"மின்னும் தாரகைகள்" நூல் ஆசிரியர் பேசுகின்றார் - ஜீவா சதாசிவம்
November 08, 2018
சிரேஷ்ட ஊடகவியலாளரும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஓய்வுநிலை தகவல் அதிகாரியும் படைப்பிலக்கியவாதியும் அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள -– தமிழ் மொழிபெயர்ப்பாளருமான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைனின் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு திரட்டான "மின்னும் தாரகைகள்" எனும் நூல் எதிர்வரும் 11ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், இந் நூலாக்க முயற்சி அவரது இலக்கியப்பயணம் பற்றியதான விடயங்கள் தொடர்பில் கலந் துரையாடக்கிடைத்தது. இதன்போது அவர் எம்முடன் பகிர்ந்துக்கொண்ட விடயங்கள் வாசகர்களுக்காக...
உங்களது எழுத்துலகப் பிரவேசம்பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
எனது எழுத்துலகப் பிரவேசம் 1975ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பமானது. பாடசாலையில் உயர் வகுப்பு படிக்கும் போதே வானொலிக்கும் பத்திரிகைகளுக்கும் ஆக்கங்கள் எழுதுவதை எனது முக்கிய பொழுதுபோக்காகக் கொண்டிருந்தேன். அன்று ஏற்பட்ட அந்த எழுத்துலக மோகம் என்னை அன்றைய ஜனரஞ்சக பத்திரிகைகளான "தினபதி – சிந்தாமணி" அலுவலகத்துக்கு கொண்டு போய் சேர்த்தது.
1980ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி ஒரு பயிற்சிப் பத்திரி கையாளராக "தினபதி- – சிந்தாமணி" அலுவலகத்துக்கு சென்ற நான் அந்த அலுவலகம் 1990ஆம் ஆண்டு மூடப்படும் வரை அங்கேயே கடமையாற்றினேன். பத்திரிகை உலக ஜாம்பவான் என்று போற்றப்படும் எனது பத்தி ரிகை உலக தந்தையான எஸ்.டி.சிவநாயகத்தின் ஒரு மாணவியாக மட்டுமல்ல, மகளாக நான் பெற்ற பயிற்சிகள்தான் இன்று வரை இத்துறையிலேயே என்னை நிலைநிறுத்தின எனலாம். அந்தப் பத்திரிகை அலுவலகம் மூடப்பட்டதும் எனது துறைக்கு நான் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. இன்றும் எனது எழுத்துலகப் பயணம் தொடர்ந்து செல்கின்றது.
இலங்கை முஸ்லிம் பெண் எழுத் தாளர்கள் பற்றிய தொகுப்பை வெளியிட உங்களுக்கு ஏற்பட்ட ஆர்வம் குறித்து எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
சுமார் 11 வருடங்களுக்கு முன்னர் என் மனதில் தோன்றிய ஆசைதான் இது. 2007ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் மகளிர் அரங்கில் சமர்ப்பிப்பதற்காக "இலங்கை முஸ்லிம் பெண்களின் ஊடகப்பங்களிப்பு” என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இந்த ஆய்வுக்காக தகவல்களை திரட்டும் போதுதான் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூல் ஒன்றை எழுத வேண்டும் என்ற ஆசை என் உள்ளத்தில் துளிர் விட்டது. நீண்ட நாள் கனவுதான் சுமார் 11 வருடங்களின் பின்னர் இப்போது நனவாகியுள்ளது.
இத் தொகுப்பில் இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம் பெண் எழுத்தாளர்களும் உள்ளடங்குகின்றார்களா?
இலங்கை யிலுள்ள அனைத்து முஸ்லிம் பெண் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியுள்ளேன் என்று எனக்கு உறுதியாகக் கூறிவிட முடியாது. அவர்களில் ஒரு சிலர் விடுபட்டிருக்கலாம். இன்னும் சிலர் தமது தகவல்களைத் தருவதில் அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்தனர். சுமார் 140 முஸ்லிம் பெண் எழுத்தாளர்களை இனங்கண்டுள்ளேன்.
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து கடல் கடந்து வாழும் இலங்கையைச்சேர்ந்த ஒரு சில பெண் எழுத்தாளர்களையும் இந் நூலில் உள்வாங்கியுள்ளேன். எந்த ஓர் ஊடக விளம்பரமுமின்றி மேற்கொண்ட எனது இந்த ஆய்வு நடவடிக்கை இந்தளவு பெருவெற்றியைத் தந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களைப் பற்றி மட்டுமே எழுதப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்களின் தகவல்களுடன் வெளிவரும் முதலாவது ஆய்வு நூலாக இது திகழ்கிறது.
இந்த ஆய்வு நூலுக்கான தகவல்க ளை எவ்வாறு சேகரித்தீர் கள்? எவ்வளவு காலம் சேகரித்தீர்கள்?
