கிராமம் அமைகிறது 'சமுதாயம்' எங்கே? - ஜீவா சதாசிவம்

August 23, 2018


2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசு அப்படியே இன்று இல்லாத போதும் 'நல்ல ஆட்சி'  அரசாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி அதன் வழி; நான் தனிவழி என ஜனாதிபதியே அறிவித்திருப்பதானது தற்போதைய கூட்டு அரசாங்கத்தில் குளறுபடி உள்ளதை உறுதிப்படுத் துகின்றது. இந்த அரசாங்கத்தை உருவாக்குவதில் அல்லது முன்னைய அரசாங்கத்தை மாற்றுவதில் இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகித்தன. 

குறிப்பாக மலையகப் பகுதிகளுக்கு ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வருகை தந்து வாக்கு கேட்காதபோதும் ஆவலுடனும் பல எதிர்பார்ப்புக்களுடனும் மக்கள் வாக்களித்தார்கள்.அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தலில் புதிதாக உருவாகியிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி , அதுவரை மலையகத்தில் கோலோச்சிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு சவால்விடுக்கும் வகையில் வெற்றியை பெற்றது.  

மஹிந்த ராஜபக் ஷ தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகள் நாட்டை ஆண்டார் என்றால் இ.தொ.கா. ஏறக்குறைய எழுபது ஆண்டுகளாகவே மலையகத்தை ஆண்டது எனலாம். அதுவும் அமைச்சு பதவி அரசியலில் தொடர்ச்சியாக நாற்பதாண்டுகாலம் இருந்து வந்துள்ளது. 

எனினும் 2015 ஆம் ஆண்டு அதில் ஒரு மாற்றம் ஏற்பட்டு  ‘மலைநாட்டு புதிய கிராமங்கள்,உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சு எனும் புதிய அமைச்சுப் பொறுப்பினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அல்லாத குறிப்பாக தொண்டமான் பரம்பரை அல்லாத நேரடியான தொழிலாளியின் மகன் என்ற அடையாளத்துடன் பழனி திகாம்பரத்தின்  கைகளுக்கு இந்த அமைச்சு சென்றது.இந்த புதிய அமைச்சின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தமை மறுப்பதற்கில்லை. 

 தற்போது நல்லாட்சிக்கு மூன்றாண்டுகள் முடிவுற்றிருப்பது போலவே குறித்த அமைச்சும் மூன்றாண்டுகளைக் கடந்துள்ளது. இந்த நிலையில் அதன் நடவடிக்கைகள் குறித்த ஒரு  சில விடயங்களை சுட்டிக்காட்டுவதாக இந்த வார அலசல் அமைகிறது. 

'மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சு' என்பது புதிய அமைச்சு. ஆயினும் அது 'தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு'  என கடந்த இருபது ஆண்டுகளாக இருந்த அமைச்சின் தொடர்ச்சி என்பதை மறுப்பதற்கில்லை.  

மறைந்த அமைச்சர்கள் சௌமியமூர்த்தி தொண்டமான், அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன் ஆகியோர் மாத்திரமின்றி  ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், டிலான் பெரேரா, சி.பி.ரத்னாயக்க போன்றோர் குறித்த அமைச்சின் அமைச்சர்களாக பதவி வகித்திருப்பதோடு சில காலம் சதாசிவம் (தற்போதைய மத்திய மாகாண சபை உறுப்பினர்) கூட நிழல் அமைச்சராக செயற்பட்டுள்ளார். 

ஒவ்வொரு கால கட்டத்திலும் குறிப்பிட்ட அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பணி களை பட்டியலிட்டால் அதன் நிறைகுறைகளை மதிப்பீடு செய்ய முடியும். வீடுகளைக் கட்டுதல், மின்சாரம் பெற்றுக்கொடுத்தல், பாதைகளை புனரமைத்தல் எனும் உட்கட்டுமான வசதிகளுடன் தொழிற்பயிற்சி நிலையங்களை நிர்வகித்தல், இளைஞர்களை வலுவூட்டும் செயற்பாடுகள் போன்றனவும் கூட இந்த அமைச்சு ஊடாக நடைபெற்று வந்துள்ளது.

எனினும் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம்பெற்றவேளை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு என்ற ஒன்று இருக்கவில்லை. அதன் பணிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவிருந்த பஷில் ராஜபக் ஷவின் கீழ் பிரதி அமைச்சராக இயங்கிய முத்து சிவலிங்கத்தின் ஊடாக அந்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 2015 ஜனவரியில், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் நூறு நாள் வேலைத்திட்டம் ஒன்றை அமைத்தபோது,  பழனி திகாம்பரம் ‘பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு’ என அமைச் சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டார். நியமனம் என்பதற்கு அப்பால் அது அவருடைய நிபந்தனை என்று அறிய முடிகிறது. 

அதாவது, முன்னைய அரசாங்கத்தில் (மஹிந்த) தேசிய அரச கரும மொழிகள் பிரதி அமைச்சராக இருந்த திகாம்பரம்,  தான் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாக இருந்தால் தனக்கு ‘தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு’ வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அதனைப் பெற்றுக்கொண்டதுடன் அது தமிழாக்கம் செய்யும்போது பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு என பெயரிடப்பட்டுள்ளது. 

அந்த அமைச்சினைப்பெற்றுக்கொண்ட அமைச்சர் திகாம்பரம் ஏழு பேர்ச்சஸ் நிலத்தில் தனிவீடுகள் அமைப்பதை இலக்காகக் கொண்டு 300 வீடுகளை மலையக மாவட்டங்களில் அமைத்து ஒரு முன்னெடுப்பைச் செய்தார். அது பிரபலம் பெற்றதோடு 2012 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மலையக மக்களுக்கான 4000 வீடுகள் என்ற வீட்டுத்திட் டத்தினை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டார். 

