கற்பித்தலில் நன்கு பரீட்சயமான ஒருவராலேயே இணையத்தில் நாட்டியம் சொல்லி கொடுக்க முடியும்

January 16, 2021

 நடன ஆசிரியர் திவ்யா சுஜேன்

 2020 உலகளாவிய ரீதியில் பலர்க்கும் பலவிதமான மாற்றங்களை தந்த ஆண்டு. பொதுவாக மேடை கலைஞர்கள் ரசிகர்களின் கரவொலியை கண்கொண்டு பார்க்க முடியாமால் போன காலம். ஆனால், பொது முடக்க காலத்தில் தனது அதீத திறமையால் உலகளாவிய ரீதியில் பல செயற்திட்டங்களை முன்னெடுத்து இலங்கை கலை உலகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் நம் நாட்டின் சிறந்த நடன கலைஞர் ,நடன ஆசிரியர் ' காலசூரி ' திவ்யா சுஜேன்.



இலங்கையின் பல இளங்கலைஞர்களின் உள்ளத்தினை கவர்ந்தவர், தற்போது உலகளாவிய ரீதியில் உள்ள மூத்த கலைஞர்களனின் அன்பினைத்  தன் தமிழாலும், பண்பாலும் பெற்றவர் திவ்யா சுஜேன். ஆம் , இவர் கையாண்ட புதிய வழி தான் இணையம் வாயிலாக கலைச் செயற்பாடுகள் வழங்கல். இவரது வெற்றியின் சூத்திரமாய் அமைந்த மெய்நிகர் செயல்பாடுகளை கையாண்ட அனுபவத்தினை பற்றி அவரிடமே கேட்டு அறிவோம்.

 

15 ஆவது ஆண்டில் பயணிக்கும் அபிநயக்ஷேத்ராவின் கற்பித்தல் பொது முடக்க காலத்தில்  திடீரென நிறுத்தப்ப பட்ட போது எவ்வகை மாற்றத்தை உணர்ந்தீர்கள்.?

அபிநயக்ஷேத்திராவினால் மார்ச் முதலாம் திகதி மிக முக்கியமான வரலாற்றுப் பதிவாக திருக்கேதீஸ்வர ஸ்தல புராண நாட்டிய நாடகத்தினை மேடையேற்றினோம்.  அந்த நிகழ்வில் இலங்கை , இந்திய கலைஞர்கள் பலரோடும் , அபிநயக்ஷேத்ரா குடும்பம் ஒன்று சேர்ந்து மிக்க ஆனந்தத்துடன் இருந்தோம்

ஆனால், ஒரு வாரத்திற்குள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. ஒரு சில மாதங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்ல ஓய்வு தந்தோம். அதன் பிறகு இணைய வழி வகுப்புகளை ஆரம்பித்தோம். அதில் பெற்ற வருமானத்தை உலர் உணவு வழங்கும் திட்டத்திற்கு உபயோகித்தோம்.

 

இணையம், நாட்டியம் கற்பிக்க ஏதுவான சாதனமா ? எவ்வகையான சவால்களை எதிர் நோக்கினீர்கள் ?

அபிநயக்ஷேத்ராவின் மாணவிகள் பெரும்பாலும் என்னிடம் நேரடியாக வந்து கற்று மகிழவே விருப்பம் கொள்வர். இருப்பினும் புதிய மாற்றத்தை உணர்ந்தவர்களாக , இணையத்தில் கற்பிக்க இலகுவான முறையில் குழுக்களை பிரித்து ஆரம்பித்தோம்.

சவால் என்று கருதவில்லை ஆனால் சில சுவாரசியமான அனுபவங்கள் கிடைத்தது. கற்பித்தலில் நன்கு பரீட்சயமான ஒருவரால் தான் இணையத்தில் நாட்டியம் சொல்லி கொடுக்கலாம் என்பது புரிந்தது.

