இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த முக்கியமான எழுச்சிகளோடு மேலெழுந்த அச்சு ஊடகமே வீரகேசரி - ஜீவா சதாசிவம்

September 10, 2018


இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த முக்கியமான எழுச்சிகளோடு மேலெழுந்த அச்சு ஊடகமே வீரகேசரி. இந்திய விடுதலை இயக்கம், இலங்கைத் தேசிய இயக்கம், தமிழ்த் தேசிய இயக்கம், காலனித்துவச் சூழலில் விசை கொண்ட தமிழ் மறுமலர்ச்சி ஆகியவற்றோடு தோற்றம் பெற்ற இதழ்களுள் வீரகேசரி முக்கியமானது.  “எங்கள் பத்திரிகை” என்று கூறும் மரபு தமிழ்ச் சூழலிலே வளர்ச்சியடைந்தது. “எங்கள் பத்திரிகை” “எங்கடை பேப்பர்” முதலாம் சொல்லாடல்களே வீரகேசரி தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கி வரும் பங்களிப்பைக் குறியீட்டுப்படுத்தும் என்கிறார் பேராசிரியர் சபா ஜெயராசா. 

வீரகேசரி பத்திரிகை 89ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு சமகால கல்வி, மொழியியல் துறையில் நாட்டம் கொண்ட ஊடகங்களுடன் சிறந்த ஊடாட்டம் கொண்டுள்ள  பேராசிரியர் சபா ஜெயராசா வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் வழங்கிய செவ்வியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையில் தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை அவர்களுடைய சமூகக் கட்டமைப்பில் ஊடகங்கள் வகித்த - வகிக்கும் பங்கு எத்தகையது? இது குறித்த உங்களுடைய பார்வை என்ன?
ஊடகம் என்பது சமூக வாழ்வின் குறியீடு, சமூக மாற்றத்தின் குறியீடு. தொடர்பாடல் சமூக வாழ்வின் அச்சாணியாகின்றது. தொடர்பாடலை முன்னெடுக்கும் சாதனமே ஊடகம். ஐரோப்பாவில் நிகழ்ந்த அச்சுப் புரட்சியோடு அச்சு ஊடகம் எழுகோலம் பெற்றது. அச்சுப் பொறி “அச்சு வாகனம்” என்றே ஆறுமுகநாவலரால் அழைக்கப்பட்டது. கருத்தைச் சுமந்து செல்வதால் அது வாகனமாயிற்று. சமூக அடுக்கமைவின் வளர்ச்சியோடு அதன் இயல்புக்கு ஏற்றவாறு ஊடகச் செயற்பாடுகளும் மேற்கிளம்பின. தொடக்க காலத்திலிருந்தே தமிழ் ஊடகங்கள் பன்மைத்துவ இயல்புகளைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சமூகமே பன்மை இயல்புகளின் தளமாகின்றது.

பொதுவாக தமிழ் ஊடகங்களின் பங்களிப் பைக் குறிப்பிட்டிருந்தீர்கள். இதில் ஆரம்பம் முதல் வீரகேசரி வழங்கி வந்திருக்கும் பங்க ளிப்பு குறித்த உங்களுடைய பார்வை என்ன?
 இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த முக்கியமான எழுச்சிகளோடு மேலெழுந்த அச்சு ஊடகமே வீரகேசரி. இந்திய விடுதலை இயக்கம், இலங்கைத் தேசிய இயக்கம், தமிழ்த் தேசிய இயக்கம், காலனித்துவச் சூழலில் விசை கொண்ட தமிழ் மறுமலர்ச்சி ஆகியவற்றோடு தோற்றம் பெற்ற இதழ்களுள் வீரகேசரி முக்கியமானது. சமூக மாற்றத்துக்கான மேற்கூறிய இயக்கங்களை உணர்வுபூர்வமான மொழிக் கோலங்களால் முன்னெடுத்து வந்தமையால் வீரகேசரியை “எங்கள் பத்திரிகை” என்று கூறும் மரபு தமிழ் சூழலிலே வளர்ச்சியடைந்தது. “எங்கள் பத்திரிகை” “எங்கடை பேப்பர்” முதலாம் சொல்லாடல்களே வீரகேசரி தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கிவரும் பங்களிப்பைக் குறியீட்டுப்படுத்தும்.

இலங்கை சுதந்திரமடைந்தது முதல் சிறுபான்மையினங்கள் ஒடுக்குமுறைக்குள்ளாகி வந்திருக்கின்றன. காலத்துக்குக் காலம் வெவ்வேறு விதமான போராட்டங்களை சிறுபான்மையினர் நடத்தி வந்துள்ளார்கள். இதில் அவர்களை வழிநடத்துவதிலும், அவர்களுடைய குரலை வெளிப்படுத் துவதிலும் வீரகேசரி வழங்கியுள்ள பங்களிப்பை எப்படிப் பார்க் கின்றீர்கள்?

