'டிஜிட்டல்' அச்சு ஊடகத்துக்கு சவாலா? - ஜீவா சதாசிவம்
August 12, 2018
இலங்கைத் தமிழ் பத்திரிகை உலகில் மாத்திர மல்ல, தமிழ் பத்திரிகை உலகில் வீரகேசரிக்கு என தனியான இடமுண்டு. அது அதன் வயதோடும் அனுபவத்தோடும் தொடர்புடையது. இலங்கையின் மூத்த தமிழ் பத்திரிகையாகவும் தினம் தன் வீடு வரும் விருந்தாளியாக நாளாந்தம் வாசகர்கள் வீட்டுக்கதவைத் தட்டும் வாஞ்சை கொண்டது. இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பே இலங்கை யில் வாழ்ந்த இந்தியத் தமிழ் சமூகத்தினரால் தொடங்கப்பட்ட வீரகேசரி ஆரம்ப காலங்களில் இந்திய பத்திரிகை கலாசாரத்துடன் தொடர்புடையதாகவே வளர்க்கப்பட்டு வந்துள்ளது.
இந்த எண்தொன்பதாவது ஆண்டு பயணத்தில் இந்திய செல்நெறியின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு தனித்துவமான பத்திரிகையாக வீரகேசரி தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது என்பது மறுக்கப்படாத உண்மை. குறிப்பாக இந்தியத் தாக்கத் தோடும் நேரடியாகவே இந்தியர்களான தமிழர்களால் அது தொடங்கப்பட்டாலும் இந்திய சொல்லாட்சி நடைமுறையில் இருந்து விலகி வீரகேசரி இலங்கை தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவகையில் தன்னை புடம் போட்டுக் கொண்டுள்ளது.
எத்தனையோ பத்திரிகைகள் வெளிவந்த போதும் கூட அவற்றின் மூலமான போட்டித்தன்மை நிலையை எதிர்கொண்டு அவற்றை போட்டியாக மாத்திரம் கொள்ளாது நட்புடன் கூடிய சகோதர பத்திரிகையாக ஏற்று இன்றைய நாளில் இலங்கை பத்திரிகை வரலாற்றில் தின கரன், வீரகேசரி பத்திரிகைகள் நீண்ட வரலாற்றைக் கொண்டு இயங்கி வருகின்றன. இதில் தினகரன்அரசாங்க பத்திரிகை என்றவகையில் நின்று நிலைத்து செயற்படுவதற்கும் வீரகேசரி தனியார் பத்திரிகை என்றவகையில் அது சந்தித்திருக்கக்கூடிய சவால்கள் சாதாரண மானவை அல்ல.
உள்நாட்டு யுத் தம் இடம்பெற்ற இந் நாட்டில் செய்தித் தணிக்கைகள் எல்லாம் நடை முறையில் இருந்த போது அதே தமிழ் சமூகத்தை பிரதி நிதித்துவம் செய்து நடுநிலை பேணி தனியார் நிறுவனமாக செயற்படுவது என்பதும், இலங்கையில் ஊடக நிறுவனங்களும் ஊடகமும் எதிர்கொண்ட பல்வேறு அச்சுறுத்தல்களை தாண்டி எண்பத்தெட்டு ஆண்டுகளை கடந்து பயணிக் கிறது என்பது வரலாற்று சாதனை என்பதனை மறுப் பதற்கில்லை.
இந்த பயணத்தில் தனியார் நிறுவனமாக அது நின்று நிலைக்க அதன் முகாமைத்துவ நிர்வாக சபை எடுத்துக்கொண்ட அக்கறைக்கு மேலாக அதில்
பணியாற்றிய ஊடகவியலாளர்கள் ஊழியர்கள் மற்றும் விநியோகத்தர்கள் ஆற்றியிருக்கக் கூடிய பணிகள் போற்றுவதற்குரியன. அத்துடன் வீரகேசரியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வாசகர்களின் பங்கும் அளப் பரியதே!
