வாசகர்களின் வார்த்தைகளில் வீரகேசரி - ஜீவா சதாசிவம்

August 12, 2018



பத்திரிகையை ஆரம்பிப்பது இலகுவாக இருக்கலாம். ஆனால்,  அதனை  பல தசாப்த காலமாக வாசகர்களின்  மனதில் தக்கவைத்துக் கொள்வதே பெரும் சவால். அந்தவகையில் 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 6 ஆம் திகதி சுப்பிரமணிய செட்டியாரால் ஆரம்பிக்கப்பட்ட 'வீரகேசரி' இன்று ஆலவிருட்சம் போன்று வளர்ந்து பல கிளைகளாகப் படர்ந்துள்ளது. 

ஒன்பதாவது தசாப்தத்தை எட்டி நூற்றாண்டில் கால்பதிப்பதற்கு வீறுநடை போடும் 'வீரகேசரி' கடந்து வந்த பாதையில் பல தடங்கல்கள் இருந்தாலும்  வீரகேசரியின் இதயமான  வாசகர்களுடன்  அவர்களுக்குப் பத்திரிகைகளை கொண்டு செல்கின்ற இன்னொரு இதயமான விநியோகஸ்தர்கள், விளம்பரதாரர்கள் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்பு  மற்றும் செயற்பாட்டினாலேயே  இத் தொடர் பயணத்தை தடையின்றி கொண்டு செல்லக்கூடியதாக இருக்கின்றது. 


அந்த வகையில் வாசகர்களின்  வார்த்தைகளில் 'வீரகேசரி' எவ்வாறு இருக்கின்றது என்பது பற்றி  நேரடியாக களத்துக்குச் சென்று அவர்களுடன் எதிர்பாராதவிதமாக உரையாடியபோது அவர்கள் 'வீரகேசரி' பற்றிய கருத்துக்களை இவ்வாறு கூறுகின்றனர்....

நான் யாழ்ப்பணத்தைச் சேர்ந்தவன். தற்போது கொழும்பு– - 13 இல் வசித்து வருகின்றேன்.  சுமார் இரண்டு தசாப்தத்துக்கு மேற்பட்ட காலமாக வீரகேசரி வாசகராக இருக்கின்றேன்.  பொதுமக்களின் பொதுவான  பிரச்சினைகளையும் நல்லது–கெட்டது என பல விடயங்களையும் வெளிக்கொணர்வதால் வீரகேசரி அபிமானியானேன். உள்நாட்டு விடயங்கள் மாத்திரமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தகவல்களையும் வெளிக்கொணர்வதில் மிக முக்கியமான பங்கு வீரகேசரிக்கு உண்டு.  

வெறும் வணிக நோக்கம் மாத்திரமல்லாமல் வாசகர்கள் பற்றிய கவனத்தை
செலுத்துவதால் எனக்கு இப்பத்திரிகையை வாசிப்பதற்கு மிகவும் விருப்பம். படித்தவர்கள் மாத்திரம் அல்லாமல் பாமர மக்களும் வாசிக்கக் கூடியதாக இருக்கின்றது. என்னைப் பொறுத்த வரையில் வீரகேசரி அரச சார்பற்ற, அரசுக்கு அச்சப்படாத ஒரு பத்திரிகை. இரண்டு தசாப்தங் களுக்கு முன்னர் பார்த்த பத்திரிகையாக இல்லாமல் கால மாற்றத்துக்கும் ஓட்டத்துக்குமாக பெரியளவிலான மாற்றங்கள் காணப்படுகின்றன.

என்னைப் பொறுத்தவரையில் நான் அரசியல் செய்திகளையும்  கட்டுரை களையும்  மிகவும் விரும்பிப் படிப்பவன். வீரகேசரி உண்மையை மக்களுக்கு வெளிக்கொணரும் ஒரு பத்திரி கையாக தொடர்ந்து வெளிவரவேண்டும்.  இலங்கை மக்களுக்கு மாத்திர மல்லாது உலகளாவிய ரீதியிலுள்ள அனைனத்து  மக்களுக்கும் சரியான விடயங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுடன் நூற்றாண்டைக் கடந்து வாழ வேண்டும் என வாழ்த்துகின்றேன் என்கிறார் மனநெகிழ்வுடன்.....


