தொடர் தோல்வியில் தொடரும் ஒப்பந்தம் - ஜீவா சதாசிவம்

August 31, 2018



ஒவ்வொரு நினைவு தினங்களும் சில விடயங்களை அவ்வப்போது நினைவுபடுத்துவதைப்போலவே, இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை வரும் கூட்டு ஒப்பந்தமும். தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில்  2016ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதமளவில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களை கடந்து அதனை மீண்டும் மேலும் இரண்டு வருடங்களுக்கு புதுப்பிப்பதற்கான  முதலாவது சந்திப்பும் இரண்டு வாரங்களுக்கு முன்பு இடம்பெற்று எவ்வித இணக்கப்பாடின்றி நிறைவடைந்தது. 

இந்த இணக்கப்பாடு இல்லாத விடயம் புதுமையானதல்ல என்பது யாவரும் அறிந்ததே. ஒவ்வொரு இரண்டு வருடத்துக்கு ஒருமுறையிலான சந்திப்பும் 'இணக்கப்பாடு' இன்றியே முடிவடைந்து திடீரென 'இணக்கப்பாடு' என்ற நிலையில் 'குறைந்தளவிலான தொகை அதிகரிக்கப்பட்டு' இறுதித் தீர்மானம் அறிவிக்கப்பட்டுவிடுவது நகைச்சுவையானதாகவே இருப்பது வழக்கம்.
உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி என்பதை பிரதான காரணமாகக் கொண்டு இதர பல காரணங்கள் சொல்லப்பட்டு தொழிலாளர்களின் எதிர்பார்ப்பில், பெரும் ஏமாற்றத்தையே கொடுக்கும் ஒப்பந்தமாக, பேச்சுவார்த்தை தோல்வியில் அடைந்து சம்பந்தமே இல்லாத ஒரு தொகை தீர்மானிப்பது வழமையாகிவிட்டது. 

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்காக மேற்கொள்ளப்படும் இந்த கூட்டு ஒப்பந்தம்  இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன்களோடு தொடர்புடையதாகும். ஒரு வகையில் அது முழு மலையக மக்களினது வாழ்வியலைத் தீர்மானிக்கும் அம்சமாக உள்ளது. இது  தொழிற்சங்கம் மற்றும் அரசியல் ரீதியில் மலையகத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.அத்தோடு தேசிய ரீதியாகவும் முக்கியத்துவம் பெறும் விடயமாக மாறியுள்ளது. 

  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக மிக நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகின்றது.   இது தொடர்பில் அந்தந்த காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களும், பணிப் பகிஷ்கரிப்பும் இடம்பெற்று வந்துள்ளன. அந்த வகையில் சமகாலத்தில் தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை தீர்மானிப்பதற்கான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதையும் அதற்கு முன்னதான ஒப்பந்தங்கள் பற்றியதுமான ஓர் அலசலாகவே இந்தவார "அலசல்" அமைகிறது. 

150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்டக் கைத்தொழிலில் அகப்பட்டு அல்லல் படும் சமூகமாக மலையகப் பெருந்தோட்டத்துறை சமூகம் உள்ளது. ஆரம்பத்தில் சம்பளத்திற்குப் பதிலாக அரிசி மற்றும் ஏனைய உணவு பண்டங்கள் வழங்கப்பட்டதுடன் தொடர்ச்சியான சம்பளமும் வழங்கப்படவில்லை. 

1972 வரை பிரித்தானிய கம்பனிகளினால் நிர்வகிக்கப்பட்ட இந்த தோட்டங்களை தேசிய மயமாக்கிய பின்னர் முதன் முதலில் 1972ஆம் ஆண்டு சம்பளக் குழுவினால் குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் (Minimum Wages Ordinance)  கீழ் தீர்மானிக்கப்பட்டது. சம்பள நிர்ணய சபை தாபிக்கப்படும் வரை நாட் சம்பளத்தை தோட்ட உரிமையாளர்கள் தன்னிச்சையாகத் தீர்மானித்தனர். குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் கீழ் சம்பள சபை தாபிக்கப்பட்டது. அதில் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்கள், தோட்ட முதலாளிகள் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் இடம்பெற்றனர். 

1992ஆம்  ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டதோடு 22 பிராந்திய கம்பனிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சில தோட்டங்களை அரச கூட்டுத்தாபனங்களான மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையும் அரச பெருந்தோட்ட யாக்கமும், எல்கடுவ பிளான்டேசன் எனப்படும் அரச பொறுப்பில் உள்ள கம்பனிகளும் முகாமை செய்து வருகின்றன. ஏனையவை சிறு தோட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

பெருந்தோட்டங்கள் பிராந்திய கம்பனிகளுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட போது ‘கூட்டு ஒப்பந்த’ அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் நிர்வகிக்கப்படவில்லை. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நியதிச் சட்டங்கள் மற்றும் பொதுவாக காணப்பட்ட தொழிற்சட்டங்களின் அடிப்படையிலேயே பெருந்தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டன. ஆகையால் தொழிலாளர்களின் நாள் சம்பளமானது சம்பள நிர்ணய சபையினூடாக தீர்மானிக்கப்பட்டது. 

1994க்குப் பின்னர் அரசாங்கம் சம்பள நிர்ணய விடயத்திலிருந்து விலகிக் கொண்டது. அதன் பின் பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிற்சங்கங்களைக் கொண்டு கூட்டு ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க ஆரம்பித்தன. 

