உறவென்பது உன்னதமானது - ஜீவா சதாசிவம்
September 15, 2018
இந்திய பேச்சாளர் (Motivation Speaker) பரமன் பச்சைமுத்துவின் 'உறவுகளில் உன்னதம்' என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு நாளை 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிமுதல் பம்பலப்பிட்டி லோறன்ஸ் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற வுள்ளது.
நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஏற்பாட்டில், கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளில் உயர்தரம் பயிலும் மாணவ, மாணவியருக்கும் கொழும்பில் தொழில் புரியும் இளைஞர், யுவதிகளுக்கும் பயனளிக்கும் வகையில் இச்சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலவசமாக இந்நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் 'உறவுகளின் உன்னதம்' உட்பட பலதரப்பட்ட விடயங்களை சிறப்புப் பேச்சாளர் பரமன் பச்சை முத்துவிடம் உரையாடக்கிடைத்தது. இதுபற்றி அவர் பகிர்ந்துகொண்ட விடயங்கள் எமது வாசகர்களுக்காக...
'உறவுகளின் உன்னதம்' எனும் தலைப் பிலான மலர்ச்சி உரையை நாளை ஆற்றவுள் ளீர்கள். இதுபற்றி எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
தாய், தகப்பன், தம்பி, அண்ணன், தங்கை, மனைவி, மகன், மகள் என்று குடும்பத்தில் தொடங்கி அத்தை, மாமன், மச்சான் என்று வளர்ந்து நண்பர்கள், உடன் பணிபுரியும் ஊழியத் தோழர்கள் என ஒரு மனிதனை அடுத்த மனிதனோடு இணைத்து வைக்கும் ஒரு கண்ணுக்குத் தெரியா இணைப்பு ‘உறவு’. மனிதன் அடுத்த மனிதனோடு கொள்ளும் உறவே அவனை கற்கால மனிதனிலிருந்து பண்படுத்தி வளர்த்தெடு த்து பெரும் நாகரீகங்களை உருவாக்கியிருக்கிறது.
உறவு என்பது பால், திணை கடந்து உயிர்களுக்கானது. ஒரு கிளியும் இன்னொரு கிளியும் கொண்டிருக்கும் உறவை பார்த்திருப்பீர்கள். ஒரு புறாவும் இன்னொரு புறாவும் கொண்டிருக்கும் உறவை அறிந்திருப்பீர்கள். யானை தன் குட்டியுடன் கொண்டிருக்கும் உறவை சில காணொளிகளில் கண்டு அசந்து போயிருப்பீர்கள். எல்லா உயிர்களும் தங்கள் இயல்புப்படி உறவுகளை சரியாகக் கையாண்டு நேரிய வாழ்வை கொள்கின்றன.
படைப்பின் உச்சம் என்று சொல்லப்படும் மனிதன் மட்டும் இயல்புக்கு மாறாக உறவுகளை குதறிக் காயப்படுத்திக்கொண்டு வாழ வேண்டியுள்ளது. இங்கே உறவென்பது உன்னதமானது என்று திரும்பத் திரும்ப நினைவுபடுத்தப்பட வேண்டியுள்ளது. ‘என் உறவுகள் எனக்கு முக்கியம்தான்!’ என்று அவன் அறிந்திருந்தாலும் தினசரி வாழ்வில் சில செயல்களை அல்லது நெறிமுறைகளை அவன் கடைப்பிடித்தால் உறவுகளை மலர்ச்சி பெறச்செய்யமுடியும். அது பற்றியதே இந்த மலர்ச்சி உரை ‘உறவுகளில் உன்னதம்.
கையடக்கத் தொலைபேசியை பார்த்தே உறவுகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில் மேற்படி விடயப்பரப்பை எவ்வாறு கொண்டு செல்லவுள்ளீர்கள்?
செல்லிடப்பேசி என்பது தவிர்க்க முடியாததாகிவிட்ட இந்த நிலையில், இந்த நிலையிலிருந்து நாம் செய்ய வேண்டியது என்னவென்று பார்க்க வேண்டும். அதை இந்த நிகழ்ச்சி செய்யும்.
