நடனத்துறையில் மூன்று தசாப்தத்தை கடந்துள்ள ''கலைச்செல்வி ' நிர்மலா ஜோன்' - ஜீவா சதாசிவம்
September 01, 2018
3 தசாப்தத்தைக் கடந்து ஒரு நிர்மலாஞ்சலி நாட்டிய பள்ளியை நடத்திவரும் நீங்கள் இதுவரையில் எதிர்கொண்ட சவால்கள் எவ்வாறானது என்பது பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
பல சவால்கள் இன்னல்கள் என்று அனுபவித்துள்ளேன். ஆனால் என்னுடைய தணியாத தாகம், - விடாமுயற்சி – நாட்டியத்தின்மேல் உள்ள பிரியம், - என்னுள் இருக்கும் இனம்புரியாத சக்தி இவையெல்லாம் சேர்ந்து எதுநேர்ந்தாலும் முகம்கொடுத்து மன சக்தியுடன் எனது நடனப் பயணத்தை தொடர ஒருவிதத்தில் இந்த சவால்கள் என்னை நடனத்துறையில் முன்னோக்கிச் செல்ல வழியமைப்பதாகவே அமைகின்றது என்றுகூட சொல்லலாம்.
இதுவரையில் பல வகையான நாட்டிய நாடகங்களை நடத்தி வந்துள்ளீர்கள். அவற்றுள் உங்கள் மனதை ஈர்த்த நிகழ்வுகளைப் பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
ஆம், - இதுவரையில் 25 நாட்டிய நாடகங்கள் - அதாவது தனி - குழு என்று மேடையேற்றியுள்ளேன். என்னுடைய முதல் படைப்பு 1985இல் 'தேவ கற்பனைகள்'. பாரம்பரிய இந்துமதத் தத்துவங்களைத் தெளிவுபடுத்த – தெய்வங்களைத் துதிக்க கையாளப்பட்ட கலைவடிவமே பரதநாட்டியம். இருந்தும் இதைக்கொண்டு எதையுமே உணர்த்த முடியும் என்பதால் கத்தோலிக்க மத சம்பவங்களையும் தத்துவங்களையும் பரதநாட்டியத்தில் அமைக்கத் தொடங்கினேன்.
இங்கு எனது தந்தை பாடல்கள் எழுதி ஊக்குவித்தார். தாயார் உடைகள் அமைத்தும் உடுத்திவிட்டும் உறுதுணையாக இருந்தார். இந்த முயற்சியில் எழுந்தவைகள் பல. தொடர்ந்தும் சமூக நாட்டிய நாடகங்கள், -புராண இதிகாச சம்பவங்கள், - ஆங்கில நாவல்களைத் தழுவிய நாட்டிய நாடகங்கள், - சிறுவர் கதைகள்... இப்படி பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.
ஒவ்வொரு படைப்பும் ஒரு பிரசவம்போல்தான். இதில் நான் எதையென்று பிரித்துச் சொல்வது? ஓவ்வொரு தடவையும் புது படைப்பை உருவாக்கும்போது மாணவருடன் சேர்ந்து அவர்களுடன் ஒன்றி கதையை விளக்கி தகுந்த பாத்திரங்களை தேர்ந்தெடுத்து அவர்களை வழிநடாத்தி நடனப் பயிற்சியில் ஈடுபடுத்துவதே அலாதியான சாதனைதான்
டிஜிட்டல் யுகத்தில் பரதத்தின் போக்கு எவ்வாறுள்ளது?
நல்ல கேள்வி – வீதிகளிலும் கோவில்களிலும் தீப்பந்த ஒளியிலும் விளக்கொளியிலும் நடந்த நடனம் பின் மேடையில் மின் ஒளியுடன் ஆரம்பித்து தற்போது விஞ்ஞான வளர்ச்சியுடன் பலவித வித்தைகளை மேடையில் அமைத்துத்தர வல்ல ஒளிநிபுணர்களால் மேடைகள் அமைப்பதையும் கண்டுள்ளோம். இப்போது வீடியோ வோல் மூலம் பின்புறக் காட்சிகளை அமைத்துக் காட்டுகிறார்கள்.
இவ்வாறான காட்சிகள் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடகக் கம்பனிகளிலிருந்து இங்கு கொண்டுவரும் நாட்டிய நாடகங்களுக்கு கொழும்பிலும் சில விற்பன்னர்களால் கையாளப்படுவதை நான் காண்கின்றேன். ஏன் - நான்கூட தேவையின் நிமித்தம் இதைக்கையாண்டுள்ளேன். இது பார்வையாளர்களுக்கு மகிழ்வைத்தர வல்லதுதான். ஆனால் இவ்வித்தைகளின் மூலம் எமது நடன ஆக்கத்தின் தரம் குன்றாது பாதுகாக்க வேண்டியது ஆசானின் கடமையாகும்.
