வாரிசு அரசியல் - ஜீவா சதாசிவம்
September 08, 2018
வாரிசு அரசியல் உலகில் புதிதாக உருவானதொன்றல்ல. மேலைத்தேய நாடுகள் உட்பட வளர்ந்துவரும் நாடுகளிலும் வாரிசு அரசியல் பல நூற்றாண்டுக் கணக்கில் இருந்தே வருகின்றது. ஆக, ஆச்சரியமான விடயமாக இல்லாதபோதிலும் கடந்த வாரம் தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாக பேசுபொருளான விடயமாக "வாரிசு அரசியல்" இருந்தது. அதனை பற்றியே இவ்வார அலசலும் பேசுகின்றது.
உலக அரசியலை எடுத்துக்கொண்டால், உலகளாவிய ரீதியில் அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொரு தலைவரும் தான் அரசியலிலிருந்து ஓய்வுபெறும் காலத்தில் தன்னுடைய வாரிசுகளில் ஒருவரே இதனைத் தொடர்ச்சியாக கொண்டு செல்வதான கட்டமைப்பை உருவாக்கிகொள்கின்றார்.
தலைவர்களைத் தெரிவு செய்வது மக்களாக இருந்தாலும் கூட பெரும்பாலும் வாரிசைத் தெரிவுசெய்யும் பங்கில் குறிப்பிட்ட மக்கள் பங்கேற்காமல் இடம்பெறுவதுதான் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்துவிடுகின்றது. உலக வல்லரசாகத் திகழும் அமெரிக்காவில் அதன் 41ஆவது ஜனாதிபதியாக ேஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் 1988 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை பதவியிலிருந்தார். இவரின் பிள்ளை ேஜார்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 43ஆவது ஜனாதிபதியாக 2000 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.
ஆனால், இவர்கள் "அரசியல் முதிர்ச்சியுடனேயே" மக்களால் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டவர்களாக இருந்தமையினால் விமர்சனங்களின்றி மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிற்காலத்தில் சிறந்த தலைவர்களாகவும் விளங்கினார்கள். இது ஓர் உதாரணமே.
குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளில் வாரிசுகளை அரசியலுக்குள் கொண்டு அணுகுமுறைகள் சமூகத்தின் மத்தியில் வெறுப்புக்களையும் ஏற்படுத்தி விடுகின்றது.
இந்தியாவில், கலைஞர் கருணாநிதியின் வாரிசுகள் அரசியலில் முழுநேரமும் செயற்படுகின்றனர். அவர்களில் கலைஞரின் மறைவின் பின்னர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. வின் தலைவராக எந்தவொரு எதிர்ப்புமின்றி தற்போது தெரிவு செய்யப்பட்டுவிட்டார். இந்தத் தெரிவு மக்கள் மத்தியிலோ அல்லது கட்சித் தொண்டர்கள் மத்தியிலோ எந்தவொரு விமர்சனத்துக்கும் உட்படவில்லை என்பது யாவரும் அறிந்ததே.
இந்நிலையில் இலங்கையை எடுத்துக்கொண்டால் இதுவரை கால அரசியல் வரலாற்றில் சேனநாயக்க, பண்டாரநாயக்க, பிரேமதாஸ, ராஜபக் ஷ, திஸாநாயக்க ஆகியோர் உட்பட பல அரசியல் தலைவர்களின் வாரிசுகள் பரம்பரையாக அரசியலுக்குள் வந்திருப்பதை அவதானிக்கலாம். பண்டாரநாயக்க அரசியலில் ஆரம்பித்து அவரது வாரிசான சந்திரிகாவின் ஆட்சியில் முடிவடைந்தது. எதிர்காலத்தில் அவர் பிள்ளைகளினூடாகத் தொடரலாம்.
அதுபோல, பிரேமதாஸவின் மகன் சஜித் பிரேமதாஸ, காமினி திஸாநாயக்காவின் மகன் நவீன் திஸாநாயக்க, ராஜபக் ஷவின் மகன் நாமல் மாத்திரமல்லாது சக குடும்பத்தினரும் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடும் பரம்பரை அரசியல் முன்னெடுப்பும் இடம்பெற்று வருவதை அவதானிக்கலாம்.
அது மட்டுமன்றி அரசியலில் இருக்கும் ஏனைய சில அமைச்சர்களும் தங்களது வாரிசுகளையே அடுத்த நிலைக்கு நிறுத்துகின்றனர். இதனை நாம் கண்கூடாக அவதானித்துகொண்டே இருக்கின்றோம். தற்போது பாராளுமன்றத்தில் 12 பெண் உறுப்பினர்களில் 9 பேர் அரசியல்வாதிகளின் உறவுகளாகக் காணப்படுகின்றனர். பாராளுமன்றத்தில் 225 பேரில் 98 பேர் அரசியல் வாரிசுகளாக இருக்கின்றனர்.