டிஜிட்டலை நம்பி வாழும் தலை முறையினர் தமது சுயமுன் னேற்றத்
திலிருந்து விலகிச்செல்வதாக இருக்கின்றது. அவர்களின் சுயமுன்னேற்றத்துக்கு நீங்கள் எவ்வாறான பதிலைக் கொடுப்பீர்கள்?
டிஜிட்டல் தொழில் நுட்பம் தவறல்ல. ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்ற வள்ளுவப் பேராசானின் வாக்கை நினைவில் கொள்ள வேண்டும். நான் தமிழகத்தில் சிதம்பரத்தையடுத்த மணக்குடியில்(கீழமணக்குடி) வளர்ந்த அந்நாட்களில் ‘இலங்கை வானொலி’யை கேட்டே வளர்ந்தேன்.
எந்நேரமும் எங்கள் ஊரில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் ‘ரேடியோ’ எனப்படும் வானொலி ஒலித்துக்கொண்டேதான் இருக்கும். அதை கேட்டே வளர்ந்தோம். ஒருவேளை அக்கால முதியவர்கள் அன்றைய இளைய தலைமுறையினரைப் பார்த்து ‘எப்ப பாரு ரேடியோ பெட்டிய கட்டிக்கிட்டு கெடக்குது பாரு!’ என்று சொல்லியிருக்கலாம். அன்று வானொலி. இன்று செல்லிடப்பேசி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை. தவிர்க்க முடியாதுதான். ஆனால், இந்த நிலையில் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்க்க முடியும்.
எந்நேரமும் எங்கள் ஊரில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் ‘ரேடியோ’ எனப்படும் வானொலி ஒலித்துக்கொண்டேதான் இருக்கும். அதை கேட்டே வளர்ந்தோம். ஒருவேளை அக்கால முதியவர்கள் அன்றைய இளைய தலைமுறையினரைப் பார்த்து ‘எப்ப பாரு ரேடியோ பெட்டிய கட்டிக்கிட்டு கெடக்குது பாரு!’ என்று சொல்லியிருக்கலாம். அன்று வானொலி. இன்று செல்லிடப்பேசி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை. தவிர்க்க முடியாதுதான். ஆனால், இந்த நிலையில் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்க்க முடியும்.
இயந்திரமாக உழலும் இந்த யுகத்திற்கு Motivation சம்பந்தமாக பேச்சு, உரையாடல்களை மக்கள் மத்தியில் எவ்வாறு சாத்தியப் படுத்தப்ப டக்கூடியதாக இருக்கும்?
இயந்திரம் ஆனாலும் மனிதன் மனிதன்தானே. உள்ளே மனிதம் இருக்கத்தானே செய்கிறது. உட லுக்கு உணவும் மருந்துப் பொருள்களும் உதவி செய் வதைப்போல, உள்ளத்திற்கு உத்வேகம் அளிக்கக் கூடிய சொற்கள் எப்போதும் பயனளிக்கவே செய்கின்றன.
தகவல் தொழில்நுட்ப த்துறையில் விற்பன்னரான நீங்கள் சமூக சேவைக்கான இந்த அரும்பெரும் துறையை எவ்வாறு தெரிவு செய்தீர்கள். அதுபற்றி சற்று விரிவாக எம் முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
பெங்களூரு நகரில் நான் கணிப்பொறி யியலாளனாக பணி புரிந்த காலத்தில் ஒரு அமைப்பின் சமூக சேவைப் பிரிவில் இணைந்திருந்தேன். சமூகத்தில் கீழ்த்தட்டு மக்களின் குழந்தை களுக்கு உதவி செய்யும் அந்த பணியில் பள்ளிக் குழந்தைகளுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஊட்டும் வகுப்புகளை எடுக்கும் வேலை கொடுக்கப் பட்டது எனக்கு. வாரம் செல்லச் செல்ல அடுத்த வகுப்பை எதிர்நோக்கி அந்தக் குழந்தைகள் எனக்காகக் காத்திருந்ததும், நான் அவர்களுக்காக காத்திருந்ததும் நடந்தது. ஏதோ ஒரு வகுப்பில் அவர்களது வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு பெரிய போதையைவிட ஆழமான ஓர் உணர்ச்சியை என்னுள் ஏற்படுத்தியது. (நாங்கள் இவற்றை ‘மலர்ச்சித் தருணங்கள்’ என்று சொல்வது வழக்கம்). ‘இதுதான் நாம் செய்யவேண்டியது!’ என்று ஒரு உந்துதல் உள்ளே வந்தது.
