வாக்காளர்களையும் பேசவிடுங்கள் - 'மலைகளைப் பேசவிடுங்கள்' அறிமுக விழாவில் மு.சி

September 07, 2020

 
ஜீவா சதாசிவம்

மாவிலைக் கும்பமில்லை. மங்கல குத்து விளக்குமில்லை. மாறாக கரம் கூப்பி வணக்கம் சொல்ல ஒருவர். கைகளில் கிருமிநாசினி தெளிக்க ஒருவர், வரவேற்கப்படுபவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து ஒரு தாளில் குறித்து ஒருவர் தர வந்தவர் அதனை நிரப்பி விழா ஏற்பாட்டாளர்களிடம் கொடுத்துவிட வேண்டும்.



இதுதான் கலாசாரமா என்று கேட்டவருக்கு 'கொரோனாவுக்கு பின்னான கலாசாரம்' என எளிமையாக பதில் அளித்துவிட்டு வழமைபோலவே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருந்தார் நூலாசிரியர் மல்லியப்புசந்தி திலகர். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் இல்லாதபோதும் கடைபிடிக்கும் அதே எளிமையும் இன்முகமுமாய் வந்தவர்களையும் வரவேற்றுக்கொண்டு ஒழுங்கமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிக் கொண்டு இருந்தார்.



அழைப்பிதழில் 2 மணி என அச்சிட்டிருந்தது. ஏற்கனவே திட்டமிட்டவாறு 29-08-2020 அன்று ஹட்டன் நகரில் இன்னுமொரு மண்டபத்தில் பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஸ்க்கான பாராட்டுவிழா வில் கலந்து கொண்டுருந்த பலர் ஹட்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற மலைகளைப் பேசவிடுங்கள் அறிமுக விழாவுக்கு வருகை தருவோரின் தாமதம் உணரப்பட்டது. என்றாலும் கூட 2:30 க்கு விழா ஆரம்பமானது. விழா பற்றிய சிறு அறிமுகத்துடன் சுயாதீன ஊடகவியலாளர் ஜீவா சதாசிவம் ஆரம்பித்து தலைமையேற்பவர் முதல் உரையாற்றுபவர்கள் ஐவரையும் மேடைக்கு அழைத்தார். அடுத்ததாக வரவேற்புரையை வழங்குமாறு அரசியல், சமூக செயற்பாட்டாளர் ராமன் செந்தூரன் அழைக்கப்பட்டார். வழங்கப்பட்ட பொறுப்பில்; இருந்து மாறாமல் தன்பணியை நிறைவேற்றி விடைபெற்றார் செந்தூரன்.

எழுத்திலும் அரசியலிலும் சமகாலத்தில் இயங்குதலில் தனக்கு மு.சிவலிங்கம் முன்னோடி என்ற அடிப்படையில் இவரே விழாவுக்கு தலைமை ஏற்க நூலாசிரியர் விரும்பியதான அறிமுகத்துடன் தலைமையுரை வழங்க எழுத்தாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உபதவிசாளருமான மு.சிவலிங்கம் அழைக்கப்பட்டார். 



அவருக்கு 15 நிமிடங்கள் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். தனக்கே உரிய பாணியில் பலதும் பத்துமாக கலந்து அதனது தலைமையுரையை வழங்கிய மு.சிவலிங்கம், 'யாதும் ஆகி நின்றாய்' என்பதுபோல கவிஞராக, எழுத்தாளராக, பேச்சாளராக, தொழிற்சங்கவாதியாக, அரசியல்வாதியாக, பாராளுமன்ற உறுப்பினராக, பதிப்பாளராக வலம் வரும் திலகர் ஒரு சிறந்த சிறுகதை ஆசரியருமாவார் என ஹட்டன் நகரில் பலரும் அறிய வாழ்ந்து மடிந்த பார்வையற்ற நீலமேகம் எனும் யாசகனுக்கும் தனக்குமான உறவை வைத்து திலகர் எழுதிய 'பார்வைகள்' சிறுகதை குறித்து சிலாகித்துப் பேசினார். 