சுதந்திரத்துக்குப் பின்னர் “வாக்குத் திரட்டலோடு” இணைந்த ஆட்சி முறையில் பெரும்பான்மை இனத்தவரது வாக்கு வங்கியை அபகரித்துக் கொள்வதற்கு எதிர்மறையான இன உணர்வையும் இனத்துவேஷத்தையும் தூண்டும் செயற்பாடுகள் விதைக்கப்பட்டன. ஒன்றுபட்டு வாழும் தேசிய உணர்வு அறைகூவலுக்கு உள்ளானது. படிப்படியாக இனத்துவக் கொதிநிலை வளர்ச்சியடையத் தொடங்கியது. அகிம்சை நிலை, பேச்சுவார்த்தை நிலை, விட்டுக் கொடுப்பு நிலை என்ற வகையில் போராட்டங்கள் நிகழ்ந்து முடிவில்லா விரக்தியைத் தோற்றுவித்தன. 

அந்நிலையில், வீரகேசரியானது செய்திகளைக் கையளிக்கும் செயற்பாடுகளோடு மட்டும் நிற்கவில்லை. அதற்கும் மேலான பணிகளை முன்னெடுத்தது. அந்நிலையில் வீரகேசரியில் வெளிவந்த ஆசிரியர் தலையங்க முயற்சிகள் விதந்து குறிப்பிடப்பட வேண்டியுள்ளன. நிதானச் சிந்தனை, புறவயமான அணுகுமுறை, நீதியை வலியுறுத்துதல், சிறுபான்மை இனங்களுக்கு கிடைக்க வேண்டிய வகிபாகத்தை வலியுறுத்துதல், தேசிய நலனில் அக்கறை, ஒடுக்குமுறைகளைத் தகர்த்தல் முதலியவற்றை ஆசிரிய உரையினாலும் வளமான கட்டுரைகளாலும் அறிவிப்புச் செய்தல் வாயிலாகவும் 'வீரகேசரி' வழங்கியது. அந்நிலையில் அரச விளம்பரங்கள் வீரகேசரிக்குக் கிடைக்காத நிலையிலும், சிறுபான்மையிரைப் பாதுகாக்கும் இலட்சியத்தை வீரகேசரி கைவிடவில்லை.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தமிழ் ஊடகங்கள் குறிப்பாக வீரகேசரி எடுத்த  நிலைப்பாடு குறித்த உங்களது நிலைப்பாடு என்ன?
 தமிழ் உரிமைப் போராட்டத்தில் வீரகேசரின் நிலைப்பாடு தனித்துவமானது. ஒடுக்குமுறைக்கு எதிரான குரலையும் உணர்வுகளையும் வழங்கும் இதழாக இயங்கியதோடு மட்டும் நின்றுவிடாது, உணர்வு நிலையில் விரக்திடைந்திருந்த சிறுபான்மை மக்களுக்கு உளவியல் நிலைப்பட்டு வலுவூட்டலை முன்னெடுத்தலை வீரகேசரி தளராது மேற்கொண்டு வந்தது. வீரகேசரி உருவாக்கிய “உளவியற் பலம்” கலங்கிய நிலையில் இருந்தோருக்கு நேர்நிலைக் கருத்தேற்ற வலுவாக அமைந்தது.

அரசியல், சமூக விவகாரங்களுக்கு அப்பால் ஈழத்து கலை-இலக்கிய வளர்ச்சியில் வீரகேசரிக்கு தனித்துவமான ஓர் இடம் இருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்களா? அவ்வாறாயின் எப்படி?
அரசியல் நிலைகளுக்கு அப்பால் வீரகேசரி மேற்கொண்டுவரும் கலை, இலக்கியப் பணிகளும், கருத்தாடற்களம் அமைந்தமையும் முக்கியமானவை. தேசிய இலக்கியம், முற்போக்கு இலக்கியம், மண்வாசனை,  போராட்ட இலக்கியம், பெண்ணிய இலக்கியம் முதலாம் கருத்து வினைப்பாடுகளுக்கு வளமான களமும், தளமுமாக விளங்கியது வீரகேசரி. ஈழத்து நாவல்களை அச்சுவாகனம் ஏற்றியமை வீரகேசரி மேற்கொண்ட பிறிதொரு சாதனை. 'ஈழத்து இலக்கியம்' என்ற அடையாளம் வலுப்பெறுவதற்குரிய ஆக்கங்களை வெளியிட்டமையும், எழுத்தாளர்களை மேலெழச் செய்தமையும் நிலைபேறு கொண்ட வரலாற்றுப் பணிகள்.

