நாட்கூலிக்காக ஜீவ மரணபோராட்டமா? - ஜீவா சதாசிவம்

August 17, 2018


ஒரு சமூகம் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு நாள் ஜீவனோபாயத்துக்கான போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றது. ஒரு முறைசார் முன்னணி தொழில்துறையான பெருந்தோட்ட முறையிலேயே இந்தத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இதனை காலங்காலமாக செய்து வருவது ஒரு புதிய விடயமல்ல.

எனினும் அக்கரப்பத்தனை, வெவர்லி தோட்டத்தில் 11/08/2018 முதல் 14/08/2018 வரை இடம்பெற்றுவந்த உணவுத் தவிர்ப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் ஒரு வித்தியாசமான கவனயீர்ப்பைக் கொடுத்திருந்தது. தொழிலாளியின் ஜீவனோபாயத்துக்கான ஜீவ மரண போராட்டமாகவே இப்போராட்டம் அமைந்திருந்தமை வேதனைக்குரிய விடயமாகும். சவப்பெட்டியில் உயிருடன் தன்னுடைய உடலை வைத்து தனது ஜீவனோபாயத்துக்காக தொழிலாளர்கள் போராடும் இத்தருணத்தில் அவர்களுடன் வேறு யார் இணைந்து போராடுவதற்கு தகுதியாக உள்ளனர் என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும். 

வெவர்லி தோட்ட பொது மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தவரை   சவப்பெட்டியில் வைத்து டயகம – தலவாக்கலை பிரதான பாதைக்கு கொண்டு வந்து பாதையில் வைத்துப் போராட்டம் நடத்தினர்.   வெவர்லி தோட்டத்தின் 5  பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் இணைந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு தொடர்ந்து போராட்டத்துக்கு ஆதரவு வழங்கினர்.  இவ்விடயம் தொடர்பில்   தமிழ் முற்போக்குக் கூட்டணியினூடாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் கவனத்துக்குக்  கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இக் கோரிக்கைகள் முன்வைப்புக்கள் வழமைபோல தற்காலிகமானவையே...

இப்போராட்டத்தைப் பற்றிய பல பதிவுகள், காணொளிகள் என பலதரப்பட்ட விடயங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறு  பதிவுகளை பதிவிட்டு விட்டால் மாத்திரம் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொடுத்து விட முடியுமா? தொழிலாளர்களுக்கான போராட்டங்களை இதுவரை தொழிலாளர்கள் மாத்திரமே முன்னெடுத்து வந்துள்ளனர். தொழிலாளர்கள் அல்லாத வேறு தொழில்துறை சார்ந்தவர்கள்  இந்தப்போராட்டங்களில் ஏற்கனவே பங்குபெறாமல் இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது.

பொதுவாக தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தமான கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவுள்ள காலகட்டத்திலேயே பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதாவது இது ஒரு பருவகால கதையாகவே  அமைந்து விடுகின்றது. 

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவுள்ள நிலையில் மீண்டும் பழைய தொடர் பல்லவிதான். இதில் ஒரு நகைச்சுவையான விடயமொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும். 

தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி பேச்சு ஆரம்பித்தவுடனேயே அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பெருந்தோட்ட நிறுவனங்களின் முதலாவது அறிவிப்பே  "உலக சந்தையில் தேயிலையின் விலை அதிகரிப்பு." ஆகையால் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இவ்வாறான தொடர் அறிவிப்பையே கடந்த 25 வருடங்களாக பெருந்தோட்ட நிறுவனங்கள்  அறிவித்து வருகின்றன.   இவ்வாறான அறிவிப்பு கடந்த  25 வருடங்களாகவே தோல்வியடைந்த  திட்டமாக இருக்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது. 

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப் போகும் காலத்தை விட அது இல்லாத காலத்தில்  ஏன் போராட்டத்தை முன்னெடுக்க முன்வரக்கூடாது என்ற கேள்வியும் எழுகிறது. இந்த முன்னெடுப்புக்குத் துணைபோகும் விதமாகவே அதில் கையொப்பமிடும்  தொழிற்சங்கங்களும் கையெழுத்தை இட்டு அமைதியாக இருந்தும் விடுகின்றன. 

