பிரேம்சந்த் வென்ற சாந்தன் - ஜீவா சதாசிவம்
August 07, 2018
இந்திய சாகித்திய அகாடமியினால் ஆண்டு தோறும் வழங்கப்படும் பெருமை மிக்க பிரேம்சந்த் விருது (Premchand Fellowship) இவ்வாண்டு நம்நாட்டு எழுத்தாளர் ஐ.சாந்தனுக்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் இலங் கைக்கும் அவர் பெருமை சேர்த்துத் தந்துள்ளார். இந்திய இலக்கிய மேதைகளில் ஒருவரான பிரேம்சந்த் நினைவாக 1996 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் இந்த கௌரவமானது ஆண்டுதோறும் சார்க் நாடுகளுக்கிடையே இலக்கியம்-, பண்பாடு ஆகியவற்றில் தனித்துவமான பங்களிப்புச் செய்தவர்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வருடம் இவ் விருதைப் பெற்றிருக்கும் சாந்தன் இலங்கையின் முன்னணி இருமொழி எழுத்தாளராவார்.
இலக்கியம் படைப்பவர்களான சுமதி சிவமோகன் (2011), ஜஸ்மின் குணரத்ன (2012), ஜீன் அரசநாயகம் (2014) ஆகியோர் ஏற்கனவே இவ்விருதைப் பெற்றிருக்கிறார்கள். எழுத்துலகில் ஐந்தாவது தசாப்தத்தை எட்டியுள்ள சாந்தன் ஆங்கில ஆக்க இலக்கியத்துக்கு இலங்கை சாகித்திய மண்டலப்பரிசு பெற்ற முதல் தமிழராகவும் ஆங்கிலம், தமிழ் இரண்டுக்கும் சாஹித்ய மண்டலப்பரிசு பெற்ற ஒரே எழுத்தாளராகவும் திகழ்கிறார். இலங்கை இணைக்கப்பட்ட பொறியியலாளர் கழகத்தின் தகைசார் உறுப்பினரான சாந்தன், சூழல் முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணி பட்டமும் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றவர்.
இவர் 2017ஆம் ஆண்டு கொடகே வாழ்நாள் சாதனை விருது மற்றும் 2016 ஆம் ஆண்டு இந்தியாவின் ராஜஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச எழுத்தாளர் விழாவில் சாஹித்யஸ்ரீ விருது என்பனவற்றைப் பெற்றவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருபவர் சாந்தன். பொறியியல் துறை சார்ந்தவராக இருந்தாலும் இலக்கியத்தில் அதீத ஈடுபாடுடையவர். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை எழுதியிருக்கிறார்.
இவரது முதலாவது சிறுகதை 1966 ஆம் ஆண்டு "கலைச்செல்வி" இதழில் வெளியானது. மொறட்டுைவ பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த போது இவரது "பார்வைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. அப்போதிலிருந்து ஆரவாரமில்லாமல் ஆழமாக எழுத்துப்பணியைச் செய்துகொண்டிருக்கும் சாந்தனுக்கு "பிரேம்சந்த் விருது" வழங்கப்படுவது சர்வதேச ரீதியாக அவருக்குக் கிடைத்துள்ள ஒரு அங்கீகாரம் – - கௌரவம் எனக் கொள்ளலாம்.
இவ் விருதைப் பெற்றுக்கொண்டு அடக்கமாக இருக்கும் அவரை, வீரகேசரி, சங்கமம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு உரையாடினோம். அவருடைய கருத்துக்கள் இனி வாசகர்களுக்கு...
சாந்தன் விருதுகளில் ஆர்வமில்லாதவர். ஆனால், இந்திய சாஹித்ய அகாடமியினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் "பிரேம்சந்த் விருது" இவ்வாண்டு உங்களுக்கு கிடைத்திருக்கின்றது. இந்த பெருமைமிக்க விருது கிடைத்திருப்பது குறித்து உங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்...
ஆர்வமில்லாதவன் என்றோ, உள்ளவன் என்றோ மேலோட்டமாகச் சொல்லி விடுவது பொய்யாகி விடும். விருதுக்கு நானும் எனக்கு விருதும் ஏற்றவையாக இருப்பின் ஏற்பது நிறைவே. ஏற்கனவே இதுபோன்று நிறைவான சிலவற்றைப் பெற்றுமிருக்கிறேன். இந்திய இலக்கிய மேதைகளில் ஒருவரான பிரேம்சந்த் நினைவாக 1996 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் இந்த விருதானது ஆண்டுதோறும் சார்க் நாடுகளினிடையே இருந்து இலக்கியம்,-பண்பாடு ஆகியவற்றில் தனித்துவமான பங்களிப்புச் செய்தவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருவதாகும். "Fellow" மற்றும் "Fellowship" என்பவற்றுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்கள் தெரியாமையால் விருது என்பதையே பயன்படுத்துகிறோம்.