நமது நாட்டில் உள்ள நடனப் பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களை கருத்தில் கொண்டு நாட்டியத்தின் முக்கிய கூறுகளான அபிநயம், தாளம் இரண்டிற்கும்  இணைய வழி பயிற்சிப் பட்டறைகளை வழங்கினோம்

இந்த அனுபவமே தற்போழுது , நட்டுவாங்க சான்றிதழ் கற்கை நெறியை உலகளாவிய ரீதியில் உள்ள மாணவர்கள், கலைஞர்களுக்கு இணைய வழியினூடாக வழங்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகக் காரணமானது. நட்டுவாங்க கற்கை நெறியை ,இந்தியா, லண்டன், நோர்வே, சிங்கப்பூர், இலங்கை நடன கலைஞர்கள் மேற்கொள்கின்றனர். நம் நாட்டின் கலை கல்வி மீது எப்போதுமே கருத்தகா இருப்போம். இந்த கற்கை நெறிக்கும் பொருளாதார வசதி குறைந்த 14 மாணவர்களுக்கு புலமை பரிசு வழங்கினோம். குறிப்பாக  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா, பஸ்ஸர, பொகவந்தலாவ, பதுள்ள, ஹட்டன் இடங்களில் இருந்து பல்கலைக்கழகம் சென்று நடனத்தை பிரதான பாடமாக கற்கும்  மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கினோம்.

 


எப்போதுமே புதிய முயற்சிகளுக்கு முன்னோடியாக இருக்கும் நீங்கள் , பொது முடக்க காலத்தில் எவ்வகையான முயற்சியை மேற்கொண்டீர்கள் ?

சிறு வயதில் இருந்தே கலைஞர்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். கலைகளின் மூலம் அன்பினை பரப்பிட வேண்டும் என்பதில் ஆசை அதிகம். நம்பிக்கை என்றும் சொல்லலாம். இந்த எண்ணம் பொது முடக்க காலத்தில் மிக தீவிரமாக இருந்தது. அதுவே உலக இலங்கை பரதநாட்டிய கலைஞர்கள் சங்கம் உருப்பெற காரணமானது.

 

உலகளாவிய ரீதியிலான இச்சங்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?

எனது குருநாதர் பத்ம பூஷண் பேராசிரியர் C.V.  சந்திரசேகர் ஐயாவின் 85 ஆவது பிறந்த நாள் அன்று ஆரம்பித்தோம். இச்சங்கத்தின் மூல நோக்கமும் நமது குரு பரம்பரை தொடர வேண்டும் என்பதே. இணைய வழியினூடான தொடர்பாடலுக்கு யாவரும் தயாராகி இருந்ததாலும், இக்கால கட்டத்தில் கலைஞர்கள் இன்னொரு பரிமாணத்தில் கலைக்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்கிற மன நிலையில் இருந்ததாலும் குறுகிய காலத்திற்குள் இச்சங்கத்தின் செயற்பாடுகள் வெற்றி கண்டன.

 

கடந்த 6 மாத காலத்திற்குள் பல இணைய வழி நிகழ்வுகளை நடாத்தி இருக்கிறீர்கள். இதில் முக்கியமானவற்றை பகிர்ந்துகொள்ள முடியுமா?

 

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியினூடாகவும், உலக இலங்கை பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் ஊடாகவும் இணைய வழி நிகழ்வுகளை நடாத்துவதற்கு , சங்கத்தின் செயலாளர் லண்டன் நிறைஞ்சனா சுரேஷ் அவர்கள் ஒருங்கிணைத்து வழங்குவார். முக்கியமாக 'ஞானச்சிற்பி' நிகழ்வு  பிரதி வியாழன் தோறும் வெளிவருகிறது.  இதன் மூலமாக உலகளாவிய ரீதியில் உள்ள புலம் பெயர்ந்த மூத்த இலங்கை நடன ஆசிரியர்கள் பலரும் ஆற்றிய நடனப்பணிகளை உலகறிய செய்ய முடிகிறது. நவராத்ரி 9 நாட்களும் 9 நாடுகளில் உள்ள கலைஞர்கள் இணைந்து  ' வையமெல்லாம் நீ நிறைந்தாய் ' ஆற்றுகை நிகழ்வினை நடத்தினோம். இலங்கையின் ஆற்றுகை கலைஞர்களின் திறம் மேலும் ஓங்கிட வேண்டும் என்று ' நாட்டியத்தின் உயிரூட்டி ' என்ற கருப்பொருளில் மாதம் தோறும் கலைத்துறையில் ஆழ்ந்த அனுபவமுள்ள இலங்கை இந்திய கலைஞர்களின் விரிவுரைகளை அமைத்து வருகிறோம்.