அச்சு ஊடகங்களுக்குப் போட்டியாக முதலில் வானொலி, தொலைக்காட்சி என்பன நோக்கப்பட்டன. இப்போது இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் நோக்கப்படுகின்றன. டிஜிட்டல் யுகம் என்று பேசப்படுகின்றது. இந்தப் போட்டிகளுக்கு மத்தியில் அச்சு ஊடகங்களின் எதிர்காலம் சவால் மிகுந்ததாக இருக்கும் என்ற கருத்து ஒன்றுள்ளது. உங்கள் பார்வை என்ன?
 தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய ஊடகங்களைத் தோற்றுவிப்பதோடு பழைய ஊடகங்களுக்கு வலுவூட்டியும் வந்துள்ளது. சினிமாவின் வளர்ச்சியோடு நாடகமும், கூத்தும் அழிந்துவிடும் என்று கருதினார்கள். மாறாக அவை மீள் எழுச்சி கொள்ளத் தொடங்கியுள்ளன. தொலைக்காட்சியின் வளர்ச்சி, வானொலியை அழித்து விடவில்லை. பண்பலை ஒலிபரப்புடன் வானொலி மீட்டுருவாக்கம் செய்துள்ளது. இலத்திரன் ஊடகங்களின் வளர்ச்சி அச்சுவழி ஊடகங்களை அழித்து விடவில்லை. சமகாலம் அச்சுவழி நூல்கள் பெருக்கெடுக்கும் காலமாக மாற்றம் பெற்று வருகின்றது. அச்சு வழியான புதிய நாள் இதழ்கள் தோற்றம் பெற்று வருதலை இலங்கையிலே காணக்கூடியதாகவுள்ளது. கடதாசி வழியான செய்தி வாசிப்பு, கணினித் திரை வழியான வாசிப்பைக் காட்டிலும் கூடுதலான உளவியற் சுகத்தைத் தருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இந்தச் சவாலை அச்சு ஊடகங்கள் எவ்வாறு எதிர்கொள்ளலாம்?
 அச்சு ஊடகங்கள் ஏற்கனவே தம்மை வளப்படுத்திக் கொள்ளத் தொடங்கி விட்டன. செய்தி உடனுக்குடன் கைகளுக்கு வந்துவிடுவதால் வளமான மாற்றுச் செயற்பாடுகளை அச்சு இதழ்கள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. சமகாலம் புனைகதை சாரா எழுத்துக்களின் காலம் எனப்படும் கட்டுரைகள், செய்தி விமர்சனங்கள், திறனாய்வுகள் முதலியவற்றுக்கு ஒப்பீட்டளவில் அச்சு ஊடகங்களையே நாடிச் செல்ல வேண்டியுள்ளது. 


ஏனைய ஊடகங்களுடன் ஒப்பிடும் போது அச்சு ஊடகங்களின் பலமாக நீங்கள் எதனைக் குறிப்பிடுவீர்கள்?
அச்சு ஊடகங்களின் பலம், அவற்றில் வெளிவரும் பதிலீடில்லா ஆக்கங்கள், அச்சு ஊடகங்கள் வாசிப்பு உளவியலில் நெகிழ்ச்சித் தன்மையுடன் கலந்துள்ளன. கடதாசியுடன் வாழ்தலும் கற்றலும் கைவிடப்பட முடியாத நிலையிலேதான் உலகம் நீட்சி கொண்டு வருகின்றது.

சமூகத்தின் கருத்து உருவாக்கத்திலோ அல்லது  ஆரோக்கியமான  இலக்கிய  வளர்ச்சி யைப்பொறுத்த வரையிலோ அச்சு ஊடகங்களை விட மற்றைய ஊடகங்களால் அதிகளவு பங்களிப்பை வழங்கக் கூடியதாக இருக்குமா?

கணினித் திரை வழியான வாசிப்பும் கற்றலும் இன்னமும் சமூகத்தின் அடிநிலை மக்களைச் சென்றடையவில்லை. வசதி படைத்தவர்களை அடிப்படையாக வைத்து நவீன ஊடகச் செயற்பாடுகளைப் பொதுமையாக்கம் செய்வது, விளிம்பு நிலையினரைப் புறக்கணிக்கும் மேலாதிக்கச் செயற்பாடா 
கும். விளிம்பு நிலையினரை மேலெழச் செய்வதிலும், அறிவொளி ஊட்டுவதிலும் ஒளிபடைத்த சமூகமாக உருவாக்குவதிலும் சாமானியர்களின் சாதனமாகிய அச்சு ஊடகங்களே ஒப்பீட்டளவில் வினைத்திறன் மிக்கவை.

நன்றி - வீரகேசரி 06.08.2018

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images