இவ்வாறான காட்சிகள் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடகக் கம்பனிகளிலிருந்து இங்கு கொண்டுவரும் நாட்டிய நாடகங்களுக்கு கொழும்பிலும் சில விற்பன்னர்களால் கையாளப்படுவதை நான் காண்கின்றேன். ஏன் - நான்கூட தேவையின் நிமித்தம் இதைக்கையாண்டுள்ளேன். இது பார்வையாளர்களுக்கு மகிழ்வைத்தர வல்லதுதான். ஆனால் இவ்வித்தைகளின் மூலம் எமது நடன ஆக்கத்தின் தரம் குன்றாது பாதுகாக்க வேண்டியது ஆசானின் கடமையாகும்.
பரதம் கற்பவர்களின் ஈடுபாடு தற்போது வெகு குறைவாகக் குறைந்து வருகின்றது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
உண்மைதான். ஆனாலும் இந்த தெய்வீகக் கலை எல்லோருக்கும் கிட்டும் ஒன்றல்ல. அப்படியே 100 பேர் கற்றாலும் அதில் இருவரோ மூவரோ மட்டுமே ஒளிவிட்டு பிரகாசிக்கிறார்கள்.
பாடசாலை / உயர்கல்வி மட்டத்தில் பரதக்கல்விக்கான முக்கியத்துவம் எவ்வாறிருக்கின்றது என்பது பற்றிக் கூற முடியுமா?
ஆம், - பாடசாலைகளில் பரதக்கல்வி சாதாரண, உயர்தரம் வரை இருந்தபோதும் முக்கியமாக கொழும்பைப் பொறுத்தவரை இதை உயர்தரம் வரை தொடர்பவர்கள் மிகக்குறைவு என்றே கூறவேண்டும். ஆனால் வடமாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம் இப்பிரதேசங்களில் கூடுதலான மாணவர்கள் பரதக்கலையைக் கற்று தேர்ந்து பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினைப் பெறுகிறார்கள். இந்தியாவைப் போலவே இங்கும் பரதநாட்டியம் நிகரில்லா அந்தஸ்துடன் உலா வருகிறது. வாழ்க நடனக்கலை. வாழ்க நடனப் பிரியர்களே. வாழ்க நடன ஆசான்களே.
32ஆவது ஆண்டை இம்முறை கொண்டாடவுள்ள நீங்கள்... புதிதாக எவ்வாறான நிகழ்வை வழங்கவுள்ளீர்கள். ?
ஓம் புதிதல்ல – பழையவை. மலரும் நினைவுகள். இத்தனை ஆண்டு காலமாக அமைத்த நடனங்களுள் மனதை ஈர்த்த சாஸ்திரிய கிராமிய நடனங்களுடன் 1994இல் மேடையேற்றி பலரின் பாராட்டைப் பெற்று 1999ஆம் ஆண்டில் திரு வி. பி. தனஞ்சயன் - சாந்தா தனஞ்சயன் முன் மேடையேறி பாராட்டைப்பெற்ற – என் மனதை ஈர்த்த – தற்போது நான்காவது தடவையாக மேடையேறும் 'வெண்பனியாளும் ஏழு குள்ளர்களும்' எனும் - சிறுவர் கதையைத் தழுவிய அற்புதமான ஓர் படைப்பை நாட்டிய நாடகமாகத் தரவுள்ளார்கள் நிர்மலாஞ்சலி நடனக் கலையக மாணவர்கள். அதில் விசேடம் என்னவென்றால் 1994இல் மானாக பாத்திரம் ஏற்றவர் தொடர்ந்து வெண்பனியாளாகவும் அதைத்தொடர்ந்து இம்முறை பொல்லாத சித்தியாகவும் நடன விருந்தளிக்கிறார்.
ஏன்? மொழிபெயர்ப்பு நாடகத்தை நாட்டிய நாடகமாக எடுத்துள்ளீர்கள்? இதில் எத்தனை பேர் பங்குபற்றவுள்ளனர். இது பற்றிய விரிவான விளக்கம் ஒன்றை தர முடியுமா?
'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் மொழிபெயர்த்தல் வேண்டும் என்றார் பாரதியார். நான் பாரதிமேல் மிகுந்த பக்தி கொண்டவள். ஆகவேதான் அண்மையில் 'பாரதிக்கு பரதாஞ்சலி' என்று விழாவொன்றும் எடுத்துள்ளேன். இது கட்டுக்கதையாக இருப்பினும் சிறந்த தத்துவம் கொண்டது. பேராசை பெரு நட்டம் என்பதனை காட்டுகிறது.
இத்தகைய கதைகள் சிறார்களுக்கு அறிவு ஊட்டுவதுடன் அகமகிழ்ச்சியையும் கொடுக்கிறது. வரண்டுபோன இன்றைய உலகத்திற்கு – மிருகத்தனம் ஓங்கி வளரும் மக்கள் உள்ளங்களுக்கு – ஆத்தி சூடியும் திருக்குறளும் காணாதவர்க்கு இத்தகைய நிகழ்வுகள் கண்டிப்பாக வேண்டும். இதில் 36 பெண்கள் பங்குபற்றுகின்றனர்.
இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள கலாலயாவின் ஆண்டு விழாவில் 'பாஞ்சாலியின் சபதம்' விசேட நாட்டிய நாடகம் ஒன்றை வழங்கவுள்ளதாக அறிந்தோம். இது பற்றி எம்முடன் பகிர்ந்து கொள்வீர்களா?
ஆம், - இசை நடனப் பள்ளி கலாலயா தனது 70ஆவது ஆண்டு நிறைவினை இவ்வருடம் கொண்டாடவுள்ளது. இப்பள்ளியின் ஆசிரியராக பணியாற்றிவரும் என்னிடம் 'சிவகாமியின் சபதம்' கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியின் கதையை ஓர் நாட்டிய நாடகமாக அமைத்துத் தர முடியுமா என்று இலங்கை தமிழ் மாதர் சங்கம் என்னைக் கேட்டபோது நான் அவர்களின் வேண்டுதலை ஏற்றுக்கொண்டேன். காரணம் என் தந்தை இருக்கிறார் - அவர் பிரதியை எழுதுவார் என்ற நம்பிக்கையில் பிரதி எழுதப்பட்டது. அருணந்தி ஆரூரன் சிறப்பாக இசை அமைத்துள்ளார். எனது நடனப்பள்ளி மாணவர்களுடன் நடன விற்பன்னர்கள் சிலரையும் சேர்த்து நானும் அவர்களுடன் இணைந்து ஓர் அளப்பரிய அழியா படைப்பை செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி பிஷப்ஸ் கல்லூரி அரங்கில் தரவுள்ளோம்.
இந்த நாட்டிய நாடகத்தில் நீங்கள் கையாண்டுள்ள நவீன யுக்தி எத்தகையது?
எனது ஆக்கங்களில் நான் அதிகமாக உண்மை உருவங்களையோ காட்சிகளையோ புகுத்தி சம்பவங்களை நம்பவைக்க முயலுவதில்லை. நவீன உலகத்திற்கு பின்னணி தேவையா நம்புவதற்கு? மனிதர்களையே காட்சிப் பொருள்களாகக் கொண்டு ஒலி, ஒளி நுட்பங்களால் எண்ணத் தாக்கங்களை ஏற்படுத்துகிறேன்
இக்கதையின் சுருக்கக்குறிப்பு மற்றும் இதற்கு உதவியவர்கள், இந்நாட்டிய நாடகத்தில் நடிப்பவர்கள் பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
இது 7ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் அரசியல் பிணக்குகளின் மத்தியில் நடந்த ஓர் காதல் ஓவியம். இதற்கு உதவுபவர்கள் எழுத்தாளர்,- இலங்கை மாதர் தமிழ் சங்கத்தவர்கள் இன்னும் பலர். நாடகத்தில் சில முக்கிய ஆண் கதாபாத்திரங்களுக்காக யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலுமாக தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்ந்தெடுத்துள்ளேன்.
இத்துறையில் தொடர்ச்சியாக புதுமைகளை நீங்கள் படைப்பதற்கு உங்களுக்கு இருக்கும் உந்து சக்தி யார்? இவ்வாறான படைப்புக்களை வழங்க வேண்டுமென்று எண்ணுவதற்கான காரணம் என்ன?
தம்பிமுத்துப் புலவர் - சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளார் அவர்களின் வழியில் உதித்த எனது தந்தை திரு ஐ.டி பெனடிக்ட். இவர் என்னை பாடசாலைக் காலத்தில் நடைபெறும் பாடசாலைகளுக்கிடையிலான பேச்சுப் போட்டி களிலும் தனி நடிப்புகளிலும் பங்குபெறச்செய்து எப்போதும் நான் முதல் இடத்தைப்பெற என்னை வழிநடாத்திய என் ஆசான்.
எப்பொழுதும் சமூக புராண சாஸ்திரிய சிறந்த வேற்றுமொழிக் கதைகளை தமிழில் மொழிபெயர்த்து நடனங்களாக அளிப்பதில் அலாதியான மனமகிழ்ச்சி அடைகிறேன். உன்னதமான எமது பரதக்கலை மூலம் மனதில் பதியக்கூடிய நற்செய்திகளைத் தரவல்ல சிறப்புமிக்க நாட்டிய நாடகங்களை நெறியாழ்கை செய்து மேடையேற்றுவதில் மன நிறைவு காண்கிறேன்.
எதிர்காலத்தில் உங்களது படைப்புக்கள் எவ்வாறா னதாக இருக்கும்?
சமூகத்திற்கு நல்ல அறிவு புகட்டக்கூடிய – தெளிவு தர வல்ல தரமான படைப்புகளை உருவாக்க என் உள்ளம் ஆவல் கொண் டுள்ளது.
நன்றி வீரகேசரி - சங்கமம் (01/09/2018/)
0 comments