தோட்ட சுகாதார முறைமையை அரசு பொறுப்பேற்றல்: ஒரு பார்வை

January 16, 2021

 - ஜீவா சதாசிவம்

லையக மக்களின் பிரச்சினை என்றவுடன் 'ஆயிரம் ரூபா' என்பதுதான் அர்த்தப்படுத்தப்பட்டுவிட்டுள்ள நிலையில், அதனையும் தாண்டிய இன்னுமொரு பிரச்சினை பற்றியும் பேசவேண்டிய காலம்தான் இது.

ஆயிரம் ரூபாவுக்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுபோல மலையகப் பெருந்தோட்டத்துறையில் அமுலில் உள்ள தோட்ட சுகாதார முறைமையை அரசாங்கம் பொறுப்பேற்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அப்படியாயின் தோட்ட சுகாதார முறைமை என்ற ஒன்று நடைமுறையிலுள்ளது என்பதும் இதுவரையில் அரசாங்கத்தின் பொறுப்பில் மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் சுகாதார நடைமுறைகள் இல்லை என்பதும் தெளிவு.

அதனை யார் நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதும் எழும்பும் வினா?. ஆயிரம் ரூபா விடயத்துக்கும் இதற்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில் இதனையும் அதே பிராந்திய கம்பனிகளே நடைமுறைப்படுத்துகின்றன என்பதாகும்.

இந்த தோட்ட சுகாதார முறைமை ( Estate Health Sector) வளர்ந்துவந்த  வரலாறு பெரியது. சுருக்கமாகச் சொன்னால்; இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை அழைத்துவந்தபோது அவர்களிடம் இருந்தான தொற்றுநோய்களைத் தவிர்ப்பதற்கு சொட்டுமருந்து கொடுப்பதற்கு உருவான முறைமை அப்படியே அடுத்த கட்டத்தை அடைந்து தோட்ட மருத்துவ முறைமையாக வளர்ந்துவிட்டது.

பெருந்தோட்டங்களை நிர்வகித்த நிறுவனங்களே அந்த மக்களின் சுகாதாரத்துறையையும் பொறுப்பாக ஏற்றுக் கொண்டனர். இலலங்கை சுதந்திரம் அடைந்த கையோடு இந்த மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதால் அரச சேவைகள் எதிலுமே உள்வாங்கப்படவில்லை. சம்பளம் முதல் சுகாதாரம் வரை என சுருக்கமாக சொல்லலாம்.

பின்னர் குடியுரிமை என்றபெயரில் வாக்குரிமைக் கிடைக்கப்பெற்றாலும் அரச பொது சேவைகள் அந்த மக்களை வந்து சேரவில்லை. தோட்ட சுகாதார முறைமையை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் பொருட்டு இதற்கு முன்னரும் இரண்டு அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டு நிமல் சிறிபால டி சில்வா சுகாதார அமைச்சராகவும் வடிவேல் சுரேஷ் பிரதி சுகாதார அமைச்சராகவும் இருந்த காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்தின் பேரிலேயே 44 தோட்ட வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. எனினும் அதில் 22 அளவே இப்போது செயற்பாட்டில் உள்ளபோதும் ஏனையவை செயலற்று முடங்கின. அதற்கு பின்னர் வேறு வைத்திய நிலையங்களுக்காக அந்த அமைச்சரவைப் பத்திர தீர்மானம் பயன்படுத்தப்படாததோடு அந்த பத்திரமும் மாயமாகிவிட்டது.

2018   ராஜித்த சேனரத்ன காலத்தில் ஒரு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அபிப்பிராயம் கோரலுக்காக ஏனைய அமைச்சுக்களுக்கு வழங்கப்பட்டபோது அந்தத் திட்டத்தை மறுத்த அமைச்சுக்களும் இருந்தன. இந்த நிலையிலேயே சுகாதரம் தொடர்பிலான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவராக முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா செயற்பட்ட காலத்தில், திட்டத்துடன் தொடர்புடைய ஐந்து அமைச்சுக்களையும் இணைத்து பெறப்பட்ட உடன்பாட்டு அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. இப்போது அது குறித்துப் பேசவோ கேள்வி எழுப்பவோ நாடாளுமன்றத்தில் அவர் இல்லை.

அதே நேரம் முதலாவது அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்த காலத்தில் பிரதி சுகாதார அமைச்சராக இருந்த, தற்போதைய பதுளை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கேள்வி- பதில்  நேரத்தில் எழுப்பியுள்ளார்.

 

இதற்கு பதில் அளித்தசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தோட்ட சுகாதார முறைமை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படும்  என  சபையில் கூறியுள்ளார்.

அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் அமைச்சரவை பத்திரத்தினூடாக அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது. அதே நேரம் அமைச்சரவைப் பத்திரத்தினைத் தாண்டி தோட்ட சுகாதார முறைமையை தேசிய மயமாக்குவதற்கு பல பணிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அதற்கு சுகாதார மேற்பார்வைக் குழு அறிக்கையை கையில் எடுக்க  வேண்டும் என அந்த அறிக்கை தயாரிப்பிற்கு தலைமை வகித்த முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா  ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலே, கடந்த கால அமைச்சரவைப் பத்திரங்களுக்கு  என்ன ஆனது என கேள்வி எழுப்பி உள்ளார். எனவே நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையிலே உடன்பட்டவாறு அனைத்து அமைச்சுக்களையும் இணைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இந்த அமைச்சுக்களை இணைத்து தயாரிக்கப்பட்ட ஆவணத்தின் அவசியத்தை  அமைச்சர் பவித்திரா வனலனியாரச்சியின் உரையில் அவதானிக்க முடிகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது வைத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்ய காணிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள சிக்கல்களை அமைச்சர் விபரக்கிறார்.

தான் சுகாதார மேற்பார்வைக் குழுவாக செயற்பட்ட காலத்தில் 500 தோட்ட வைத்திய நிலையங்களையும்  அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர  நிர்வாக மட்டத்தில் ஏற்பாடுகள் சீர் செய்யப்பட்டுள்ளன என்றும் திட்டத்துடன் தொடர்புடைய சுகாதார அமைச்சு, பெருந்தோட்டத்துறை அமைச்சு, காணி அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, மாகாண சபைகள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்ட அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அதன் பிரதிகள் சுகாதார அமைச்சின் 'தோட்ட நகர சுகாதார பிரிவு' பணிப்பாளரிடம் கையளிகலகப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கிறார். சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அதனை அதனை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளதாகவும் அதற்கான அங்கீகாரத்தை புதிய அமைச்சரவைப் பத்திரம் வழங்கினாலே போதுமானது என்றும் தெரிவிக்கிறார்.

கட்சி, அரசியல் பேதங்களுக்கு அப்பால் தோட்ட சுகாதார முறைமையை தேசிய சுகாதார முறைமைக்குள்  கொண்டு வர அனைவரும் ஓரணியாக குரல் கொடுக்க முன்வர வேண்டும். எனவே சம்பளப்பிச்சினையில் மலையக அரசியல் தலைமகள் இழுபறி நிலையை அடைந்து படும் அவஸ்த்தையை உணர்ந்து, கொரொனா போன்ற கொடிய நோய்ப்பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில் பெருந்தோட்ட சுகாதார முறைமையை அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் கொண்டுவர ஒரே கருத்து நிலைப்பாட்டில் நின்று செயற்படுவதே வெற்றியைத் தரும் .  

14/01/2021

 

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images