வடிவேல் சுரேஷ் போல நான் நடந்து கொள்ளவில்லை- ஜீவா சதாசிவம்

June 20, 2020




கேள்வி: இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டுள்ளது பற்றி உங்களது கருத்து என்ன?

பதில்: ஊடகங்கள் வாயிலாக இதனை நான் அறிந்தேன். மலையக மக்களுடன் சுமார் 60 வருட காலமாக இத்தொழிற்சங்கம் ஒன்றாக இருந்து விளங்கியதை யாரும் மறுப்பதற்கில்லை. எனக்கு முன்னர் பொதுச்செய லாளராக பதவி வகித்த வேலாயுதத்தின் மறைவின் பின்னர் நான் அவ்விடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு சுமார் நான்கரை வருடங்களாகப் பதவி வகித்தேன். என்னால் உருவாக்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தில் உள்ள 12 ஆயிரம் அங்கத்தவர்களையும் இ.தே.தோ.தொழிலாளர் சங்கத்துடன் இணைத்து பாரிய பயணம் மேற்கொ ண்டோம்.

பெரும்பாலும் சகல தோட்டப்பகுதி மாவட்டங்களையும் உள்ளடக்கியதான உறுப்பினர்கள் இதில் அங்கத்துவம் பெற்றுள்ளனர். வேட்புமனு கையெழுத்திடும் முன்பு என்னிடம் நவீன் 'வேட்புமனு கையெழுத்திட்ட பின்னர் பதுளை மாவட்டத்தின் ஐ.தே.க உபதலைவராக நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். பின்னர் இ.தே.தோ.தொ. சங்கத்தின் தலைவர், செயலாளர் பதவியையும் நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ளலாம்' என்று கூறினார்.

இது பற்றி இ.தே.தோ. தொ. சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் எனது ஆதரவாளர்களிடமும் கலந்து பேசிய போது அவர்கள் சஜித் பிரேமதாசாவிற்கே ஆதரவு வழங்க வேண்டும் என்றார்கள். அதற்கிணங்க நான் செயற்பட்டேன். இதன் பின்னர் இரகசியமாக செயற்பட்டு சிலர் நீதிமன்றத்தை நாடி சில விடயங்களை முன்வைத்து எம்மீது குற்றச்சாட்டுகளை வைத்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். இவர்கள் முன்வைத்த ஆறு விடயங்களில் மூன்று விடயங்களை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஐ.தே.கட்சியினால் சம்பிரதாயபூர்வமாக எதனையும் செய்யலாம். ஆனால் சட்டபூர்வமாக எதனையும் செய்ய முடியாது.

இது இவ்வாறிருக்க இ.தே.தோ.தொ.சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் உறுப்பினராக அல்லாதவர்களை இணைத்து ஸ்ரீகொத்தாவில் அவசரக் கூட்டமொன்றை நடத்தி மேற்படி சற்கத்தின் தலைவராக நவீனையும் செயலாளராக யோகராஜனையும் நியமித்துள்ளார்கள். கூட்டத்திற்கான எந்தவொரு நடைமுறையையும் பின்பற்றாது அவர் சுயமாக செயற்பட்டுச் சென்றுள்ளார். ஒரு அரசியல் பழிவாங்கல் என்றே என்னுடைய இந்த பதவிநீக்கம் என்று கூறுகிறேன். சஜித் மீதுள்ள கோபத்தை அப்பாவி மக்கள் மீது காட்டிச் சென்றுள்ளனர்.

கேள்வி: 50 ரூபா விடயத்தில் துரோகமிழைத்த நவீனை தலைவராக நியமித்துள்ளமை தவறு அல்லவா?

பதில்: மீண்டும் கவலைக்கிடம்தான். தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா சம்பள விடயத்தில் துரோகம் செய்தவர் நவீன். யோகராஜன் மலையகத்தைச் சாராதவர். மலையக மக்கள் பற்றிய அனுபவம் இல்லாதவர். நுவரெலியா மாவட்ட மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரிடம் இந்தப் பொறுப்பை கொடுக்கலாமா?

கேள்வி: நிதிமோசடி, வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றாட்டிலேயே நீங்கள் இந்தப் பதவியில் இருந்து விலக்கப்பட்டதாக கூறப்படுகின்றதே...

பதில்: அது முற்றிலும் பொய். ஒரு கட்டமைப்பை கொண்டுள்ள ப​ைழமையான இச்சங்கத்தில் அவ்வாறு மோசடிகளை செய்துவிட முடியாது. எங்களது சொந்தப்பணத்தை இதற்காக செலவழித்துள்ளோம். சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்கியமையாலேயே அதனை காரணம் காட்ட முடியாமல் வேறு பொய்யான விடயங்களை கூறியாவது பதவி விலக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக இதனைக் கையாண்டுள்ளார்கள்.

கேள்வி: பதவி விலக்கியமை தொடர்பில் ஏதாவது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளீர்களா?