நூலுக்கான தகவல்களைப் பெறும் நடவடிக்கைகளை 2017 ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்தேன். மார்ச் மாதம் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தன்று இந்த நூலை வெளியிட்டால் மிகச்சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்று கருதியே இம்முயற்சியை ஆரம்பித்தேன். ஆனால் தகவல்களை பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் தான் இந்த விழாவை நடத்த இவ்வளவு காலமெடுத்தது.
இலங்கையில் எந்தெந்த பகுதிகளிலெல்லாம் நூல்களை வெளியிட்ட முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்? அவர்கள் வெளியிட்ட நூல்கள் எவை? நூல்களை வெளியிடாவிட்டாலும் இலக்கிய உலகுக்கு காத்திரமான பங்களிப்புச் செய்து ஓயாது எழுதிக்கொண்டிருக்கும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் யார்?
முதலில் எனக்குத் தெரிந்த முஸ்லிம் பெண் எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது தகவல்களைப் பெற்றுக்கொண்டேன். "கல் மரத்தில் நார் உரிப்பது" போல்தான் சிலரின் தகவல்களை சிரமப்பட்டே பெற்றேன். சுமார் ஒரு வருட கால எனது ஆய்வின் அறுவடைதான் இந்த "மின்னும் தாரகைகள்".
இத் தொகுப்புகளை செய்யும் போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி..?
அனுபவத்தில் பாதியை மேலே கூறிவிட்டேன். இன்னும் சொல்வதாக இருந்தால் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களிடையே இந் நூலில் உள்வாங்கப்பட்டுள்ள அனைவரிடத்திலும் ஒவ்வொரு திறமை இருப்பதைக் கண்டு நான் வியந்துபோனேன். இத் தேடலின் போது நான் சந்தித்த எமது ஒருசில பெண் இலக்கிய ஆளுமைகளைக் கண்டு உண்மையிலேயே நான் பிரமித்துப்போனேன். இலைமறை காயாக மட்டுமல்ல, இலக்கியக் கனிகளாகவும் பலர் இருக்கின்றனர். மேகங்களால் மறைக்கப்பட்ட தாரகைகளாகவும் இன்னும் சிலர் இருக்கின்றனர்.
இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களிடையே நல்ல கவித்துவமிக்க பெண்கள், சிறுகதை புனையும் பெண்கள், நாவல்களை எழுதும் பெண்கள் என பல்துறை ஆளுமைமிக்க பெண்கள் இருக்கின்றனர் என்பதை நினைக்கும் போது இதயம் இனிக்கிறது. இவர்களிடையே காணப்படும் அபாரத்திறமைகளும் ஆளுமையும் உண்மையிலேயே என்னை மலைக்க வைத்தன
உங்களது தொகுப்பில் ஏன் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களை மாத்திரம் தெரிவு செய்துள்ளீர்கள்?
முஸ்லிம் அல்லாத தமிழ்ப் பெண் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் பற்றிய பல்வேறு ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. எனினும் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களைப் பற்றியும் எழுதுவதற்கு ஆசைதான். வளங்கள் வேண்டுமே... அது மட்டுமல்ல, இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் நதி என்றால் இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் சமுத்திரம் என்பேன். எனவே இந்த சமுத்திரங்களைப்பற்றி எழுதுவதற்கு எனக்கு வளங்களும் போதாது. வயதும் போதாதென்று நினைக்கிறேன்.
ஆனால், இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய பரந்த அளவிலான ஆய்வு நூல் ஒன்று இதுவரை காலமும் வெளிவரவில்லை என்பதும் இவர்கள் பற்றிய எந்த ஒரு பதிவும் இல்லை என்பதும் சான்றோர்கள் பலரின் குற்றச்சாட்டு மட்டுமல்ல, ஆதங்கமும்தான். அத்துடன் ஒவ்வொரு முறையும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் நடைபெறும் காலங்களில் இதுபற்றி அனைவரும் பிரஸ்தாபிப்பதுண்டு. ஆனால் இந்த பணியைச்செய்ய எவரும் துணிந்து முன்வரவில்லை.
ஒரு முஸ்லிம் பெண்ணாக இருக்கும் நீங்கள் உங்களை எப்படி எழுத்துலகில் தக்க வைத்துக் கொள்கின்றீர்கள்?
எல்லாவற்றுக்கும் அதிர்ஷ்டமும் வேண்டும். துறைசார் துணைவர் ஒருவர் எனக்கு கணவராக அமையப்பெற்றமைதான் அந்த அதிர்ஷ்டம் என்பேன். திருமணம் பல பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கு கை விலங்கு போட்டது என்கிறார்கள். ஒரு சில பெண் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை அது நிதர்சனமான உண்மை தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை திருமணம் எனக்கு பூவிலங்கு போட்டது என்பேன். எனது எழுத்துக்களுக்கு மட்டுமல்ல, எனது திறமைகளுக்கும் நீர் வார்த்து உரமுமிட்டது திருமணம்தான்.
