பொதுச்செயலாளர் எனும் ‘பொறுப்பான’ பதவி -ஜீவா சதாசிவம்

June 21, 2020


இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் பிரதான அமைப்பாக விளங்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மறைவை அடுத்து அண்மையில் ( 17/06/2020) இடம்பெற்ற தேசிய சபை கூட்டத்தில் அவரது மகன் ஜீவன் தொண்டமான் பொதுச்செயலாளராக ஏகமனதாக நியமனம் பெற்றுள்ளார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 80 ஆண்டுகால வரலாறு கொண்டது எனக்கூறப்பட்டாலும் அதன் முதல் பத்துவருடங்கள் இலங்கை - இந்திய காங்கிரஸ் ஆகவே செயற்பட்டது. 1939 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை - இந்திய காங்கிரஸ் எனும் அரசியல் கட்சி 1940 இல் அதன் தொழிற்சங்க கிளையையும் உருவாக்கியது. 

1939 முதல் - 1948 வரை இருந்த செயலாளர்களாக பின்வருவோர் செயற்பட்டுள்ளனர். 

1939-1940 வரை எச்.எம்.தேசாய், இணைச்செயலாளர் - ஏ.அஸீஸ், 1940-41 வரை ஜி.ஆர்.மோத்தா (ஏ.அஸீஸ் ராஜினாமா செய்தார்) எஸ்.சோமசுந்தரம், கே.ராஜலிங்கம் (தற்காலிகம்- Acting), 1942-1943 வரை ஜி.மாதவராம், பி.டி.தாணுப்பிள்ளை, 1944 எஸ்.வைத்திலிங்கம், இணைச்செயலாளர் எம்.பி. சின்னையா, 1945-எஸ்.வைத்திலிங்கம், இணைச்செயலாளர்கள்  ஜி.மாதவராம், கே.ராஜலிங்கம், 1946 எஸ்.வைத்திலிங்கம் , இணைச்செயலாளர்-ஜி.ஆர்.மோத்தா, 1947-கே.ஜி.எஸ்.நாயர், எம்.ராம் சுப்ரமண்யம், 1948-எஸ்.எம்.சுப்பையா எம்.பி, கே.ஜி.எஸ்.நாயர்-இணைச்செயலாளர். 

அதனையடுத்து 1952 இல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றதும் அ.அஸீஸ் அவர்களே பொதுச்செயலாளராக இருந்துள்ளார். 1956 இல் அவர் பிரிந்து சென்று ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸை ஆரம்பித்ததும்  அந்தப் பொறுப்பு 1965 வரை  விகே.வெள்ளையன் வகித்துள்ளார். 1965 இல் அவரும் விலகிச் சென்று தொழிலாளர் தேசிய சங்கத்தை ஆரம்பித்தார். 

அதனையடுத்து பொதுச் செயலாளர் பதவிக்கு வந்த   எம்.எஸ்.செல்லச்சாமி  மிக நீண்ட காலம் அந்தப் பதவியை வகித்ததுடன் செயல் வீரர் செல்லச் சாமி என பெயர் எடுத்தவர்.

“மலையக பெருந்தோட்டங்களில் இ.தொ.கா வை ஒரு பெரும் தொழிலாளர் சக்தியாக மாற்றி அமைத்ததில் எம்.எஸ்.செல்லசாமியின் பங்களிப்பு மிக முக்கியமானது இ.தொ.காவின் ஏற்றத்துக்கு தவிர்க்க முடியாத உந்து சக்தியாக விளங்கிய அவர், எண்பதுகளில் இ.தொ.காவை கொழும்பிலும் கட்டி எழுப்பினார். கோல்பேஸ் ஹோட்டலில் தொழிற்சங்கம் அமைத்து தொழிற்சங்க ரீதியாக வெற்றிபெற்ற அவர், எலிபண்ட் ஹவுஸ் நிறுவனத்திலும் தொழிலாளர்களுக்காக போராடி தொழிலாளர்களுக்கு நன்மைகள் பெற்றுத்தந்தார். 

பெருந்தோட்ட சங்கமொன்று கொழும்பில் காலூன்றி ‘எங்கும் செல்லசாமி என்பதே பேச்சு’ எனச் சொல்ல வைத்தவர் செல்லசாமி மட்டுமே! ஒரு மலையக தொழிற்சங்கமொன்று கொழும்பில் தன்னை நிலை நிறுத்தி வளர்த்துக் கொண்டதோடு தேர்தல்களில் வெற்றிபெறும் அளவுக்கு வாக்காளர்களை இ.தொ.காவுக்கு சேகரித்துக் கொடுத்திருந்தார். 

கொழும்பில் இன்று தமிழ் வேட்பாளர்கள் தேர்தல்களில் நின்று வெற்றி பெறமுடிகிறது என்றால், தலைநகரில் தமிழர்களுக்கு ஒரு அடித்தளமிருக்கிறது என்றால் அதை முதன் முதலாக உருவாக்கி வைத்தவர் எம்.எஸ். செல்லசாமியே! இதை எவருமே மறைக்கவோ மறுக்கவோ முடியாது.” என்று எம்.எஸ்.செல்லசாமியின் உடனான நேர்காணலை  11/17/2019 அன்று தினகரன் வாரமஞ்சரியில் தொகுத்து வெளியிட்டிருக்கும் கட்டுரையிலேயே  சிரேஷ்ட ஊடகவியலாளர் அருள்சத்தியநாதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1993 மாகாண சபை தேர்தலை அடுத்து எம்.எஸ். செல்லச்சாமியும் விலகிச் சென்று இலங்கைத் தேசிய தொழிலாளர் காங்கிரஸ் எனும் அமைப்பை உருவாக்கினார்.  