பதில்: ஆம், கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நாம் வழக்குத் தொடர்ந்துள்ளோம். சட்டபூர்வமற்ற முறையில் என்னை பதவி நீக்கியுள்ளது பற்றி முறையீடு செய்துள்ளேன். யோகராஜனுக்கு இந்த பதவி வழங்கப்பட்டதையிட்டு மேற்படி சங்கத்தின் மக்கள் வெறுப்பில் உள்ளனர். ரணில் என்ற ஒரு தனிநபருக்காக ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை பலிக்கடாவாக ஆக்க முடியாது. இனவாதிகளிடம் எமது மக்களை கையளிக்க முடியாது.

கேள்வி: நீங்கள் மாற்றுத் தரப்புக்கு ஆதரவு வழங்கும் போது எவ்வாறு இன்னொரு தரப்பு தொழிற்சங்கத்தில் பொறுப்பான பதவி வகிக்க முடியும்?

பதில்: சுயாதீனமாக செயற்படக் கூடிய சங்கமாக ஐ.தே.க வினால் இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதனை ஐ.தே.கதான் வைத்திருக்க வேண்டும் என்பதல்ல. அப்போது ஐ.தே.கவில் உள்ளவர்கள் இச்சங்கத்தில் தலைமைத்துவம் வகித்து செயற்பட்டுள்ளார்கள்.

கேள்வி: கூட்டு ஒப்பந்தத்தில் இருக்கும் நீங்களும் மக்கள் கேட்கும் தொகையை உங்களால் கொடுக்க முடியவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

பதில்: தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்தி வந்தேன். இதனை பெற்றுக் கொடுக்கக் கோரி தீக்குளிப்புக்குக் கூட சென்றவன். எதிர்வரும் காலத்தில் சம்பள விடயத்தில் மேலும் அக்கறை செலுத்துவோம்.

கேள்வி: பதுளை மாவட்ட வேட்பாளராக இருக்கும் உங்களது அரசியல் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன?

பதில்: பதுளை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டியதொரு தேவை இருக்கின்றது. பெரும்பான்மையினத்தவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இப்பிரதேசத்தில் சிறுபான்மை மக்களை சிக்கலில் தள்ளாது அவர்களை பிரச்சினையின்றி வாழ வைப்பது எமது கடமை. அவர்களுக்கான பல வேலைத் திட்டங்களை நிறைவேற்றிக்கொடுத்துள்ளேன். நான் மாகாணசபையில் இருந்த காலம் தொட்டு இன்று வரை ஏதோவொரு வகையின் மக்களுக்கான கல்வி, சுகாதாரம், உட்பட ஏனைய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். தொடர்ச்சியாக செய்தும் வருகின்றேன்.


*****************************************************************************



'இ.தொ.காவில் இருந்து ஓடி வந்த வடிவேல் சுரேஷ் போல நான் நடந்து கொள்ளவில்லை. நான் விலகி வரும் போது பாராளுமன்ற உறுப்பினரும் அல்ல. விலகி வருகின்ற தருணத்தில் பல முக்கிய பதவிகளை வகித்தேன். அவை அனைத்திலும் முறையாகவே விலகி வந்தேன். நான் அங்கும் இங்குமாக மாறி மாறித் தாவவில்லை. பதவிக்காக நான் யாரையும் கெஞ்சவும் இல்லை. வடிவேல் சுரேஷ் போல இ.தொ.காவிலிருந்து ஓடவில்லை' என்கிறார் முன்னாள் எம்.பியான ஆர்.யோகராஜன். இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் தலைவர், செயலாளராக பதவி வகித்து வந்த ஹரீன் பெர்னாண்டோ, வடிவேல் சுரேஷ் ஆகியோர் தற்காலிகமாக பதவி நீக்கப்பட்டுள்ளனர். புதிய தலைவராக நவீன் திஸாநாயக்கவும், புதிய பொதுச் செயலாளராக ஆர். யோகராஜனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆர்.யோகராஜன் தினகரனுக்குப் பேட்டி அளித்தார்.

கேள்வி: தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் நவீன் திஸாநாயக்கா துரோகம் இழைத்து விட்டதான கருத்து உள்ள நிலையில் அவரைத் தலைவராக நியமித்திருப்பது சரியானதா? மீண்டும் துரோகம் நடக்காதா?

பதில்: 50 ரூபா விடயத்தில் அவர் நடந்த விடயம் பற்றி அறிந்தேன். ஆனால், அவர் தற்போது தொழிற்சங்கங்கத்தின் தலைவராக நிமிக்கப்பட்டிருக்கும் போது அவரது திட்டம் வேறானதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

கேள்வி: நீங்கள் மீண்டும் இ.தொ.காவுடன் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் இணைந்து ஒரே மேசையில் அமரும் சாத்தியம் உள்ளதா?

பதில்: அவர்களை விட்டு நான் விலகி வந்தேன் என்பதற்காக அவர்கள் எனக்கு எதிரி இல்லை. ஆறுமுகன் தொண்டமான் அமரரானதன் பின்னர் இடம்பெற்ற ஒரு காணொளி நிகழ்வில், நானும் கலந்து கொண்டு கருத்துகளை வழங்கினேன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விட்டு நான் பிரிந்து வந்திருந்தாலும் கூட எந்தவொரு துரோகமும் செய்யவில்லை.