இந்த வெற்றியின் பெருமை முதலில் எனது பத்திரிகையுலகத் தந்தை எஸ்.டி.சிவநாயகத்தைச் சாரும். இல்லறத்தில் நுழைந்த பின்னர் எனது கணவரை அலுவலகத்துக்கு அழைத்த எஸ்.டி.எஸ். ஐயா அவர்கள்,- “நண்பரே... உங்கள் மனைவி ஊடகத்துறையிலும்- எழுத்துத்துறையிலும் நன்கு ஜொலிப்பவர். இத்துறையில் அவருக்கு சிறந்ததோர் எதிர்காலமுண்டு. எனவே அவரை தொடர்ந்தும் அலுவலகம் அனுப்பி வையுங்கள்” என்று கூறி ஆசியுரை பகர்ந்தார். பத்திரிகை உலக ஜாம்பவான் சிவநாயகத்தின் எதிர்வு கூறலை இன்றும் நான் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். அவ்வாறே எனது இல்லறத்தில் மட்டுமல்ல, இலக்கியத்திலும் எனக்கு பக்கபலமாக இருக்கும் எனது வாழ்க்கை துணைவரின் துணையை எண்ணி மகிழ்கிறேன்.
உங்களது ஏனைய இலக்கிய படைப்புக்கள் பற்றி?
எனது முதலாவது நூல் "தினபதி – சிந்தாமணி" பத்திரிகைகளில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக 1997ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் திகதி "பண் பாடும் பெண்" என்னும் பெயரில் வெளிவந்தது. அண்மையில் நான் எனது அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்தே தேங்கிக் கிடந்த எனது இலக்கிய முயற்சிகளை முன்னெடுக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.
இதனால் தான் வீடு முழுவதிலும் நிரம்பிக்கிடந்த எனது கணவர் நஜ்முல் ஹுசைனின் கவிதைகளையெல்லாம் திரட்டி "நஜ்முல் ஹுசைனின் நட்சத்திரக் கவிதைகள்'" என்ற ஒரு தொகுப்பை கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி வெளியிட்டேன். அடுத்து எனது கவிதை தொகுப்பு "பூஞ்செண்டு" என்ற பெயரில் நூலுருப் பெற்றது. அதையடுத்து தான் இந்த "மின்னும் தாரகைகள்.” இவைதவிர உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் நான் சமர்ப்பித்த "இலங்கை ஊடகத்துறையில் முஸ் லிம் பெண்களின் பங்களிப்பு" என்ற ஆய்வுக் கட்டுரையும் கொழும்பு பல்கலைக்கழக பத்திரிகைத்துறை டிப்ளோமா பாடநெறிக்காக என்னால் சமர்ப்பிக்கப்பட்ட "எயிட்ஸ் நோயும்- பெண்களும்" என்ற ஆய்வுக்கட்டுரையும் நூலுருப்பெற தயாராக உள்ளன.
அத்தோடு உடுவை எஸ்.தில்லை நடராஜாவின் "கடற்கன்னி", "மந்திரக்கண்ணாடி", "பேசும் பேனா" போன்ற மூன்று சிறுவர் நூல்களையும் சிங்கள மொழியில் மொழிபெயர்த்துள்ளேன். எனது கணவரின் புதுக்கவிதைகளை தற்சமயம் சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்து கொண்டிருக்கிறேன். இறைவன் நாடினால் அந்த சிங்கள மொழி பெயர்ப்புக் கவிதைத் தொகுப் பும் நூலாக வெளிவரும்
எதிர்வரும் 11 ஆம் திகதி நடை பெறவுள்ள உங்களது நூல் வெளி யீட்டு நிகழ்வுகளின் சிறப்பு பற்றி?
இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய எனது ஆய்வு நூலான "மின்னும் தாரகைகள்" மூன்றுஅத்தியாயங்களுடன் 460 பக்கங்களுடன் ஒரு காத்திரமான நூலாக வெளிவருகிறது. கொழும்பு – சங்கராஜ மாவத்தை யில் அமைந்துள்ள அல் –ஹிதாயா முஸ்லிம் மகா வித்தியாலய பஹார் தீன் மண்டபத்தில் இந் நிகழ்வு நடை பெறவுள்ளது. மலையகத்தின் முன்னணி எழுத் தாளரான கலாபூஷணம் நயீமா சித்தீக் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
அது மாத்திரமன்றி சிறப்பதிதிகள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் இந்த விழா வில் இந் நூலில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பதே என் வேணவா! இலக்கிய நண்பர்கள் உட்பட அனைவருக்கும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
நன்றி வீரகேசரி- சங்கமம் (03/11/2018)
0 comments