தணிக்கை காலத்தில் இடைவெளியில் என்ன செய்தி வந்திருக்கக் கூடும் என்ற அனுமானத்தை பெற்றுக்கொண்டு எமது பத்திரிகை யோடு புதியதொரு வாசிப்பு சூழலில் அவர்கள் இணைந்து பயணித்தி ருக்கிறார்கள். அவர்கள் கைவிட்டிருக்கும் பட்சத்தில் மேற்படி எந்த சவால்களையும் எதிர்கொள்ள எந்தவொரு தரப்பினருக்கும் முடியாது போயிருக்கும். எனவே இந்த வாசகர்களை நோக்கி இப்போது திரும்பியிருக் கும் புதிய எண்ணிம உலக (Digital World) ஊடக செல் நெறியில் தன்னை '' கேசரி'' எவ்வாறு நிலை நிறுத்திக் கொள்ளப் போகிறது என்பதே இப்போதைய சவாலாக உள்ளது.
இன்றைய எண்ணிம உலகம் என்பது சமகால மானுட புரட்சி யோடு தொடர்புடையது. தொண்ணூறு வயதை எட்டும் ஒரு நிறுவனம் என்பது மூன்று தலை முறைகளைக் கடக்கின்றது. வீரகேசரி ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் அது கைத்தொழில் புரட்சியோடு (Industrial Age) வந்த தலைமுறையினர் கையாண்ட காலம். எழுத்தினை அச்சுக்கோர்த்து (Letter Press) அதனை அச்சிட்டு ஒப்புநோக்கில் பிழையிருப்பின் அதனை கழற்றி மாற்றி திரும்பவும் கோர்த்து அச்சிட்டு எடுப்பது படங்களுக்கு "புளோக்" செய்வது என முற்றுமுழுதாக ஒரு தொழிற்சாலை போல இயங்கிய காலத்தில் அது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதுவே கைத்தொழில் யுகத்தில் இருந்து தொழில்நுட்பயுகம் நோக்கி முன்னேறிய காலகட்டத்தில் (DTP Desk Top Publication) எனப்படும் கணினி உதவிகொண்ட Off set அச்சு ஊடக முறைமைக்குள் தன்னை உள்வாங்கிக்கொண்டு வீரியமாக செயற்பட ஆரம்பித்திருக்கின்றது. அதில் வீரகேசரி வெற்றி பெற்றது என்பது கொண்டாடப்படவேண்டியது.
ஒரு கைத்தொழிற்சாலை போன்று இயங்கிய நிறு வனம் அவற்றை அப்படியே ஒதுக்கி தொழில்நுட்ப யுகத்திற்கு (Technological Age) தன்னை தயார் செய்துகொண்டு அச்சுப்பதிப்பு துறையில் முன்னிலை நிறுவனமாகவும் மாற்றிக்கொண்டது எனலாம். இப்போதைய நிலையில் இலங்கை பத்திரிகை துறையில் மாத்திரமல்ல அச்சுத்துறையிலும் மிகச்சிறந்த அச்சு இயந்திரங்களையும் தொழில்நுட்பத்தையும் கையாளும் திறன் கொண்ட நிறுவனமாக வீரகேசரியும் திகழ்கின்றது. இது கொண்டாடப்பட வேண்டியதே.
கைத்தொழில் புரட்சியுடனும், தொழில்நுட்ப புரட்சி யுடனும் பயணித்த இந்த எண்பத்தொன்பதாண்டு பயணத்தில் இறுதி கட்டத்தில் ஒரு அச்சு ஊடகம் என்றவகையில் வீரகேசரி எதிர்கொண்ட அல்லது எதிர்கொள்ளும் சவால் தற்போதைய தகவல் யுகம் (Informational Age) அச்சு ஊடக கலாசாரத்திற்கு சவா
லாக வாசிப்பினை Visual முறைக்கு மாற்றிய மையாகும். அச்சு ஊடகம் (press media) Electronic media என்றிருந்த நிலையில் இருந்து Visual Media என்ற புதிய செல்நெறியை தகவல் யுகம் தோற்றுவித்துள்ளது.