இப்படி நுணுக்கமான விடயங்களையும் தனிநபர்களையும் அடையாளம் காண்பதில் திலகர் திறமையானவர்.அப்படி மலையக மக்களின் பிரஜாவுரிமை விடயத்தில் செயற்பட்ட அந்தனி எனும் தனிநபர் ஒருவரின் சாதனையை அடையாளம் கண்டு அவருக்கே இந்த நூலையும் சமர்ப்பணம் செய்துள்ளார். இந்தப்புத்தகம் இப்படி பல விஷயங்களைப் பேசுகிறது. அதனால்தான் ஆதங்கம் மிகுந்த தலைப்பாக 'மலைகளைப் பேசவிடுங்கள்' என தலைப்பிட்டுள்ளார்.  அவர் விடயத்தில் வாக்காளர்கள் பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே ஓட்டுப்போடும் வாக்காளர்களையும் பேசவிடுங்கள் எனும் செய்தியை சூட்சுமமாகச் சொல்லி உரையை நிறைவு செய்தார்.

அடுத்து அறிமுகவுரை. இலக்கிய மேடைக்கு ஒரு புதிய இளைஞரை அறிமுகம் செய்திருந்தார் திலகர். 



பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ள இவர் வாசிப்புத்துறை சார்ந்த ஒரு வளவாளராக பணியாற்றுகின்றார். மலைகளைப் பேசவிடுங்கள் எனும் நூலைத் தான் எப்படி வாசித்தேன் எனும் அனுபவப் பகிர்வாக அறிமுக உரை அமைந்தது. மல்லியப்புசந்தியில் தான் என்ன செய்யப்போகிறேன் என முன்மொழிவு செய்துவிட்டு அதனை தான் எவ்வாறு செய்தேன் என்பதை மதிப்பாய்வு செய்வதாக மலைகளைப் பேசவிடுங்கள் எனும் இந்த நூலைத் தந்திருக்கிறார் என இரத்தினச்சுருக்கமாக அமைந்தது அறிமுகம். கூடவே, கொழும்பு அறிமுக நிகழ்வின்போது கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் மனோகணேசன் திலகர் மலையகத்தின் மனசாட்சியாக திகழ்கிறார் எனக் கூறியது இந்த நூலிலே பிரதிபலிக்கிறது. இப்போது எல்லோரது மனசாட்சிகளையும் கேள்வி கேட்டும் காலமும் கனிந்துள்ளது என்றும் கூறி உரையை நிறைவு செய்தார்.

அடுத்து நூல் வழங்கல். தனது தந்தையின் கரங்களில் தனது இடைநிலைக் கல்வி ஆசான் வ.செல்வராஜா அவர்களுக்கு முதல் பிரதியை காணிக்கையாக செலுத்தினார் திலகர். அதனையடுத்து தனது உயர்கல்வி ஆசான் கலாநிதி பொன். சிங்கரட்ணம், ஆரம்ப கல்வி ஆசான் வட்டகொடை சுப்பையா ராஜசேகரன், நலன் விரும்பிகளான தனது சிறியதந்தை தர்மகுலராஜா, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ராஜேஷ்வரி கார்த்திகேசு, திரு.திருமதி. அண்ணாசாமி, தொழிலாளர் தேசிய சங்க பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஷ்வரன், தனத பாடசாலை நண்பரும் ஹட்டன் நகர சபை செயலாளருமான சரவணபவன் ஆகியோருக்கு சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.


நூலின் ஆய்வுரையை ஆற்றியவர் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர்

எம்.எம்.ஜெயசீலன். அவருக்கே உரிய பாணியில் அலசி ஆராய்ந்து மலைகளைப் பேசவிட்டார். அரசியல் சமூக பத்தி எழுத்து எனும் வகையறாவுக்குள் அடக்கப்படக்கூடிய மலைகளைப் பேசவிடுங்கள் பேசவந்த விடயங்களின் ஆழ, அகலங்களையும் அதில் திலகரின் முனைப்பான அம்சங்களையும் பலவீனமான பக்கங்களையும் கூட சுவைபட எடுத்துச் சொன்னார். இந்தச் சிறிய நூலுக்குள் இத்தனை விடயங்களா எனும் ஆச்சரியக்குறி கேட்டுக் கொண்டிருந்த ஒவ்வொருவர் நெஞ்சிலும் எழுந்திருக்கும். இவரது ஆய்வுரை தனியாக பதிவு செய்யப்படவேண்டியது. அது மேலும் பற்பல விடயங்களைப் பேசவல்லது.