ஏற்கனவே, இலங்கையிலிருந்து சுமதி சிவமோகன், யஸ்மின் குணரத்ன, ஜீன் அரசநாயகம் போன்ற படைப்பாளிகளுக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது. நானறிந்த வரையில் ஆங்கிலத்தில் எழுதுகின்றவர்கள் இவ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகம். ஏனெனில், விருது பெறுபவர் இந்தியாவின் பல்வேறு நகர்களிலும் தனது எழுத்துக்கள் வாசிக்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார். என்னைப் பொறுத்தவரை என் தமிழ் எழுத்துக்களை தமிழ்நாட்டில் தான் வாசிக்க இயலும்.
கொழும்பிலுள்ள இந்திய கலாசார நிலையத்தினர், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இவ்விருதுக்காக என்னிடம் விவரங்களைக் கேட்டுப் பெற்ற வேளைகளில் மெல்லிய நம்பிக்கையிருந்தது. எனினும் 2016 ஆம் ஆண்டு கிட்டவில்லை. 2017 ஆம் ஆண்டுக்காக இப்போது கிடைத்திருக்கிறது. கொழும்பிலுள்ள இந்திய கலாசார நிலையத்தினர் மற்றும் இந்திய சாஹித்ய அகாடமியினர் என் நன்றிக்குரியவர்கள்.
இந்திய சாஹித்ய அகாடமி என்பது இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையிலும் – - குறிப்பாக இலங்கைத் தமிழ் இலக்கியவாதிகள் மத்தியிலும் – பெரும் மதிப்புப் பெற்ற நிறுவனமாகும். அத்தகு அமைப்பின் அங்கீகாரம் பெற்றதில் மகிழ்வே என்பதை மறைக்க வேண்டியதில்லை.
எழுத்தாளர் சாந்தன் என்றதும் நினைவுக்கு வருவது நீங்கள் எழுதியிருக்கும் சிறிய சிறுகதைகள், குறுங்கதைகள் ஆகிய வடிவங் கள்தான். இவற்றை வெற்றிகரமாகக் கையாண்டவர் என்று உங்களைக் குறிப்பிடுவார்கள். இவ்வாறான ஒரு இலக்கிய வடிவத்தை நீங்கள் தெரிவு செய்தமைக்குக் காரணம் என்ன?
வெவ்வேறு வாசகர்களுக்கு வெவ்வேறு ஞாபகங்கள் வருதல் இயல்பு. 1980 களின் பின்னர் தமிழில் வெளியான என் குறுநாவல்களும் கட்டுரைகளும் சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் போர்க்காலத்தில வெளியான மையாலும் படைப்புக்கள் ஆங்கிலத்தில் அமைந்ததாலும் சிறிய சிறுகதைகள், குறுங்கதைகள் என்ற வடிவங்கள் மட்டுமே முதலில் நினைவுக்கு வருவதற்குக் காரணமாயிருத்தல் சாத்தியம்.
அடுத்தது வடிவங்களை நான் தெரிவு செய்வதில்லை. "எழுத்துக்கள் தாமே தம் வடிவைத் தெரிவு செய்து கொள்கின்றன. நாம் பெயர் சூட்டுகிறோம்" என்பதே நான் விளங்கிக் கொண்டது. என் எழுத்துக்கள் நீங்கள் குறிப்பிடும் அவ் வடிவங்களை ஏன் அவ்வேளை தேர்வு செய்தன என்பதற்கு என் இயல்போ தொழிலோ வாசிப்பு அனுபவங்களோ காரணமாயிருந்திருக்கலாம்.
எப்படியிருப்பினும் தற்போது "Flash Fiction" என்றும் "Short Short" என்றும் இந்த நூற்றாண்டில் முக்கியத்துவம் பெற்று வரும் இந்த சிறிய சிறுகதைகள், குறுங்கதைகள் என்ற வடிவங்களை அப்போதே நான் கையாண்டதில் நிறைவுண்டு.
இவ்வாறான இலக்கிய வடிவத்தின் மூலமாக உங்களுடைய கருத்துக்களை அல்லது நீங்கள் சொல்ல விரும்பிய விடயங்களை இலகுவாக வாசகர்களிடம் கொண்டு செல்வதில் வெற்றி பெற்றிருப் பதாகக் கருதுகின்றீர்களா?
நிச்சயமாக. அதனால்தான் அவ் வடிவங்களை முன்னெடுத்து 40 ஆண்டுகள் கழித்தும் இப்படி ஒரு கேள்வியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இனப்பிரச்சினை, போர்க்கால வாழ்வு போன்றவற்றை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதியுள்ளீர்கள்.