காலாகாலமாக ஊடகவியலாளர் சந்திப்பை Press meet என சொல்லிவந்த வரலாற்றை புரட்டிப்போட்டு Media Conference என கூறவைத்த இயல்புநிலை இங்குதான் தோன்றியது. Press meet என்பதை நேரடியாக மொழிப்பெயர்த்தால் அச்சு செய்பவர் களை சந்திப்பது. Press என சொன்னால் அது அச்சகம் என்ற நேரடி அர்த்தத்தோடு நோக்காமல் அதனை ஊடகம் என கருதும் அளவுக்கு அச்சு ஊடகம் செல்வாக்கு பெற்றிருந்த உலக ஊடக செல்நெறியில் தொழில்நுட்ப புரட்சி வானொலி,தொலைக்காட்சி ஊடாக Electronic media கலாசாரத்தை உள்வாங்கத் தொடங்கியது.
பழக்க தோஷத்தில் இன்றும் கூட Press meet என்று சொல்லப்படுவதும் உண்டு. அது இன்றைய நிலையில் கூட அச்சு ஊடகத்தின் பலத்தை நிரூபிக்கும் வாசகம் என்பது வேறு விடயம். இன்றும் கூட நாளாந்தம் பத்திரிகைகளை விநியோகிக்கும் வாகனங்கள் Press என்றே தனது பெயர்ப்பலகைகளைக் கெண்டு செல் கின்றன. அது அச்சகம் ஒன்றின் வாகனம் என்பதற்கு பதிலாக அது ஊடக வாகனம் எனும் அர்த்தத்தைக் கொடுப்பது என்பது அச்சு ஊடகத்தின் வலிமையை காட்டுவதே. எனினும் Letter Press காலத்திலும், Off set காலத்திலும் இந்த அச்சு ஊடகம் எந்தளவக்கு வலிமை பெற்றதோ அதற்கு மாறாக தகவல் யுகமானது அச்சு உடகத்திற்க சவாலாக அமைந்துவிட்டது.
வாசகர்கள் வாசிப்பதற்கு அது அச்சிடப்பட வேண்டிய தேவை இல்லை என்னும் நிலைமையை இன்றைய தகவல் யுகம் (Informational Age) அமைத்துக்கொடுக்கின்றது. எனவே தொண்ணூறு வருட காலம் அச்சு ஊடகத்துறையில் தனது வாசகர் கைகளுக்கு தனது அச்சுப் பலத்தால் செய்திகளை வழங்கிவந்த நிறுவனம் ஒன்று அந்த அச்சகத்துறை அல்லாத இன்னுமொரு மாற்று வழியில் அதே வாசகர்களுக்கு தனது செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது ஒரு புதிய சவாலே.
அத்தகைய எண்ணிம உலகிற்கு வீரகேசரி பயணிப்பது அத்தனை சவாலானது அல்ல. அது ஏற்கனவே அதன் வயதினதும் அனுபவத்தினதும் அடிப்படையில் தொழிநுட்பங்களை எதிர்கொள்ளும், உள்வாங்கும் வல்லமை கொண்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இங்குள்ள சவால் என்னவெனில் முதல் இரண்டு கட்டத்திலும் தனது வாசகனை தான் பயணித்த அச்சு ஊடகத்தில் வலுவாக்கி வசப்படுத்திய வீரகேசரி இப்போது அந்த வாசகனின் புதிய உலகத்துக்கு ஏற்ப அச்சு ஊடகம் அல்லா வகையில் ஏனைய உலகத்துக்கு ஏற்ப தனது சேவையை விஸ்தரிப்பதாகும். தன்னை அறியாமலே ஒவ்வொருவர் கைக்கும் இலத்திரனியல் உபகரணங்களை இந்த உலகம் பரிமாற்றிவிட்டிருக்கிறது.
ஊருக்கொரு தொலைபேசி, வீட்டுக்கொரு தொலைபேசி என்றிருந்த நிலைமை மாறி அவை நிலையானதாக (fixed) அல்லாமல் நடமாடும் தொலைபேசியாக (Mobile) வந்தது மட்டுமல்லாமல் அதுவே Smart Phone எனப்படும் இன்னுமொரு கட்டத்தை மிக வேகமாக கொண்டு சென்றுவிட்டது.
இந்த வேகம் என்பது வீரகேசரியின் முதல் 75 ஆண்டுகளுக்குள் நகர்ந்த வேகத்தை விட இறுதி 15 ஆண்டுகளில் இடம்பெற்ற பாய்ச்சல் எனலாம்.