மலர்ச்சி வளர்ச்சியை பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
ஒரு மனிதன் உடல் – உள்ளம் – உணர்ச்சி – உள்ளறிவு – உயிர் என்று 5 சங்கதிகளால் ஆனவன். 5 கட்டமைப்பினால் உருவாக்கப்பட்ட மனிதன் இந்த ஐந்திலும் சரியாக வளர்கிறானா என்றால் இல்லை. சிலருக்கு உடலும் உள்ளமும் நல்ல வளர்ச்சி பெற்று நிற்கின்றன. ஆனால் உணர்ச்சியில் வளராமல் மொட்டாகவே நிற்கிறார்கள், குழந்தையாகவே நிற்கிறார்கள். இது மொத்தத்தையும் பாதித்து விடுகிறது. ஒரு மனிதன் இந்த 5 சங்கதிகளிலும் வளர்ந்து மொட்டாக நிற்காமல் ‘மலர்ச்சி’ பெற வேண்டும். இதை செய்ய உதவுவது ‘மலர்ச்சி’.
மலர்ச்சியின் மூலம் வாழ்வியல் பயிற்சிகளை எடுத்து சக மனிதனுக்கு மலர்ச்சியும் வளர்ச்சியும் தர முயல்கிறோம். ‘வளர்ச்சி’ என்பது சுயமுன்னேற்ற இதழ். இக்கால மனிதன் தன்னை எல்லா முறை களிலும் வளர்த்துக்கொள்ள உதவும் ஒரு தமிழ் மாத இதழ்.
எப்போதும் ஒரு மனிதன் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
இருப்பதை ஏற்றல்! – இதுதான் வழி. இருப்பதை முதலில் ஏற்றுக்கொண்டு அதன் பின்னரே வேறு என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்.
இத்துறையில் உங்களது அனுபவம் மற்றும் இதுவரை காலமும் நீங்கள் இதில் அடைந்த வெற்றிபற்றி எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
மலர்ச்சி என்பது மனித மனங்களோடு, மக்களோடு இணைந்து பயணிப்பது. உன்னதமானது. இங்கே இலங்கையில் நடந்த அனுபவத்தையே சொல்கி
றேனே. சென்ற முறை கொழும்பில் பம்பலப்பிட்டி யில் நடந்த நிகழ்ச்சியின் இறுதியில் ஒரு பெண்மணி மேடைக்கு வந்து, ‘நான் ஒரு இதய நோயாளி. எப்போதும் துயரத்திலும் கவலையிலுமே இருப் பேன். ஆனால், வெகு நாட்களுக்குப் பிறகு உங்க ளால் 2 மணி நேரங்கள் என்னை மறந்து மகிழ்ச்சியாக இருந்தேன். புதுத்தெம்பு வந்துள்ளது. இனி மகிழ்ச்சியாகவே இருப்பேன். நன்றி பரமன்!’ என்று பகிர்ந்து கொண்டார்கள். ‘என்னைப் பற்றி எனக்கு இருந்த தாழ்வுணர்ச்சி போய்விட்டது’ என்று சொல்லி நன்றி சொன்னான் ஒரு தம்பி. நிறைய அனுபவங்கள் உண்டு. இவையெல்லாம் உன்னதம்தானே. இவைதான் என்னைப் போன்றோரை இயங்க வைக்கிறது.
நன்றி வீரகேசரி - சங்கமம் (15/09/2018)
நன்றி வீரகேசரி - சங்கமம் (15/09/2018)
0 comments