ஆரம்பத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) உடன் மாத்திரம் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதோடு பின்னர் இலங்கை  தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) மற்றும் அரச ஒருங்கிணைந்த பெருந்தோட்ட தொழிற்சங்க  கூட்டமைப்பு (JPTUC) ஆகியனவும் தொழிற்சங்க பிரதிநிதிகளாக  கைச்சாத்திட்டன. இதுவே 1996ஆம் ஆண்டிலிருந்து கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டது.

1998ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை  மேற்கொள்ளப்படும் ‘கூட்டு ஒப்பந்தம்’ உரிய கால இடைவெளியில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அவை கையொப்பமிடப்பட்டிருக்கும் திகதிகளை வைத்து அடையாளப்படுத்த முடியும். 

கடந்த இருபது வருடகாலமாக மூன்று தொழிற்சங்க அமைப்புகள் மாத்திரமே இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றன. 40 வீத அங்கத்தவர்களைக்கொண்ட தொழிற்சங்கங்களுடன் இந்த ஒப்பந்தம் செய்வதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது. ஏறக்குறைய வெள்ளிவிழா கண்டுள்ள நிலையில் இந்த தொழிற்சங்கங்களுக்கு மாத்திரம் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சட்ட வலிது உள்ளதா என்கின்ற கேள்வியும் எழுகின்றது. பெருந்தோட்ட மக்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் வாழ்வுக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதில் அரசாங் கத்துக்கும் கடப்பாடுண்டு.  

ஏனைய துறைகளில் தொழில் செய்வோரின் வேதனம், வாழ்க்கைச் செலவு ஏற்றத்திற்கு ஏற்ப வருடாந்தம் மீளாய்வு செய்யப்படுகிறது. அரச துறையில் வருடாந்தம் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சம்பளம் அதிகரிக்கப்படுகின்றது. இதனை மீளாய்வு செய்ய ஜனாதிபதி தனியான ஆணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளார். எனினும் தோட்டத் தொழிலாளர் சம்பள விடயம் தொடர்பில் அவர் ஒரு வார்த்தையும் பேசுவதில்லை. அவருடன் ஒட்டிக்கொண்டு தேர்தல் அரசியல் செய்யும் இ. தொ. கா இந்த விடயத்தை அவருடன் பேசுகின்றதா?. 

இ.தொ.கா தற்போதைய தனது பாத்திரம் என்ன எனும் கேள்வியை சரியாக உணர்ந்து காய் நகர்த்த வேண்டும். ஜனாதிபதிக்கும் தங்களுக்குமான அரசியல் உறவை தோட்டத் தொழிலாளர் சம்பள விடயத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் சரி செய்யலாம். அதை விடுத்து கம்பனியுடன் பேசுவார்கள். இறுதியில் தோல்வி என்பார்கள். வெளிநடப்பு செய்வார்கள். என்ன பேசினார்கள்? என்ன தோல்வி என யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு நாள் ஒப்பந்தம் செய்து பேச்சுவார்த்தை வெற்றி என்பார்கள் . இது கடந்த 25 ஆண்டுகளாக இடம்பெறும் "தொடர் நாடகம்". இந்த முறையும் அதையே அரங்கேற்ற நினைப்பது வேடிக்கையானது. 

தொடர்ந்து தோல்வியுறும் இந்த கூட்டு ஒப்பந்த முறை தொடர்ந்தும் செய்யப்பட்டு கொண்டே இருக்கிறது. ஏனைய துறைகளில் அதிகமானோர் மாத சம்பள அடிப்படையிலே தொழில் செய்கின்றார்கள். ஆயினும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் சுமார் 200 வருட காலமாக நாட் கூலிக்காகவே தொழில் செய்கின். றார்கள்

இவர்களின் வேதனம் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்பட்டாலும் அது நாகரீகமான மானிட வாழ்க்கையினைக் கொண்டு நடத்துவதற்குப் பொருத்தமற்றது. வாழ்க்கைச் செலவு சுட்டிகள் தொடர்ந்து அதிகரித்து சென்ற போதும் அதற்கான சலுகைகள் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. 

இந்த நாட்டின் பிரஜைகளாகவும் தேசிய பொருளாதாரத்தின் முக்கியப் பங்காளிகளாகவும் இருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கௌரவமான வேதனத்தைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கத்துக்குக் கடப்பாடு உண்டு.  பேச்சுவார்த்தையில் அரசாங்கப் பிரதிநிதிகளும் ஒரு தரப்பாக பங்கேற்க வேண்டும்.

மாத சம்பள முறையே இன்றைய தேவையாக உள்ளது. அது சாத்தியமாகாதபோது குறைந்தபட்சம் 'கூட்டு ஒப்பந்தம்’ செய்யப்படும் கால இடைவெளி நிச்சயப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும், நிலுவைப் பணக்கொடுப்பனவிலும் ஒரு முறையான கொள்கை வகுக்கப்படல் வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்த ஒப்பந்தம் செய்யும் தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும். 

இந்த இலக்கினை அடைய சகல தரப்பினரையும் கொண்ட கூட்டிணைந்த செயற்பாடு அவசியமாகும். இல்லாவிட்டால், "தொடர் தோல்வியில் தொடரும் ஒப்பந்தம்" என இம்முறையும்  அமைந்துவிடும் அபாயமே உள்ளது. 

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images