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில்  தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவராக அவர் பெற்ற வாக்குகளும் அவர் சார்ந்த அணியின் சிந்தனையும் பலமும் ‘(பெருந்)தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை’ விரிவாக்கி 'மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு ,சமுதாய அபிவிருத்தி அமைச்சு' எனும் அமைச்சாகப் பெற்றார். 

பெயருக்கு ஏற்றாற்போல அமைச்சின் திட்டங்களும் விரிவாக்கம் பெற்றன. தனிவீடு, வீட்டுக்கான ஏழு பேர்ச்சஸ் காணிக்கு முழு உரித்துடனான உறுதிப்பத்திரம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி என அவரது அமைச்சுப் பணிகள்   வேகமாகவும் திடமாகவும் நடைபெற்று வருகின்றமை வரவேற்கக் கூடியதே.

இந்திய வீடமைப்புத்திட்டத்தையும் நடைமுறைக்கு கொண்டு வந்து பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் 404 வீடுகளை மக்கள் பாவனைக்கு கையளித்த நிகழ்வு பலரதும் பாராட்டைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 10000 வீடுகளை அமைக்க இந்திய அரசாங்கத்துடன் மக்கள் முன்னிலையில் கைச்சாத்திட்டது கூட மலையக தமிழ் மக்களுக்கு கிடைத்த அங்கீகாரமே. இந்த அமைச்சின் வீடமைப்புத்திட்டங்கள் பற்றிய பல விமர்சனங்கள் இருந்தாலும் இதுவரையில் ஏற்பட்டிருக்கும் வீடமைப்புத்திட்ட  முன்னேற் றங்கள் பற்றி பாராட்ட வேண்டியும் இருக்கின்றது. 

 ஆனாலும் அமைச்சின் பெயரில் வரும் முதல் இரண்டு பாகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மூன்றாம் பாகமான 'சமுதாய அபிவிருத்தி' க்கு அமைச்சும், அமைச்சரும் வழங்குகிறார்கள் இல்லையோ எனும் சந்தேகம் எழாமல் இல்லை. புதிய கிராமங்கள் அமையப்பெறுகின்றன. மலையக மக்களின் வரலாற்றை நினைவுப்படுத்தி  அவற்றுக்கு புதிய பெயர்கள் வைக்கப்படுகின்றன.

உட்கட்டமைப்பு  வசதிகளாக பாதைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. உலக வங்கி உதவியுடன் ஏனைய அமைச்சுக்களுடன் இணைந்து சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், சுத்தமான குடிநீர் திட்டங்கள் என்பன இடம்பெறுகின்றன. நுவரெலியா மாவட்டத்திற்கு வெளியே காலி, மாத்தறை, மாத்தளை, மொனராகலை மாவட்டங்களுக்கும் திட்டங்கள் விஸ்தரிக்கப்படுகின்றன. இவற்றுக்கு விமர்சனம் இருந்தாலும் வரவேற்கப்பட வேண்டியவையே!

ஆனால், மூன்றாவது அம்சமான ‘சமுதாய அபிவிருத்தி’ பக்கத்தில்   என்ன நடந்துகொண்டிருக்கிறது. அந்த பகுதியின் கீழ் இயங்கக் கூடிய பிரஜாசக்தி நிலையங்களில் என்ன நடக்கிறது? எத்தனை மலையக மாணவர்கள் கணினி பயிற்சி பெறுகிறார்கள்? அதன் அடைவு மட்டம் என்ன? ரம்பொடையில் அமையப்பெற்றுள்ள நுண்கலைக்கல்லூரியின் நிலை என்ன? அங்கு நுண்கலைப் பயிற்சிகள் இடம்பெறுகின்றனவா? எவ்வாறு மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர்? எத்தகைய பயிற்சிகள் இடம்பெறுகின்றன? நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் என்ன நடக்கிறது? மலையக இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத் துறைக்கு அமைச்சு ஆற்றும் பங்களிப்பு என்ன?

அமைச்சர் ஒரு கரப்பந்தாட்ட விளையாட்டு வீரராக அவ்வப்போது தோட்ட மைதானங்களில் இளைஞர்களுடன் விளையாடி விடுவதனால் மாத்திரம் விளையாட்டுத்துறை வளர்ந்துவிடுமா? ஹட்டன் தொண்டமான் அல்லது பூல் பேங்க் தொழிற்பயிற்சி கல்லூரியில் எத்தகைய பாடநெறிகள் இடம்பெறுகின்றன? அங்கு வெளியேறும் மாணவர்கள் தொழில் வாய்ப்பு பெறுகின்றனரா போன்ற கேள்விகளுக்கான பதிலையும் அமைச்சிடமும் அமைச்சரிடமும் மக்களின் சார்பில் கோரவேண்டியுள்ளது.

 அமைச்சின் பெயர் மாற்றப்பட்டதன் தாற்பரியம் செயற்பாடுகளில் தெரிகிறது.  மேற்படி நிறுவனங்களின் பெயர்களும் கூட அமைச்சுப் பொறுப்பேற்றதும் மாற்றப்பட்டு பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியிருந்தன. சர்ச்சைகளுக்காக பெயர் மாற்றப்பட்டதா? அல்லது ஏதேனும் சாதிப்பதற்கு பெயர் மாற்றப்பட்டதா? தோட்டம் கிராமம் ஆனதுபோல் சமுதாயமும் மாற்றங்களை எதிர்பார்த்து நிற்கிறது.

நன்றி வீரகேசரி - 23/08/2018

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images