எனது 'அலசல்' நூல் வெளியீடும் - அதன் கருத்துக்களும்- ஏ.எஸ்.எம்.நவாஸ்

December 05, 2018


நூல் வெளியீடு...
கடந்த இரண்டாண்டு காலமாக வீரகேசரி நாளிதழில் பிரதி வியாழன் தோறும் வெளிவந்த அரசியல் ஊடகவியலாளர் ஜீவா சதாசிவம் எழுதிய அரசியல் பத்திகளின் தொகுப்பு ‘அலசல்’ (சமகால அரசியல் நிலைவரங்கள்  2017/2018) எனும் தலைப்பிலேயே நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 

குமரன் பதிப்பகத்தின் வெளியீடாக 309 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இந்த நூல் 64 அரசியல் கட்டுரைகளைக் கொண்டது. வெளியீட்டு விழா 22- –11–2018 வியாழன் அன்று சாகித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையில் கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. 

தமிழ் வாழ்த்து, வரவேற்புரை...
நிகழ்வு மங்கள விளக்கேற்றல், ஆசிரியை திருமதி சுபாஷினி பிரணவனின் மாணவிகளின் தமிழ்த்தாய் வாழ்த்து என்பவற்றோடு ஆரம்பமானது. ஊடகவியலாளர் எம்.ராம் வரவேற்புரை வழங்க சாகித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையுரை ஆற்றினார். மலையகத்தின் கொட்டகலை பகுதியில் இருந்து வந்து வீரகேசரியின் ஆசிரியர்பீடம் வரை உயர்ந்தவர் காலம் சென்ற எஸ்.எம்.கார்மேகம். 

வீரகேசரியின்  குறிஞ்சிப்பரல்களை உருவாக்கி மலையக எழுத்துக்களுக்கும் செய்திகளுக்கும் களம் அமைத்தவர் கார்மேகம். பின்னாளில் தமிழகம் சென்று இந்திய பத்திரிகைகளிலும் ஆசிரிய பீடத்தில் பணியாற்றியவர். ஜீவா சதாவசிவத்தின் வீரகேசரி பத்திரிகை பணி பற்றி பேசும்போது எனக்கு வீரகேசரி கார்மேகத்தின் நினைவு வருவது தவிர்க்க முடியாதது. 

தலைமையுரை, ஆசிரியர், நூல் அறிமுகம்...
இதுபோன்ற பத்திரிகையில் இவ்வாறு மேல் எழுந்து தொடர் கட்டுரை எழுதி அதனை நூலாக வெளிக்கொணர்வது இலகுவான காரியமல்ல.அரசியல் கட்டுரைகளை எழுதுபவர்கள் புனைபெயரில் புகுந்து கொண்டு எழுதுவது வழக்கம். ஆனால் நான்தான் ஜீவா சதாசிவம எழுதுகிறேன் என தன்னை வெளிக்காட்டி ஒரு அரசியல் தொடரை எழுதி பெண்ணாக சாதனைச் செய்திருக்கிறார் ஜீவா சதாசிவம். 

அவர் பணியாற்றும் நிறுவனம் மீது அவர் கொண்டிருக்கும் பற்றும் தன்னை வளர்த்துவிட்டவர்களை கனம் பண்ணும் பழக்கமும் அவரை இந்த அளவுக்கு உயர்த்தி விட்டிருக்கிறது எனலாம்.சங்கமம் எனும் இலக்கிய பகுதியின் பொறுப்பாசிரியராக இருந்து பல நூறு ஆசிரியர்களின் முதல் நூல் வெளியீட்டினை முதல் பிரசவம் என பதிவு செய்துள்ள ஜீவா சதாசிவம் தனது கட்டுரைகளை தொகுப்பு நூலாகக் கொண்டுவந்ததன் மூலம் அந்த வேதனையையும் பூரிப்பையும் கூட அனுபவித்திருப்பார். இந்த கட்டுரைகளுக்காக அவர் இலங்கை பத்திரிகை தாபனத்தின் சிறந்த பத்தி எழுத்துக்கான விருதையும் வென்றிருக்கிறார் என்பது சிறப்பு என்றும் தெளிவத்தை ஜோசப் தனது தலைமையுரையிலே குறிப்பிட்டார்.

முதற் பிரதி கையளிப்பு...
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் நூல் வெளியீட்டினை செய்துவைக்க முதல் பிரதியை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து  சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன. 


நூலின் ஆய்வுரையை சாகித்ய ரத்னா பேராசிரியர் சபா ஜெயராசா வழங்கினார். ஊடகத்துறையில் பெண்களை ஊக்குவித்த பெரு மரபு வீரகேசரிக்கு உண்டு.முதுபெரும் எழுத்தாளர்களாகிய யோகா பாலச்சந்திரன்,அன்னலட்சுமி இராஜதுரை மரபின் தொடர்ச்சியாக வந்திருப்பவர் ஜீவா. 