கடையில் தொழில் புரியும் இந்த இளைஞன் தனது கருத்தை இவ்வாறு பகிர்கின்றார். 
பெரும்பாலும்   அரசியல்,  சினிமா,  விளையாட்டுச் செய்திகள் உட்பட சகல  விடயங்களையும் முழுமை யாக அல்லாவிடினும் முதல் பந்தியையாவது வாசிப்பேன். விபத்துக்கள்,  கொலை, கொள்ளை  என்பவற்றை ஆர்வமாக வாசிப்பேன். மலையக விடயங்கள் சம்பந்தமாக தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வீட்டுத்திட்டங்கள் தொடர்பான பல காத்திரமான விடயங்களையும் பிரசுரித்தால் இன்னும் சிறப்பு...

தனது 15ஆவது வயதில் வீரகேசரி வாசகராக அறிமுகமாகி இன்றைக்கு 65 வயதாகி சுமார் ஐந்து தசாப்த காலமாக தொடர்ச்சியாக வாசகராக இருக்கும் சந்திரன் இவ்வாறு தனது கருத்துக்களைப் பகிர்கிறார்... 

வீரகேசரி நான் விரும்பி வாசிக்கும் பத்திரிகை. அது மாத்திரமல்லாமல் அந்த நிறுவனத்தின் கீழ் வெளிவரும் மெட்ரோ, மித்திரனின் வாசகரும் கூட. நான்
வீரகேசரி வாசிக்க ஆரம்பித்த கால த்தில் 15 சதமாக இருந்த இந்த இதழ் இப்போது 30 ரூபாவா கிவிட்டது.  அனைத்து செய்திகளையும் விரும்பி வாசிப்ப வனாகவே இருக்கின்றேன்.

செய்திகள், கதைகள் என சகல விடயங்களையும் வாசிப்பேன். அரசியல் கட்டுரைகளையே விருப்பமாக வாசிப்பேன்.  பக்கச்சார் பற்ற அரசியல் கட்டுரைகள் வீரகேசரி பிரசுரிப்பது எனக்கு மிகவும் பிடித்த விடயம். எப்போதும் போன்று இப்பத்திரிகை சிறப்பாக வெளிவர வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. என்ன,  திடீரென்று விலையை அதிகரிக்காமல் இருந்தால் மகிழ்ச்சி.....


பல்வேறு தரப்பினர் வந்து வாசிப்பதற்கான ஒரு சிறிய வாசிகசாலையாக இருப்பது தான் முடிதிருத்தும் இடம்.  ஆண்டிவால் தெருவில் அமைந் துள்ள மேற்படி நிலையத்துக்குச் சென்ற போது அங்குள்ளவர்கள் தமது கருத்துக்களை இவ்வாறு பகிர்ந்துகொள்கின்றனர்... 

எமது சலூனுக்கு வரும் வாடிக்கை யாளர்கள் அனைவரும் வீரகேசரியையே வாசிப்பார்கள்.  நாங்களும் விரும்பி வாங்குவதும் வாசிப்பதும்  இந்தப் பத்திரிகையைத்தான். எம்மிடம் வரும் வாடிக்கையாளர்களும் வீரகேசரியைத் தான் கேட்பார்கள். பத்திரிகைகளில் வரும் தலைப்புக்களை வாசிப்போம். அவசியமான செய்திகளாக இருந்தால் முழுமையாக வாசிப்போம். எமது வாழ்த்துக்களையும்  தெரிவிக் கின்றோம். பத்திரி கையின் நீண்ட ஆயுளுக்கு ...

வாசகராக  மாத்திரமல்லாமல்  ஒரு பத்திரிகை விநியோகஸ்தராகவும்  புத்தகக் கடையை நடத்துபவராகவும் இருக்கும் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் ஸ்ரீதர் சிங்  தனது கருத்துக்களை இவ்வாறு பகிர்ந்துகொள்கின்றார்... 


1960 களுக்கு முற்பட்ட காலத்தில் நாங்கள் யாழ்ப்பாணத்தில் வீரகேசரியை விற்பனை செய்தே வாழ்க்கை நடத்திய ஒரு காலமும் இருந்தது. யாழ். பஸ் நிலையத்துக்கு அருகிலேயே எங்களது கடை இருந்தது. நாங்கள் பத்திரிகை விநியோகஸ்தராகவும் இருந்தோம்.  அத்தருணத்தில் பத்திரிகைகளை விற்பனை செய்து விட்டே பாடசாலைக்குச் செல்வோம். வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளே அக்காலத்தில் இருந்தன. 

