கட்சி தாவல்களும் : காட்சி மாற்றங்களும் - ஜீவா சதாசிவம்
November 05, 2018
நாமே உருவாக்கிக் கொண்ட ஜனநாயகத்தை நாமே கேலி செய்யும் நிலையில் தான் இன்றைய நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு கிழமைக்கு முன்னால் நமது பாராட்டைப் பெற்றவர்களை நாமே தூற்றுகிறோம். கடந்த வாரம் விமர்சிக்கப்பட்டவர்கள் இந்த வாரம் பரவாயில்லை என்ற நிலைக்கு யோசிக்க வைக்கிறார்கள். அடுத்த வாரம் என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் அவ்வப்போது எதிர்பாராத நிகழ்வுகள்...
இது இவ்வாறிருக்க தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை முன்வைத்து நாடெங்கிலும் தொழிலாளர்களுக்கான ஆதரவுப் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் நாட்டின் தேசிய அரசியலில் ஏற்பட்ட நிலைமாற்றம் அதனைப் பின்தள்ளி விட்டது என்றே சொல்ல வேண்டும். கடந்த வாரங்களில் ஊடகங்களில் அந்தப் போராட்டங்களுக்கு வழங்கிய முன்னுரிமைகளை தற்போது காணமுடியவில்லை. ஆனாலும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் சாத்தியமான எந்த அறிவிப்பும் வரவில்லை.
ஒக்டோபர் புரட்சி என உலகப் புகழ்பெற்ற தொழிலாளர் வர்க்கப் புரட்சி இடம்பெற்ற அதே மாதத்தில் இலங்கையின் முக்கிய தொழிலாளர் வர்க்கமான தோட்டத் தொழிலாளர்களுக்காக அதே ஒக்டோபர் மாதத்தில் கொழும்பில் ஒரு புரட்சி செய்யப்பட்டது. இது தோட்டத் தொழிலாளர்களுக்கான புரட்சி போராட்டம் என்பது ஒருபுறம் இருக்க தோட்டத் தொழிலாளர்களின் அடுத்த தலைமுறையினர் வேறு தொழில் துறைகளில் ஈடுபட்ட வண்ணம் தலைநகரில் தம் பெற்றோருக்காகத் திரண்டனர் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.
இதனையடுத்து சிங்கள, ஆங்கில ஊடகங்கள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்துப் பேசுவதற்கு ஏதுவாக இருந்தது. இது தேவையான ஒன்றாகவும் இருந்தது. இந் நாட்டின் தேசிய பிரச்சினையாக தெரியவரும் போதும் அது ஏனைய மொழி பேசும் மக்களிடம் செல்லும்போதும் பிரச்சினையின் பரிணாமம் வேறு வடிவத்தைப் பெறுவதை அவதானிக்க முடியும்.
சில அரசியல் கட்சிகளும் அவர்களின் வழிவந்தவர்களும் இந்த இணைய வழி ஏற்பாட்டு போராட்டத்துக்குள் மூக்கை நுழைத்ததும் முன்கூட்டியே ஊடகப் போர்வையில் சில ஒழுங்கமைப்புகளைச் செய்தமையும் திட்டமிட்டே செய்தியாக்கப்படல் வேண்டும் என சில்லறை ஏற்பாடுகளைச் செய்ததும் எடுபட்டதாகத் தெரியவில்லை.
எது எவ்வாறெனினும் அன்றைய போராட்டத்தில் ஒரு சிறு குழுவைத் தவிர அரசியல் நோக்கமின்றி உணர்வுடன் ஒன்று சேர்ந்த இளைஞர், யுவதியினரே பெருந்திரளாக திரண்டிருந்தனர் என்பதே உண்மை. அரசியல் நோக்கம் கொண்ட அந்தக் கும்பலையும் அவர்கள் ஆடிய நாடகத்தையும் விட்டு ஏனைய அனைத்து உணர்வுபூர்வமான இளைஞர், யுவதிகள் முன்னே இன்று எழுந்து நிற்கும் கேள்விகள் என்ன என்பதே இப்போதைய கேள்வி.