இந்த Smart Phone கூட கடந்த ஐந்தாண்டு காலத்தில் Smart Devices எனப்படும் அதிவேக பாய்ச்சலைக் கொடுத்துள்ளது. எனவே கையில் ஒரு கருவியை தன் வசம் வைத்திருக்கும் வாசகனுக்கு நாளைக்கு பத்திரிகையில் வரப்போகும் செய்தி என்ன என்பதை இன்றே ஒளி வடிவில் அல்லது ஒலி வடிவில் கொடுத்துவிடும் பணியை இந்த Smart Devices செய்து விடுகின்றது. வாசகன் விரும்பியோ விரும்பாமலோ இந்த Smart Device பாவனைக்கு தள்ளப்பட்டுள்ளான் என்பது உலகச் செல்நெறி.
அவ்வாறு ஒவ்வொரு Smart Devices மாத்திரமல்ல அதன் கீழ் கையாளக் கூடிய Appsகளையும் தகவல் யுகம் நாளாந்தம் வழங்கிக்கொண்டு இருக்கின்றது. Face Book, Twitter, Instagram, IMO, Whats App, Viber என இன்னோரன்ன Appsகளில் ஊடாக Visual ஆக அச்சடிக்காமலே 'சமூக ஊடகம்' செய்திகளைத் தந்து விடும் எண்ணிம உலகச் செல்நெறியில் இத்தனை ஆண்டுகாலம் அச்சு ஊடகமாகவே செயற்பட்டு வந்த வீரகேசரி எவ்வாறு தன்னை வாசகரிடத்தில் நிலைநிறுத்திக் கொள்ளப்போகின்றது என்பதே இன்றைய சவால்.
வானொலி என்பது அச்சு ஊடகத்துக்கும் அடுத்து வந்த ஓர் இலத்திரனியல் ஊடகம். அந்த வானொலி ஊடகத்தை கையாண்டதில் உலகப் பிரசித்திபெற்ற BBC (பிபிசி) பல மொழிகளில் வானொலியை நடாத்தி வந்தது. இன்றைய தகவல் யுகமும் சமூக ஊடக வலையமைப்பு காரணமாகவும் BBC தனது வானொலிச் சேவையைக் கைவிடும் நிலைக்கு வந்துள்ளது. பி.பி.சி மறுசீரமைப்பு செய்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.
எதிர்வரும் பத்தாண்டுகளில் இலங்கை அத்தகைய எண்ணிம உலகத்துக்குள் உள்வாங்கப்படுவது உறுதி. அத்தகைய அடுத்த தசாப்தத்தை எதிர்கொள்ள வீரகேசரி எத்தகைய வியூகங்களை வகுக்கப்போகின்றது என்பதிலேயே அதன் நூறாவது ஆண்டு தீர்மானிக்கப் போகின்றது.
வீரகேசரியைப் பொறுத்த வரையில் அதன் பலமான அம்சங்களைக் கொண்டு முன்னோக்கிச் செல்வது சவாலான விடயம் அல்ல. அதன் வயது, அனுபவம், வாசகர் வட்டம், தொழில்நுடபத்தை உள்வாங்கும் நிறுவன கலாசாரம், அர்ப்பணிப்பு மிக்க ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகத்தர்கள் என ஓர் ஊடக வலையமைப்புக்குரிய அத்தனை வாய்ப்புகளும் அதற்கு பலமான அம்சமாகும்.
அதேநேரம் எண்ணிம உலகத்தில் ஒரு நிறுவனமாக அல்லாமல் தனி மனிதன் ஒருவன் கூட ஊடக நிறுவனமாக செயற்பட்டுவிடக்கூடிய தகவல் தொழிநுட்ப யுகத்தில் அது எதிர்கொள்ளும் சவால் போட்டி ஊடகங்களே. ஊடக சமூகம் என ஒரு வட்டத்திற்குள் இருந்து கொண்டு சமூகத்துக்கு செய்திகளைக் கொண்டு சென்ற பாரம்பரிய நிறுவனம் 'சமூக ஊடகம்' என தலைகீழாக புரண்டு நிற்கும் ஊடகத்துறையில் தன்னை எவ்வாறு உருமாற்றிக்கொள்ளப்போகின்றது என்பது அதற்கான அச்சுறுத்தலும் சவாலும் ஆகும்.