உங்களுடைய ஆங்கில இலக்கியங்களின் வாசகர்களாக யார் இருக்கி ன்றார்கள்? அவர்களிடமிருந்து உங்களுக்கு எவ்வாறான பிரதிப லிப்புக்கள் கிடைத்துள்ளன?
தமிழோ, ஆங்கிலமோ என் சக மனிதர் மீதான என் கடமைகளை நிறைவேற்றும் பொறுப்புடனேயே என் எழுத்துக்கள் அமைந்துள்ளன. என் ஆங்கில எழுத்துக்களைப் பொறுத்தவரையில் அவற்றின் வாசக இலக்கு முக்கியமாக இந்திய உபகண்டமாகவே இருந்தது. தமிழைப் படிக்க இயலாத எம் பிராந்திய வாசகர்களை அடைவதில் அவை கணிசமான வெற்றியும் பெற்றுள்ளன.
என் கதைகள், கவிதைகள் நாவலின் பகுதிகள் போன்றவை இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு மதிப்பார்ந்த தேர்வுத் தொகுப்புக்களில் இடம்பெற்றன. முதல் ஆங்கில நாவலான "The Whirlwind" சென்னையில் வெளியிடப்பட்டுப் பரவலான கவனமும் வரவேற்பும் பெற்றது. "In their Own Worlds" சிறுகதைத் தொகுப்பு இலங்கை சாஹித்ய மண்டலப் பரிசு பெற்றது. என் இரு நாவல்களும் "கிறேஷியன்" குறும்பட்டியலில் இடம்பெற்றதன் மூலம் தென்னிலங்கையில் நிறைந்த வாசகர் கவனத்தையும் பெற்றுத் தந்தன. "Rails Run Parallel" என்கிற இரண்டாவது நாவல் Fairway Best Novel Award, Godage Best Novel Award என்பவற்றைப் பெற்றது.
வெளிக் கவனங்களைத் தவிர்த்திருக்கும் இன்றைய எம் இலங்கைத் தமிழ்ச் சூழலில் இவற்றை நானே கூற நேரிட்டிருப்பது கூச்சம் தருவதே. எனினும் வேறு வழியில்லை. உண்மையில் என் ஆங்கில எழுத்துக்களுக்குக் கிடைத்த அறிமுகமும் அங்கீகாரமும் தமிழில் கிடைக்கவில்லை என்பது மகிழ்வின் பாற்பட்டதா அல்லது கவலையின் பாற்பட்டதா என்பது தெரியவில்லை.
மூன்று தசாப்தகால போர்ச்சூழலில் நாங்கள் எதிர்கொண்ட கொடுமைகள், எமது வாழ்வுமுறைகள், விருப்பங்கள், இவற்றையெல்லாம் எமக்குள்ளேயே எழுதிக்கொண்டிருப்பதை விடுத்து வேற்று மொழியினர் முக்கியமாக எமது சிங்கள சகோதரர்கள் மற்றும் இந்தியாவின் பிற மொழியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலிலேயே ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினேன். மேலே சொன்ன எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் கூட என் ஆங்கில எழுத்தினூடாக வந்ததுதான்!
கடந்த 50 வருடகாலமாக எழுதிவருகின்றீர்கள். தமிழ்ப் புனைகதை இலக்கியத்தைப் பொறுத்தவரையில் இந்த அரை நூற்றாண்டில் ஏற்பட் டுள்ள மாற்றங்களாக நீங்கள் எதனைக் குறிப்பிடுவீர்கள்?
நடை, கரு, களம், தொனி, வீச்சு, வடிவம் எல்லாமே பரந்துபட்டிருக்கின்றன. மாறுபட்ட பல்வேறு எழுத்தாளுமைகள், சிங்கப்பூர் – மலேசிய இலக்கியங்களின் புத்தெழுச்சி, புலம்பெயர் இலக்கியம்- எனப் பல்முனைப் பட்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆங்கில மொழியிலும் இலக்கியம் படைப்பவர் – படிப்பவர் என்ற அடிப்படையில் உங்களிடம் இந்தக் கேள்வி. ஆங்கில புனைகதை இலக்கியங்களுடன் ஒப்பிடும் போது தமிழ் இலக்கியங்களின் தரம் எந்த வகையிலாவது பின்தங்கிய நிலையில் இருப்பதாகக் கருதுகின்றீர்களா? அப்படியாயின் அது குறித்துக் குறிப்பிடுங்கள்.
ஆங்கிலப் புனைகதை இலக்கியங்கள் என்று மட்டுமன்றி, ஆங்கிலம் வழி அறிமுகமான உலக இலக்கியங்களுடன் ஒப்பிடும்போது கூட, தமிழ் இலக்கியங்களின் தரம் எவ்வகையிலும் தாழ்ந்துவிட வில்லை.