இன்று நாட்டில் வரலாறு முன்னெப்போதும் காணாத ஓர் அரசியல் கிளர்ச்சி நிலை தோன்றியிருக்கும் போது ஊடகங்களும் பொதுமக்களும் அதன்பால் ஈர்க்கப்பட்டிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனினும் இந்தக் காட்சி மாற்றங்களினூடாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கக்கூடிய மையங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது என்பது இன்னொரு பக்கம் பார்க்க வேண்டியது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரான ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராகியுள்ளார். எனவே முன்பைவிட அவருக்கான அதிகாரங்கள் அதிகரித்திருக்கின்றன. மகிழ்ச்சி. மறுபுறம் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளராக இருந்த வடிவேல் சுரேஷ் பெருந்தோட்டக் கைத்தொழில் துறை இராஜாங்க அமைச்சராகியுள்ளார். அத்துடன் இ.தொ.கா.வுடன் கைகோர்த்து செயற்படவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இனி அவர் அத்தகைய செயலாளர் பதவியில் இல்லாதபோதும் சம்பளப் பிரச்சினையை முன்வைத்தே பேச்சுவார்த்தையில் பங்குகொள்ளும் பெருந்தோட்டப் பிராந்திய கம்பனிகள் அனைத்தையும் மேற்பார்வை செய்யும் பெருந்தோட்டத் துறை முகாமைத்துவ மேற்பார்வைப் பிரிவு (PMMD) இவரது அமைச்சு அதிகாரத்துக்குக் கீழாகவே வரும். மூன்றாவது தரப்பாக கலந்துகொள்ளும் எஸ்.ராமநாதன் லங்கா சமசமாஜக் கட்சியின் தோட்டத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதி. பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சமசமாஜக் கட்சி, பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ அணி ஆதரவுக் கட்சி.
எனவே மூன்று தரப்பினருக்கும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ அமையப்பெற்றுள்ள சந்தர்ப்பத்தில் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தையும் இதர கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொடுக்கும் சந்தர்ப்பம் கைநழுவி செல்லக் கூடாது. என்னதான் ஊடகங்கள் தேசிய அரசியல் நிலைக்குள் மூழ்கி நின்றாலும் தொழிலாளர்களுக்கான தொடர்ச்சியான அழுத்தமும் இளைஞர்களின் பக்கத்தில் இடைவிடாது தொடர்ந்தால் மாத்திரமே சாத்தியமாகும்.
தவிரவும் கொழும்பில் கூடிய இளைஞர்கள் மலையக இளைஞர்கள் என்ற கணிப்பு "அவர்கள் எப்படி... இப்படி....?" என்னும் எண்ணத்தையே கொண்டிருக்கச் செய்துள்ளது. இது எதிர்கால மலையகம் குறித்த அசட்டுப் பார்வை என்றும் கொள்ளலாம். இன்றைய நிலையில் மலையகத் தலைமைகள் எடுக்கும் நிலைப்பாடுகளை காலிமுகத்திடலில் ஒன்றுகூடிய இளைஞர்கள் கவனமாக அவதானிக்க வேண்டும். அன்றைய நாளில் அரங்கேற்றப்பட்ட நாடகம் போலவே இன்றும் பல நாடகங்கள். நாளைய மலையகம் நாடகங்களால் தீர்மானிக்கப்பட முடியாதது.
காலிமுகத் திடல் உணர்வுக் கூட்டமும் ஒரு நாளோடு முற்றுப் பெற்று விட முடியாது. ஓரிடத்தில் ஒன்றுசேர்ந்து கோஷம் எழுப்பாதபோதும் உணர்வால் மாறாது ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே தோட்டங்களை விட்டு வெளியே வந்த தொழிலாளர் பிள்ளைகளும் நாளைய மலையகத்துக்கு தலைமை கொடுக்க முடியும். கொடுக்க வேண்டும். இன்றைய கட்சித் தாவல்களை எள்ளி நகையாடுவது மட்டுமல்ல, இதனால் தோன்றும் காட்சி மாற்றங்களை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டிய காலமும் இதுவே.
நன்றி வீரகேசரி (01/11/2018)
0 comments