வீரகேசரியின்  கிளைக் காரியாலயம் ரயில்வே நிலையத்துக்கு அருகிலேயே இருந்தது. அந்த காலகட்டத்தில் வீரகேசரி பத்திரிகைக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும். முதல் நாள் பத்திரிகை வாங்காதவர்கள் இருநாள் பத்திரிகைகளை வாங்கி வாசிக்கும் அளவுக்கு ஆர்வமும் இருந்தது. அந்த காலப்பகுதியில் வீரகேசரியின் சந்தைப்படுத்தலும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. 

இன்று சகல செய்திகளையும் விவரமாக பார்ககக்கூடிய ஒரு பத்திரிகையாக வீரகேசரி இருக்கின்றது என்பதை நான் ஒரு வாசகனாகப் பார்க்கின்றேன். ஒரு ஒழுங்குமுறையாக வாசகர்களை வந்தடையும் ஒரு பத்திரிகையாக இலங்கையில் அனைத்து பகுதிகளிலுமுள்ள விடயங்களை அறிந்து வழங்கும் ஒரு பெரியளவிலான வலையமைப்பைக் கொண்டிருக்கின்றமையால் அனைத்துத் தகவல்களையும் அனைத்து வாசகர்களும்  நுகரும் வகையில் தினசரி சென்றடையும் பத்திரிகையாக இருக்கின்றது. 

சுமார் 5 தசாப்தகாலமாக நான் வாசகராக இருக்கின்றேன். அந்த காலகட்டத்தில் பத்திரிகை வாசிக்கும் கலாசாரம் மிக முக்கியமாக இருந்தது. ஆனால்   கால மாற்றத்துக்கேற்ப இந்த காலகட்டங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இணைய ஊடகங்கள்,  தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தால் செய்திகள் பரவ விடப்பட்டுள்ளன. இவற்றின் வருகையினால் பழைய வாசகர்களை விட புதிய வாசகர்கள் பத்திரிகைகளை தேடி வாசிக்கும் தன்மை  குறைவடைந்துள்ளதாக என் மனதில் எண்ணத் தோன்றுகிறது. 

வாசகர்களை தங்களது பக்கம் ஈர்ப்பதற்கு புதிய உத்திகளைக் கையாள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கொழும்பு தவிர்ந்த பிற மாகாணங்களுக்கு தேவையான செய்திகளை பிரசுரிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு செய்யும் போது குறித்த பகுதிகளில் விற்பனையை அதிகரிக்கலாம். தரத்தையும் உயர்த்த முடியும் என்பது எனது கருத்து. 

வாசிப்புத் தகைமையும் செய்தி அறியும் தன்மையும்  தற்போது குறைவடைந்து வருகின்றன. எது எவ்வாறாக இருந்தாலும் நூற்றாண்டை நோக்கிய பயணமாக வீரகேசரி இருப்பதற்கு  வீரகேசரியின் வாசகராகவும் ஒரு விநியோகஸ்தர் என்ற ரீதியிலும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை இத்தருணத்தில் பகிர்கின்றேன். 


கொழும்பு மெயின் வீதியில் வீதியோர பழத்தட்டுக்கு அருகில்  வீரகேசரி பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்த ஒரு வாசகரை நாடி பத்தி ரிகையைப் பற்றிக் கேட்டபோது அவர் இவ்வாறு பகிர்ந்துகொள்கிறார்... 

நான் விரும்பிப் பார்க்கும் பத்திரிகை வீரகேசரி. சமையல்காரராக வேலை செய்யும் எனது பெயர்  அலிபு அம்சா. - நான் வீரகேசரியின் நீண்ட கால வாசகர். செய்திகள்,  தொழில் வாய்ப்புக்கள், விளம்பரங்கள் உட்பட பல விடயங்களை நான் விரும்பிப் பார்ப்பதுண்டு.  அரசியல்  செய்திகள்,  கட்டுரைகள் என உண்மையான செய்திகளாக இருப்பதாலேயே தொடர்ந்து நானும் வாசகராக இருக்கின்றேன். இது எல்லா மக்களுக்கும் பொதுவான பத்திரிகை. வாழ்த்துகின்றேன் என்கிறார்.

பழத்தட்டு வியாபாரி மொஹமட்  தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்கிறார்... நான் விரும்பிப் பார்க்கும் பத்திரிகை வீரகேசரி. உள்நாட்டு, சர்வதேச விவகாரங்கள் மற்றும்  விளம்பரங்களையும் விரும்பிப் பார்க்கின்றேன். இப்போது சில செய்திகள் வெளிவந்தாலும் கூட அதன் ஆழமான விடயத்தை மேலும் வெளிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

(நன்றி வீரகேசரி - 06/08/2018)

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images