத் தெரிவாகும் நாவலுக்கு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசாக வழங்கப்படும்.
முஸ்டின்– இரத்தக்குளியல், பிரமிளா பிரதீபன் –- கட்டுபொல்- , -தோற்றுப்போனவர்கள், நா.யோகேந்திரநாதன்– இடிபடும் கோட்டைகள், - ஆ.மு.சி.வேலழகன் – பனிச்சையடி முன்மாரியும் சட்டக்கிணறும்
ஆகிய நாவல்களே விருதுக்கான குறும்பட்டிலில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட நாவல்கள் பேசிய மையக்கரு, அவற்றின் புனைதிறன், மொழிநடை, அவை வாசகர் மத்தியில் ஏற்படுத்தக் கூடிய தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே மேற்படி குறும்பட்டியலுக்குரிய நாவல்கள் எம்மால் விதந்துரைக்கப்பட்டுள்ளன. மேற்படி ஒழுங்குக்கும் மதிப்பீட்டுக்கும் ஒருவித தொடர்புமில்லை. அது வெறும் பட்டியலே" என்று நடுவர் குழு தெரிவித்திருக்கிறது.
இம்முறை போட்டியில் தமிழ் நாவலை தெரிவு செய்வதற்கான நடுவர்களாக கலாநிதி பவித்ரா கைலாசபதி, விரிவுரையாளர் லரீனா அப்துல் ஹக், மென்பொருள் வடிவமைப்பாளர், சமூகசேவகர், எழுத்தாளர் முரளிதரன் மயூரன் ஆகியோர் செயற்பட்டனர்.
இதேபோல ஆங்கில மொழிமூலம் 4 நாவல்களும் சிங்கள மொழிமூலம் 5 நாவல்களும் குறும்பட்டியலில் தெரிவாகியுள்ளன. 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் வெளிவந்த நாவல்கள் விருதுக்காக விண்ணப்பிக்கப்பட்டன. விண்ணப்பத்துக்கமைய 109 சிங்கள நாவல்களும் 12 தமிழ் நாவல்களும் போட்டிக்கு அனுப்பப்பட்டு 5 நாவல்களே தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்தக் குறும்பட்டியலில் இடம்பெற்ற நாவல்கள் அத்தனையும் மீள்
வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு எதிர்வ ரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காலி மாநகரத்தில் நடைபெறவுள்ள பெயார்வே தேசிய இலக்கிய விருது விழாவில் முதலிடத்துக்குரிய வெற்றி யாளர் அறிவிக்கப்பட்டு பரிசு வழங்கப் படும் என்று விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நன்றி வீரகேசரி - சங்கமம் 08/09/2018
0 comments