வீரகேசரிக்கு செய்தியை அனுப்பும் ஒரு செய்தியாளர், கூடவே இன்னுமொரு இணையத்தளத்துக்கும் அதே செய்தியை அனுப்பி விடுகிறார். அந்தச் செய்தியை அடுத்த நாள் காலை வாசகர்கள் கைக்கு அச்சடித்து வழங்குவதற்கு முன்பதாக எங்கோ ஒரு நாட்டில் இருந்து கொண்டு ஒரு கணிணியை மட்டும் வைத்துக்கொண்டு தனிநபராக இயங்கும் ஒருவர் அதனை செய்தியாக்கி பரபரப்பான சமூக ஊடகத்தின் ஊடாக சலசலப்பை ஏற்படுத்தி விவாதங்களை தோற்றுவித்து, விமர்சன கட்டத்துக்கு அந்தச் செய்தி சென்ற பின்னரே செய்திப்பத்திரிகையில் அது முதன் முறையாக எழுதப்படுகின்றது.
அதற்கான பதிற்குறியை இட எண்ணும் ஒருவர் அடுத்த நாள் பத்திரிகைக்கு அனுப்பினால் அதற்கு மறு நாளே அதனைப் பிரசுரிக்க முடியும். ஆனால், மூன்று நாளைக்கு முன்பதாகவே அது முகநூலில் விவாதிக்கப்பட்டு வேறு ஒரு கட்டத்தை அடைந்திருக்கும். எனவே அச்சு ஊடகம் என்ற வகையில் அது hot news தரும் பாங்கினை இயல்பாகவே இழந்து விடுகின்றது.
ஆனால், தனிநபர் கைகளில் இயங்கும் ஊடக ஒழுக்கமற்ற, விழுமியமற்ற அல்லது அதுவென்றால் என்னவென்று தெரியாத பொறுப்புக்கூறல் இல்லாதவர்களோடு போட்டியிட வேண்டிய காலகட்டம் வீரகேசரி போன்ற பாரம்பரிய செய்தி நிறுவனங்களுக்கு ஏற்படுவதே இங்கு பெரும் சவாலாக உள்ளது.
எனினும், வீரகேசரியின் 75ஆவது ஆண்டு நிறைவில் முதல் பத்திரிகையில் இருந்து அன்றைய பத்திரிகை வரையான முகப்பக்கங்களை அச்சிட்டு வெளியிட்ட வீரகேசரி சேகரிப்பு பலராலும் புகழ்ந்து பேசப்பட்டதோடு அதன் முக்கியத்துவமும் உணரப்பட்டது. இன்று என்னதான் Visual ஊடகக் கட்டமைப்பு வந்தபோதும் ஆழமான செய்திகளையோ தகவல்களையோ பதிவு செய்வதற்கு அச்சு ஊடகத்தின் தேவை பற்றிய பேசும் காலமும் இருந்துகொண்டே இருக்கின்றது.
சில நேரங்களில் Visual mediaவில் வரும் செய்திகளையோ கட்டுரைகளையோ அச்சிட்டு சேமித்து வைக்கும் நடைமுறைகளும் உள்ளன. ஏனெனில் ஒரு நொடியில் வைரஸ் தாக்கத்தால் அழிந்துபோகும் அபாயம் Visual mediaவில் உள்ளது. தொண்ணூறு ஆண்டுகளிலும் கறையான் அரித்துவிடாமலும் பாதுகாக்கக் கூடிய அச்சு கலாசாரத்துக்கு உலகில் ஓர் இடம் இருந்து கொண்டே இருக்கின்றது.
இந்தப் பலமான பக்கத்தை தனதாக்கி மாறிவரும் எண்ணிம சூழலுக்கு ஏற்ப சமூக ஊடக வலைத்தளத்துக்கு தீனி போடக்கூடியதான வியூகங்களைக் கையாண்டு அத்தகைய மேலோட்ட வாசகர் களையும் உள்ளீர்த்தவாறே தனது பாரம்பரிய பயணத்தை புதிய தகவல் தொழில்நுட்ப மாற்றங்களையும் உள்வாங்கியவாறே வீரகேசரி இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மொழிவழிச் சமூகத்தின் அவா.
நன்றி வீர கேசரி 06/08/2018
0 comments