கனதியும் வாசிப்புத் தூண்டலும் கொண்ட பத்தி எழுத்து மரபுடன் வருவது வீரகேசரி. செய்தியும் செய்தி உசாவலும் கொண்ட பத்தி எழுத்துக்களை கே.வி.எஸ்.வாஸ், கே.பி.ஹரன் முதலானர்வர்கள் வல்லவர்கள். ‘ஊர்க்குருவி’ எனும் பெயரில் இவர்கள் எழுதிய பத்தியை வாசிப்பதற்கு என்றே வீரகேசரி விற்பனையான காலம் ஒன்று இருந்தது. பல்கலைக்கழகங்கள்,கல்வியியல் கல்லூரிகள்,ஆசிரிய கலாசாலைகள்,ஊடக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிலே பணிபுரியும் மலையகத்து இளம் தலைமுறையினரின் சமூகப் புலக்காட்சிக்கு பெண்களின் வகிபாகம் பற்றிய நிறுவலுடன் அலசலின் நுழைவாயில் அகலத் திறக்கிறது. 
நூல் ஆய்வு...
அலசல் எழுத்துக்கள் சுவையேற்றம் பெறுவதற்கு காரணம் புலனாய்வு செய்திகளுடன் தொடரப்பட்டிருத்தலாகும்.செய்திகளோடு உறவாடும் செய்தியாளராக ஜீவா இருப்பதனால் அலசல் சமகால பிரச்சினைகளை சமூக  மேம்பாட்டுக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்ற முன்மொழிவுடன் அலசல் எழுத்துக்கள் இணங்கிச் செல்கின்றது. பேராசிரியர் ஏ.ஜே.கனகரட்ணா சொல்வதுபோல பத்தி எழுத்துக்கள் தொடர்ச்சியான வாசிப்பின் ஊடே வளம் பெறுவது என்கின்றதன் அடிப்படையில் ஜீவாவின் தளரா எழுத்து முயற்சி மேல் எழுச்சி கொள்ள வாழ்த்துகிறேன் என தெரிவித்தார். 

நூலின் கருத்துரையை வழங்கிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எழுத்தாளர், ஆய்வாளர் சிராஜ் மஷ்ஷூர் தனது கருத்துரையில், பெண்ணாக அரசியல் பத்தி எழுத்துக்களில் ஆர்வம் காட்டிவருவதோடு மட்டுமல்லாமல் அதனை நூலாக்கி வெளியிடுவதிலும் அக்கறை காட்டியுள்ள சகோதரி ஜீவா பாராட்டுக்குரியவர். அரசியலில் பெண் நிலைப்பட்ட விடயங்களை, ஆண்கள் எழுத மறக்கின்ற விடயங்களை எல்லாம் இவரால் தொட்டுச் செல்ல முடிந்ந்திருக்கிறது. குறிப்பாக பெண்கள் அரசியலில் ஈடுபடுகின்ற போது எதிர்நோக்கும் வன்முறைகள் அதனை அவர்கள் எதிர்கொள்ளுதல் தொடர்பானது. 
கருத்துரை...

ஒரு மலையகத்தவராகவும், ஒரு பெண்ணாகவும், ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதியாகவும் தனது எழுத்துக்களின் ஊடே ஜீவா தன்னை பிரகடனப்படுத்தியுள்ளார்.அவரது நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட அந்த பத்திரிகை பக்கத்துக்கு ஏற்ப பலதரப்பட்ட அரசியல் விடயங்களை அவர் தருவதற்கு முயற்சித்துள்ளார் என்பது தெரிகிறது. ஆனால் சில கட்டுரைகள் இன்னும் ஆழமாக பார்க்கப்பட்டிருக்கலாம்.

தேயிலையின் 150 ஆண்டு கால வரலாற்றைப் பேசவந்த கட்டுரை அந்த சூழலில் இருந்து வந்திருக்கக்கூடிய கட்டுரையாளரிடம் இருந்து இன்னும் அதிகமாக வெளிப்பட்டிருக்க வேண்டும். நாங்கள் நல்லாட்சி உருவாக்கத்திலே பங்கேற்றவர்கள் என்கின்றதன் அடிப்படையில் அந்த நல்லாட்சியை சிதைவுறச் செய்யும் கைங்கரியங்கள் அதில் பிரதான பாத்திரம் வகிப்போராலேயே முன்னெடுக்கப்படுகின்ற இந்த காலகட்டத்தில் அந்த நல்லாட்சி காலத்தில் இடம்பெற்ற பல்வேறு விடயங்களை பதிவு செய்கின்றதன் அடிப்படையில் ஜீவா தான் வாழ்ந்த அந்த நாட்களை எவ்வாறு அவதானித்தார் என்பதை இந்த நூல் பதிவு செய்துள்ளது என குறிப்பிட்டார். 