இவர் 1992இல் விலகிச்சென்று தனியான தொழிற்சங்கம் தொடங்கிய அதேநேரம் இ.தொ.கா செயலாளர் என்றவகையில் " சேவல்" சின்னத்தையும் கொண்டு சென்றுவிட்டார்.

அதற்கு முன்னதாக செயலாளர்கள் விலகிச் சென்றபோது எழாத பிரச்சினை செல்லச்சாமி விலக்களின்போது ஏற்பட்டது. ஏனெனில் அதற்கு முன்னர் தொழிற்சங்க செயலாளர்களாக மட்டும் இருந்தார்கள்.  செல்லச்சாமி காலத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் பிரிவு தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சியாகவும் அங்கீகாரம் பெற்றிருந்தது. 

1999 ஆம் ஆண்டு சௌமியமூர்த்தி தொண்டமான் இறக்கும் போது ஒரு தொழிற்சங்கத்தின் தலைவராகவே மறைந்தார். 1994 அமையப் பெற்ற சந்திரிக்கா அரசாங்கத்தில்   அவர் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவே இருந்தார். 1994 இல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக ஆறுமுகன் தொண்டமான் நியமனம் பெற்றாலும் அது தொழிற்சங்கத்துக்கு மட்டுமே. அரசியல் கட்சிக்கு அல்ல. 

1999 ஆம் மாகாண சபை தேர்தலை தனித்து சந்திக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியிடம் சேவல் சின்னம் இருக்கவில்லை. அதனை செல்லச்சாமி கொண்டிருந்தார். எனவே தான் கூட்டணி அமைத்து இந்திய வம்சாவளி பேரணியாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களும் போட்டியிட்டதாக கூறப்படுகிறது. 

அதனை அடுத்த  சௌமியமூர்த்தி தொண்டமான்  மறைவின் பின்னர் 2000 ஆம் ஆண்டு தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணி பட்டியலிலேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்டது. அதற்கடுத்த உள்ளூராட்சி மாகாண சபைத் தேர்தல்களில் தனித்து போட்டியிடும் தேவை வந்தால் தமக்கு சின்னம் ஒன்று அவசியம் என உணர்ந்த ஆறுமுகன் தொண்டமான் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்கி எம். எஸ். செல்லச்சாமியை மீண்டும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்க்குள் உள்வாங்கி பிரதி அமைச்சர் பதவியையும் பெற்றுக் கொடுத்தார். 

மேலும் 2007 ஆம் ஆண்டு சிலாபத்தில் இடம்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மாநாட்டில் கட்சியின் செயலாளர் பதவியை எம்.எஸ். செல்லச்சாமியிடம் இருந்து தனதாக்கிக்கொண்டார். உண்மையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சிக்கு அப்போதே ஆறுமுகன் செயலாளர் ஆனார். 2010 தேர்தலில் செல்லசாமி கழற்றி விடப்பட்டார். 

அப்போதிருந்தே தமது குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவருக்கு அந்தப் பதவி போகாத வண்ணம் பார்த்துக் கொண்ட ஆறுமுகன் தொண்டமான்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது உறவினரான  அனுஷா  சிவராஜா விடம் பொதுச் செயலாளர் பதவியை பெயரளவில் கொடுத்து தனது மகன் ஜீவன் தொண்டமானை பிரதிப் பொதுச்செயலாளராக்கி கட்சியையும் சின்னத்தையும் பாதுகாத்துக் கொண்டார். 

இப்போது அவரது மறைவின் பின்னர் ஜீவன் தொண்டமான் தனது தந்தையை விட இளவயதில் பொதுச்செயலாளர் எனும் பெரும் பொறுப்பை இலகுவாக பெற்றுக் கொள்ள இந்த திட்டமிடல் இடம் அளித்துள்ளது. 

எது எவ்வாறெனினும் 1939 ல் இருந்து மொராஜ் தேசாய், அ. அஸீஸ், ஜி. ஆர். மோத்தா, எஸ். சோமசுந்தரம், கே. ராஜலிங்கம், ஜி. மாதவராம், பி.டி.தாணுப்பிள்ளை, எஸ். வைத்திலிங்கம் , எம். பி. சின்னையா, கே.ஜி.எஸ். நாயர், எம். ராம சுப்பிரமணியம், எஸ். எம். சுப்பைய்யா, மீண்டும் அ. அஸீஸ், வி. கே. வெள்ளையன், எம்.எஸ். செல்லச்சாமி  என அனுபவமிக்க அரசியல்வாதிகள் வகித்த பொறுப்புமிக்க பதவியை இளைஞரான ஜீவன் தொண்டமான் எந்தளவு தூரம் பொறுப்புடனும் நிதானத்துடனும் செயற்படுத்த போகிறார் என்பதிலேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் எதிர்கால வெற்றி தங்கி உள்ளது .

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images