ஆங்கிலத்தில் வெளியான உங்கள் ஆக்கங்கள் பற்றி?
எனது முதலாவது தொகுதி "The Sparks" 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளியாயிற்று. இதைத் தொடர்ந்து இரண்டாவது தொகுதியான "In Their Own Worlds” 2000 ஆம் ஆண்டு கொடகே வெளியீடாக வந்தது. இத்தொகுதி நான் சற்றும் எதிர்பார்த்திராத விதமாக அவ்வாண்டில் சாஹித்ய மண்டலப் பரிசைப் பெற்றது. தொடர்ந்து “The Northern Front” என்ற கதைத் தொகுதி கொடகே வெளியீடாக 2005 ஆம் ஆண்டிலும் “Survival and Simple Things” கவிதைத்தொகுதி 2003 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலும் வெளியாகின. எனது முதலாவது ஆங்கில நாவல் “The Whirlwind” 2010 ஆம் ஆண்டு வெளிவந்தது.
இந்திய அமைதி காக்கும் படையின் காலத்து அவலங்களைக் கூறும் இந்நாவலை சென்னையிலுள்ள வி.யூ.எஸ். பதிப்பகம் முன்வந்து வெளியிட்டு விழாவும் நடத்தியது.இந்நாவல் அவ்வாண்டு "கிறேஷியன்" குறும்பட்டியலில் இடம் பெற்றது. அடுத்த நாவலான "Rails Run Parallel” 2015 ஆம் ஆண்டு கொழும்பில் Paw Print பதிப்பளர்களால் வெளியிடப்பட்டது. ஃபெயர்வே மற்றும் கொடகே விருதுகளைப்பெற்ற நாவல் இதுதான். அத்துடன் அவ்வாண்டுக்கான "கிறேஷியன்" குறும்பட்டியலிலும் அது இடம் பிடித்தது.
வெளியிடப்பட்ட தமிழ் நூல்கள் பற்றி ...?
1966 ஆம் ஆண்டு எனது முதலாவது சிறுகதை "கலைச்செல்வி" யில் பிரசுரமாகியது. 1970ஆம் ஆண்டு மொறட்டுைவ தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்று கொண்டிருந்த வேளையில் எனது முதலாவது சிறுகதைத் தொகுப்பான "பார்வை" வெளியாயிற்று. எனது ஏனைய நூல்களாக, கடுகு (குறுங்கதைகள்-–1975), ஒரே ஒரு ஊரிலே (சிறுகதைத் தொகுப்பு-–1975), ஒட்டுமா (நாவல்-–1978), முளைகள் (சிறுகதைத் தொகுதி-–1982), கிருஷ்ணன் தூது (சிறுகதைத்தொகுப்பு–1982), ஆரைகள் (நெடுங்கதைகள்–1985), இன்னொரு வெண்ணிரவு (சிறுகதைத் தொகுப்பு –1988), காலங்கள் (சிறுகதைத் தொகுப்பு–1994), யாழ்இனிது (சிறுகதைத் தொகுப்பு –1908), ஒரு பிடிமண் (சிறுகதைத் தொகுப்பு-–1999), எழுதப்பட்ட அத்தியாயங்கள் (சிறுகதைத் தொகுப்பு–2001), இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம் (இலக்கியக்கட்டுரை–2005), சாந்தனின் எழுத்துலகம் (தேர்வுத் தொகுப்பு–-2006), விளிம்பில் உலாவுதல் (குறுநாவல்கள்–2007), உலக இலக்கியம் (இலக்கியக்கட்டுரைகள்–2010), சிட்டுக்குருவி (2014) ஆகியன வெளிவந்துள்ளன.
எனது ஆக்கங்கள் சில சிங்களம், ஆங்கிலம், ஹிந்தி, ரஷ்ய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரமாகியுள்ளன. 1999 ஆம் ஆண்டு கொடகே நிறுவனத்தினரால் இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டது.
சுமார் ஐந்து தசாப்த கால உங்களது இலக்கியப் பயணம் பற்றி சுருக்க மாகப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
இலக்கியப் பயணங்களும் வாழ்க்கைப் பயணங் கள்தான். இறக்கம் –- ஏற்றம், துயரம் –-மகிழ்வு,- போட்டி -– பொறாமை, தோல்வி- – வெற்றி என்பன தவிர்க்க முடியாதவை. முடிந்ததைச் செய்தேன் என்ற நிறைவும் முடிந்ததைச் செய்வேன் என்ற நம்பிக்கையும் என் எழுத்தின் பேரேட்டில் மீதியாகவுள்ளன என்றார் எழுத் தாளர் சாந்தன்.
நன்றி வீரகேசரி- சங்கமம் (04/07/2018)
0 comments