இன்னுமொரு கருத்துரையை வழங்கிய எழுத்தாளரும் ஆய்வாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மல்லியப்புசந்தி திலகர் அலசல் நூலின் உள்ளடங்கியுள்ள தலைப்புக்களை வகைப்படுத்தி அதன் சாரத்தை பதிவு செய்தார். ஜீவா மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்ற வகையில் மலையகம் தொடர்பில் ஐந்தில் ஒரு பங்கு கட்டுரை எழுதப்பட்டிருக்கின்ற அதேநேரம் வட கிழக்கு தமிழ், சிங்கள சமூக அரசியல் விடயங்களையும் தேசிய அரசியல் நிலைவரங்களையும் ஆராய்ந்துள்ள  கட்டுரைகள் முஸ்லிம் அரசியல் சூழல் பற்றிய அவதானிப்புகளை தவறவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

கருத்துரை...
 அதேநேரம் தப்பித்த தேயிலை எனும் கட்டுரை முழுமைபெற்றதாக தெரியவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். 2017/2018 ஆண்டு காலத்தில் நாட்டில் நிலவியது நல்லாட்சி சூழல் என்பதை பதிவு செய்யும் பல கட்டுரைகளை தேசியம், மலையகம், பெண்ணிலை, ஊடகம், பாராளுமன்றம் என பல கோணங்களில் இருந்தும் அலசப்பட்டுள்ளது. சங்கமம் எனும் இலக்கிய பகுதிக்கு  பொறுப்பாசிரியர் என்பதாலோ என்னவோ தனது அரசியல் கட்டுரைகளுக்கு தலைப்பிடும்போது ஓர் இலக்கிய ரசனையோடு தலைப்பிட்டுள்ளார். 

அத்துடன் அவ்வப்போதைய நிகழ்வுகளின் அடிப்படையில் பத்தி கட்டமைக்கப்படும்போது ஒரு திரைக்கதைப் பாணியும் தெரிகிறது. செய்தியோடு உறவாடி செய்தியாளராக புலனாய்வு கலந்து தந்திருப்பதானது அன்று சொன்னவைகளுக்கு இன்று என்ன நடந்திருக்கிறது என்பதை ஊகிக்கக் கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் நல்லாட்சி : அன்று ஒன்று, இன்று இரண்டு. நாளை எனும் கேள்விக்குறியுடன் அமைந்த கட்டுரை காத்திரமானது. அதேபோல தகவல் உரிமைச்சட்டம் யாருக்காக, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம், வெறுப்புமிழும் உரை போன்றன பற்றிய பதிவுகள் முக்கியத்துவம் உடையன. 


அதேபோல மிகச்சுருக்கமான தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கும் பெற்றோலும் அரசியலும், வாரிசு அரசியல், அரசியலும் வியாபாரமும், குழுக்களின் அரசியல், விலங்குகளின் அரசியல் எனும் அரசியலின் வகைப்படுத்தல்கள் சுவாரஸ்யமிக்கவை. இந்த தலைப்புகளை வாசிக்கும் போது நமக்குள் ஒரு சிரிப்பலை எழுமானால் அது நம்மை நாமே பார்த்து சிரித்துக்கொள்வதாக அமையும்.  

நாமே இந்த மாற்றத்துக்கு வாக்களித்துள்ளோம். இலங்கை அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த மாற்றத்தினை மாற்றியமைக் கவேண்டிய பொறுப்பும் இந்த சமூக த்துக்கே உரியது.  கடந்த மூன்றாண்டு காலமாக நாட்டில் இடம்பெற்றது நல்லாட்சிதான் என்பதை அது முடிவு றுத்தப்பட்ட அடுத்த மூன்று நாட்க ளில் தெரியக்கூடியதாக இருந்தது. அத்தகைய ஒரு நல்லாட்சி இடம் பெற்ற கடந்த மூன்றாண்டுகளில் பெரும்பகுதி அரசியல் நிகழ்வுகள் வாராந்தம் அலசி இருக்கும் இந்த அலசல் எனும் நூல் நல்லாட்சி காலத்தின் நாட்குறிப்பு என்று கொள்ளலாம் என்றும் மல்லியப்புசந்தி திலகர் தெரிவித்தார். 

ஏற்புரை...

நூலாசிரியர் ஜீவா சதாசிவம் தன்னுடைய ஏற்புரையை நன்றியுரையாக மாத்திரம் சுருக்கிக்கொண்டார். தனது எழுத்துக்கும் முயற்சிக்கும் பங்களிப்பு செய்த அனைவருக்குமான நன்றி கூறலாகவே அது அமைந்தது. 

தெொகுப்பு...
ஊடகவியலாளர் நிர்ஷன் ராமானுஜம் சிறப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்தளித்திருந்ததுடன் ஊடகத்துறை, இலக்கியத்துறை, கலைத்துறை, அரசியல்துறை என அனைவரதும் பங்களிப்புடன் அரங்கம் நிறைந்த நிகழ்வாக அமைந்தது அலசல் வெளியீடு.

ஏ.எஸ்.எம்.நவாஸ்

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images