தேசிய ரீதியிலும் வடக்கு, கிழக்கு, மலையகம் என சகல மாவட்டங்களிலும் வாரிசு அரசியல் முறை என்பது வளர்ந்து கொண்டே வருகின்றது. இங்கு மலையகத்தில் உள்ள ஒரு சில விடயங்களை சுட்டிக்காட்டுவோமாயின் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உதவிச் செயலாளராக ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார். இளைஞரான இவர் தெரிவு செய்யப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாயினும் இதனால் சில சலசலப்புகள் ஏற்பட்டமை பற்றியும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளராக அமரர் சந்திரசேகரனின் மகள் அனுஷியா சந்திரசேகரன் திடீரென தெரிவுசெய்யப்பட்ட தருணத்தில் கட்சிக்குள் இத்தகைய சலசலப்புக்கள் வந்தன. இளைஞர்களாக, துடிப்பாக இருக்கின்றார்கள். தமது வாரிசுகளை அரசியலுக்குள் கொண்டுவருவது வரவேற்கத்தக்க விடயமாயினும் அவ்வாறு உள்வாங்கப்படுகின்றவர்களுக்கு எந்தளவு அரசியல் அனுபவம் இருக்கின்றது என்பது பற்றிய தெளிவு அவசியம். பரம்பரை பரம்பரையாக இருக்கின்றோம் என்பதற்காக திடீரென்று ஒருவரைக் கொண்டு வந்து நிறுத்தும் போது கட்சியிலோ அரசியலிலோ மாற்றம் ஏற்படுத்தப்பட்டுவிடுமா?
இ.தொ.கா.வின் செந்தில் தொண்டமான் மற்றும் உதவிச் செயலாளர் ஜீவன் ஆகியோர் மாத்திரம் அரசியல் வாரிசுகள் இல்லை. பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அனுஷா சிவராஜாவும் வாரிசு வழி வந்தவரே. தொண்டமான் குடும்ப உறவினரான இவரது தந்தை அண்ணாமலை இதேபோன்றே திடீரென 1965 ஆம் ஆண்டளவில் அரசியலுக்கும் பாராளுமன்றத்துக்கும் நியமிக்கப்பட்டார்.
அவரது மரணத்துக்குப்பின் அவரது மகன் கதிரேசனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவர் மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் இருந்தார். இப்போது ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.
மறுபுறத்தில் தொண்டமான் குடும்பத்திலிருந்து சௌமியமூர்த்தி தொண்டமான் உயிருடன் இருக்கும்போதே அவரது மகன் இராமநாதன் தொண்டமான் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு அவர் மத்திய மாகாண கல்வி அமைச்சராகவும் செயற்பட்டார். அவருக்குப்பின் அவரது பேரனான ஆறுமுகன் தொண்டமானையும் அறிமுகம் செய்தார்.
ஆறுமுகன் அவரது சகோதரி மகன் செந்தில் தொண்டமானை அறிமுகம் செய்து அவர் இப்போது ஊவா மாகாண அமைச்சராகவும் உள்ளார். இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஜீவன் தொண்டமான் ஐந்தாம் தலைமுறை குடும்ப உறுப்பினராக கட்சியில் பதவி பெற்றுள்ளார்.
இப்போதைய நிலையில் தலைவராக ஆறுமுகன் தொண்டமான், உதவிச் செயலாளராக அவரது மகன், பொதுச் செயலாளராக அவரது பரம்பரை உறவினர் என ஒருசேர உயர்பீடத்தில் இருக்கும்போது கட்சிக்காகவே காலங்காலமாக உழைத்து அதனையே நினைத்து உருகி தமது காலத்தை அதற்குள்ளேயே செலவளித்த கட்சியின் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? அவர்கள் எப்போது கட்சியின் தலைவராக அல்லது செயலாளராக வருவது என்பது மிகப்பெரிய கேள்வி. இதற்கு மத்தியில் "ஜீவனைக் கொண்டுவந்ததால் என்ன?" என்னும் கேள்வியை தலைவர் ஆறுமுகன் எழுப்பியுள்ளார். அவரிடம் மீண்டும் சில கேள்விகளை முன்வைக்க வேண்டியுள்ளது.
75 ஆண்டுகால இ.தொ.கா. வரலாற்றில் பெரும்பாலான காலத்தை தன்வசம் வைத்திருந்த பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் மக்களுக்கு ஆற்றிய பணியை, அவர் காத்த பெருமையை, அவருக்கு பின்னர் இ.தொ.கா. வால் ஆற்றுவதற்கோ தக்கவைக்கவோ முடிந்துள்ளதா? அவரது உரைகள் போன்று பாராளுமன்றத்தில் உரைகளைக் கேட்க முடிகிறதா? அல்லது முகத்தையேனும் காண முடிகிறதா? அடுத்த தலைமுறைக்கும் இந் நிலைதான் தொடரத்தான் வேண்டுமா?
நன்றி வீரகேசரி - 06.09.2018
0 comments