கேள்வி: தொடர்ச்சியாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஒரு தொகையை பெறும் உங்களால் ஏன் தொழிலாளர் கேட்கும் தொகையை பெற்றுக் கொடுக்க முடியவில்லை?

பதில்: 1996ம் ஆண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் மரணமடையும் காலகட்டத்தில் முதன் முதலாக கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டோம். ஒவ்வொரு கூட்டத்திற்கும் அவருடன் நான் போவது வழக்கம். அதன் பின்னர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்ச்சியாக இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கையொப்பமிடுவது வழக்கம். அது கிரமமாகவே இடம்பெற்றது. ஆனால், கடந்த 4 வருட காலமாகத்தான் ஒரு சம்பள உயர்வை பெற முடியாத சூழ்நிலையில் இந்த தொழிற்சங்கங்கள் இருந்திருக்கின்றன. அமரர் ஆறுமுகன் தொண்டமான் அக்காலகட்டத்தில் அமைச்சராக இல்லாதிருந்தமையும் இதற்கான காரணமாக இருக்கலாம்.

அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் போது முதலாளிகள் செயற்படும் விதமும், பதவி இல்லாதிருக்கும் போது நடந்து கொள்ளும் விதமும் வித்தியசமானதே. ஆறுமுகம் தொண்டமான் 1000 ரூபா பெற்றுத் தருவதாக அறிவித்ததையடுத்து முண்டியடித்துக் கொண்டு சிலர் 50 ரூபா உயர்வு பற்றிப் பேசினார்கள். ஆனால்,  ஒரே அமைச்சரவையில் இருந்தும் கூட நவீன் திஸாநாயக்கவுடன் பேசி பெற்றுக் கொடுத்திருக்கலாமே? பெற்றுக் கொடுக்க முடியாவிட்டால் பதவி விலகி இருக்கலாமே.

 அதனை விடுத்து இப்போது அதற்காக குறை கூறிக் கொண்டிருப்பதில் எவ்வித நியாயமும் இல்லை. ஆறுமுகன் கேட்டபடி ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அதனை வழங்க ஏற்பாடு செய்வதாகக் கூறினார். அதனை பெற்றுக் கொடுக்க எப்படியாவது நாமும் அவருக்கு அழுத்தம் கொடுப்போம்.

இன்று தோட்டங்கள் காடாகி இருப்பதற்கு தோட்ட நிர்வாகங்களே முக்கிய காரணம் ஆகும். இலாபத்தை பெறக் கூடியதாக தோட்டங்களை வைத்திருக்க வேண்டிய தோட்ட நிர்வாகங்கள் அதனை சூறையாடிச் செல்லும் அளவுக்கே செயற்படுகின்றன. அவை தோட்டங்களை அபிவிருத்தி செய்வதும் இல்லை. இந்தத் தோட்டங்களை மீள்நடுகை செய்து பராமரிப்பதாயின் அத்தோட்டங்கள் தொழிலாளர்களுக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்ற 'அவுட்குரோவர்' திட்டத்தை தோட்டங்களில் அமுல்படுத்தக் கோரி கடந்த பத்து வருட காலமாக முயற்சித்து வருகின்றேன். இது பற்றி அப்போது அமைச்சராக இருந்த நவீன் திஸாநாயக்கவிடம் பேசினேன். அவரும் அதற்கு ஆதரவளித்தார். இந்தத் திட்டத்தை இ.தொ.காவும் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டதுடன் இது மேலும் பேச்சுவார்த்தை மேசைக்கு செல்ல வேண்டும் என்று கோரியே கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருந்தார்கள்.

கேள்வி: அவுட்குரோவர் முறைமையினால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் காணி உரித்து இல்லாமல் தங்களை மேலும் வருத்தியே வேலை செய்கின்றனர். இந்நிலையில் இம்முறை சரி என்கின்றீர்களா?

பதில்: நாம் சொல்வது அவர்களுக்காக வழங்கப்படும் காணியில் அவர்களுக்கு மீள்நடுகை செய்வதற்கான அனுமதி வழங்கி அவர்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்பதாகும். அதனை நாம் தொடர்ச்சியாக கோரி வருகின்றோம்.

கேள்வி: கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் நீங்கள் எவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள்?

பதில்: கொழும்பைத் தளமாகக் கொண்டே இ.தொ.காவில் இணைந்து செயற்பட்டேன். எனக்கு 30 வருட தொழிற்சங்க அனுபவம் இருக்கின்றது. என் பிறப்பிடம் கண்டியாக இருந்தாலும் நான் தோட்டத்தில் வாழ்ந்தவன் அல்ல. ஆனால், ஒரு தொழிற்சங்கவாதியாக நான் அதனை கற்றறிந்தவன் என்கின்ற ரீதியிலேயே மக்களுடன் இருக்கின்றேன்.

(நன்றி-தினகரன் 17/06/2020)



You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images