அடுத்தது கருத்துரை. மலைகளைப் பேசவிடுங்கள் எனும் தனது நாடகத்தின் தலைப்பே இந்த நூலின் தலைப்பாகவும் அமைந்தபோது உணர்ச்சிவசப்பட்ட உரையாகவே அமைந்தது. திலகராஜ் பாராளுமன்றத்தில் இருந்தகாலம் மலையகத்தில் மிக முக்கியமான காலம் என்பதை வரலாறு உணர்த்தும். இனி ஆகவேண்டியது என்ன என்பது பற்றி பேசுவதே இந்த நூலை முன்வைத்த எனது கருத்து அமைகிறது என எதிர்கால மலையக அரசியல் போக்குகள் குறித்த சில கேள்விகளை முன்வைத்தார். அதில் தோட்டங்களை கிராமமாக மாற்றுவது தீர்வாகுமா? தோட்டம் எனச் சொல்லும்போது மக்களிடம் உள்ள உணர்வு மழுங்கடிக்கப்படுமா ? பெருந்தோட்டங்களை மாற்றி சிறுதோட்ட உடமையாளராக்க வேண்டும் என்பது சரிதானா? என்பதுபோன்ற இந்த மலைகள் இனி பேச வேண்டி இருக்கிறது என்றார்.


இறுதியாக நூலாசரியர் திலகரின் ஏற்புரை. தான் விழா தலைவருக்கும் தன்னை வளர்த்த ஆசான்கள் நலன்விரும்பிகள் உள்ளிட்ட ஒன்பது பேருக்கே அழைப்பிதழ் கொடுத்ததாகவும் ஏனைய அனைவருக்கும் அது திறந்த ஒரு அழைப்பாகவே விடுத்திருந்த நிலையில் வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு அனைவருக்கும் விழா நிறைவில் நூல்களை வழங்கி நன்றி தெரிவித்தார்.

 கூடவே இந்திய பதிப்பாக வெளியிட்ட தனது இந்திய நண்பர்கள், உரைகளை வழங்கிய பெரியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மல்லியப்புசந்தி வெளியீட்டின் சிறப்பு அதிதிகளே இன்றும் தனக்கு சிறப்பு அதிதிகளாக இருப்பது பெருமையாக உணர்வதாகவும் கூறினார். தனது பாராளுமன்ற பதவிக்கலாம் ஐந்து வருடங்கள்தான் என்பதற்கு தனது ஆரம்ப கல்வி ஆசான் ராஜசேகரன், ஆசிரியை ராஜேஷ்வரி ஆகியோர் சாட்சி என அவர்கள் முன்னிலையிலேயே கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவர்கள் தங்களது பிள்ளைக்கு வழங்கிய ஐந்துவருட பணியை நிறைவு செய்து அவர்களது பிள்ளையாக மீண்டும் வந்து நிற்பது மகிழ்ச்சி என்றார். 



தனது மானசீக அரசியல் ஆசான்களில் ஒருவரான பி.ஏ.காதரிடம் 2019 ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி லன்டனில் வைத்து அடுத்த பாராளுமன்றில் இருக்கும் வாய்ப்பு குறைவு என கூறி வைத்ததாக பகிரங்கமாக கூறினார். அடுத்து பாராளுமன்றம் செல்பவர்கள் ஆற்ற வேண்டிய பணிகளாக தான் உணர்வதை இந்த நூலில் இறுதி அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவற்றை அடுத்து வரும் திலகராஜாக்கள் பேச வேண்டும் என்பதன் குறியீடாகவே 'மலைகளைப் பேசவிடுங்கள்' எனும் என் ஆசானின் நாடகத் தலைப்பை உரிமையோடு எடுத்துக்கொண்டேன். அவரிடம் அதற்காக விசேட அனுமதி கோரவில்லை. ஏனெனில் வ.செல்வராஜாவிடம் நான் கற்றது 'சமூகக் கல்வி'. சமூகத்துக்காக அவரிடம் கற்றதை நடைமுறைப்படுத்த இவ்வாறு அவரது தலைப்புகளை எடுத்துக்கொள்ளும் உரிமை எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன். என் சமூகத்திடமும் அப்படியான சில உரிமைகளை எடுத்துக் கொண்டுள்ளேன் என்றார்.


விழா நிறைவாக அனைவருக்கும் அவரது கரங்களிலேயே நூல் பிரதிகளை வழங்கி வைத்ததுடன் அதன்போதே தேநீர் விருந்தும் இடம் பெற்றது. அனைவரும் நூல் வாங்கி, தேநீர் அருந்தி உரையாடி விடைபெற்றுச் சென்றனர். தேநீர் வழங்கவோ பொன்னாடை போர்த்தவோ விருதுகள் வழங்கவோ என விழா நேரம் வீணடிக்கப்படாது இடையூறு இல்லாமல் இனிதாக நிறைவு பெற்றது மலைகளைப் பேசவிடுங்கள் ஹட்டன் அறிமுகவிழா.

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images