தொழிலாளர்களின் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் வருடத்தில்  விலை அதிகரிப்பு என ஒரே காரணத்தைக்  காட்டும்  தரப்பினர்  அதனை மீள்பரிசீலனை செய்தால் என்ன? அரசியலுக்கு அப்பால் பொதுக் கவனத்தை ஈர்க்கும் முகமாகவே இந்தப்போராட்டத்தை "தொழிலாளர்களே" நடத்துகின்றனர். இந்நிலையில், தொழிலாளர்கள் அல்லாதவர்கள் இந்தப்போராட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கப்போகின்றனர்? வெளித்த ரப்பினர் எவ்வாறு முன்னெடுக்கவுள்ளனர் ?

தொழிலாளர்களுக்கான ஆதரவுத்தளம் வெளியிலிருந்து வராமல் இருப்பதற்கான காரணம் என்ன? இது பற்றியே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அரசியல் கலப்பு அல்லாமல் சில போராட்டங்களை முன்னெடுக்கும் போது  அவ்விடத்தில் ஓர் அரசியல்வாதி தலையிடும் போது ஏனைய தரப்பினரால் இது அரசியல் மயமாக்கப்பட்டு கைவிடப்படுகின்ற நிலையும் ஏற்பட்டு விடுகின்றது.  மீண்டும் மீண்டும் எத்தனையோ தடவைகள் இவ்வாறு செய்யும் போது தொழிலாளிக்கும் அரசியல்வாதிக்கும் மட்டும் தான் என இப்போராட்டங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றனவா?

இவ்விரண்டையும் கடந்த ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு மலையகத்தில் உள்ள ஏனைய தொழில்துறையினரோ முகநூல் போராளிகளோ அல்லது ஏனைய தரப்பினரோ ஏன் ஒரு கலந்துரையாடல் மட்டத்தில் மாத்திரமே இதனை வைத்துக்கொள்கின்றனர்? ஏன் அதனை ஒரு போராட்ட வடிவத்துக்குக் கொண்டு வராதுள்ளனர்?

நாட்டின் உயர்பீடமான  பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணி பல்வேறு விடயங்களுக்கு  பிரேரணை கொண்டு வந்து  முழுநேர விவாதத்தை நடத்தும்   நிலையில், அவர்களால் தோட்டத் தொழிலாளர் விடயத்தில் கவனம் செலுத்தி  முழுநாள் விவாதமொன்றை ஏன் கொண்டு வர முடியாது? இந்நாட்டுக்கு தேயிலையின் வருகை,  அதன் பங்களிப்பு பற்றிய வரலாறு அனைத்து மக்களும் முழுமையாக அறிந்தவிடயமே.. ஏன் அதற்குத் தனியானதொரு முக்கியத்துவத்தை அவர்களால் கொடுக்க முடியாது? 

பாராளுமன்றத்தில் அவ்வப்போது, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் அதிகரிக்கப்பட வேண்டும்,  கூட்டு ஒப்பந்தம் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என பேச்சளவில் மாத்திரம் கடந்த இரு தசாப்தங்களாக  இருந்து வருகின்ற நிலையிலும் இது பற்றி முழுமையான முழுநேர காத்திரமான பேச்சுக்கள் எங்கும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. இவ்வாறான பேச்சுக்கள் பொதுமைப்படுத்தப்படாததற்குக் காரணம் என்ன? 

ஜே.வி.பி.க்கு தோட்டத் தொழிலாளர் சங்கம் என்ற ஒன்று இருக்கின்றது. இந்நிலையில்  அவர்கள் ஏன் அக்கட்சியினூடாக விவாதத்தைக் கொண்டு வரமுடியாது-? 25 வருடகாலமாகத்   தோல்வியடைந்த திட்டம் மீண்டும், மீண்டும் ஏன்  புதுப்பிக்கப்பட வேண்டும்-? அதனை மீளாய்வு செய்வதற்கு ஏன் தயங்குகின்றனர்? 

இந்தியாவில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு   ஒட்டுமொத்த இலங்கை, இளைஞர், யுவதிகள் உட்பட பலதரப்பட்ட தரப்பினரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். அத்துடன் சமூகவலைத்தளப் பதிவுகள் உட்பட பல்லூடக வழியில் எதிர்ப்பை வெளியிட்டனர். 

வீதிக்கு இறங்கினார்கள். அயல்நாட்டு அசம்பாவிதத்துக்காக 'WE SUPPORT JALLIKATTU' என்னும் குரல் எழுப்பும் நம்மவர்கள் ஏன்  இலங்கையில் முக்கிய தொழில்துறையினராக விளங்கும் இந்தத் தொழில் தரப்பினருக்கு ஆதரவாக போராட்டத்தில் தாமும் இணைய முடியாது?

நன்றி வீரகேசரி (16-08-2018)

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images