இலங்கையில் இருந்து வழங்கும் சர்வதேச மார்கழி உட்சவமாக ' ஆடல் மார்கழி ' நிகழ்வினை 10 நாட்களுக்கு வழங்கவுள்ளோம். அண்மையில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாள் கொண்டாட்டமாக உலக பாரதி விழாவினை வழங்கி நம் நாட்டுக்கு பெருமை தரவல்ல நிகழ்வாக  சிறப்பித்தோம்.

இவற்றை விட சமூக வலை தளங்களிலும் , அபிநயக்ஷேத்ரா மாணவிகளின் ஆற்றுகைகள் வெளிவருகின்றன. குறிப்பாக உலக தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தொடக்க விழா ஆற்றுகை, திகட சக்கர குழுவின் பிரதி வெள்ளி தோறும் நடைபெறும் 'திருவடிக்கீழ் சொல்லிய பாட்டு ' நிகழ்வில் பக்தி இலக்கியங்களை முன்வைத்து 30 பாகங்கள் இதுவரை செய்துள்ளோம். ' பாரதமும் பாரதியும்' என்று அபிநயக்ஷேத்ராவின் தொடர் ஆக்கங்கள் என நேரடி வகுப்புகளை வைக்க முடியாத காலத்தில் மாணவர்களை ஊக்குவிக்க  தொடர்ந்து செயல்படுகிறோம்.  கலைகள் நம் நாட்டின் அடையாளங்கள் , இதன் மூலம் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதே நம்பிக்கை.

 

இணைய வழியினூடாக நடந்த ஒரு நிகழ்வு பலரது கவனத்தையும்   ஈர்த்தது என்றால் உலக பாரதி விழா. இது எவ்வாறு சாத்தியமானது.?

ஆமாம். ஐயனின் அருள். அன்று பார்வையாளர்கள் பலரையும் இணைத்துக்கொள்ள முடியாத அளவு பாரதி விரும்பிகளின் எண்ணிக்கை அமைந்துவிட்டது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே நூற்றிற்கு மேற்பட்ட பன்னாட்டு அன்பர்கள் இணைந்திருந்தார்கள்.

இந்நிகழ்வு சிறப்புற அமைய மூல காரணம் பாரதி வம்சத்தினர் தான். பாரதியின் முத்தமிழை முன்னிறுத்தி ' நின்பால் அத் தமிழ் கொணர்ந்தேன் ' என்னும் நிகழ்வில் இயற்றமிழை பாரதியாரின் எள்ளு பெயரன் 'பசுமைக் கவிஞன் ' திரு நிரஞ்சன் பாரதி அவர்களும், இசைத்தமிழை பாரதியாரின் கொள்ளுப் பெயரன் இசைச்சக்கரவர்த்தி டாக்டர் ராஜ்குமார் பாரதி ஐயாவும் வழங்கி சிறப்பித்தனர். இத்தலைப்பில் உரையாடுவதற்கு சாலப் பொருத்தமானவர்கள் அவர்களே. நாடகத்தமிழ் பற்றிய உரையை நான் வழங்கி இருந்தேன். 

முத்தமிழ் விருந்தாக அமைந்த இந்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு அருளானந்தம் உமாமகேஸ்வரன் ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

 


இணைய வழி குறித்தான உங்கள் வருங்கால திட்டங்கள் பற்றி குறிப்பிடுங்கள் ?

 இலங்கையின் கலை வளர்ச்சிக்கும், நாட்டியத்தில் பற்றுகொண்டோர்க்கு கலைக் கல்வி வழங்குவதிலும் பாரிய பங்களிப்பினை அபிநயக்ஷேத்ரா முன்னெடுத்து நடத்துகிறது. தற்போழுது உலக இலங்கை பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தினூடாகவும் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள உயர் எண்ணம் கொண்ட சிறந்த நடன ஆசிரியர்கள் நம் நாட்டின் கலை வளர்ச்சிக்கு உதவிட முன் வந்துள்ளனர். யாவரதும் துணையோடு ஒன்று பட்டு கலைஞானத்தை வளர்த்திட, பகிர்ந்திட பல முயற்சிகளை எடுப்போம். உள்ளத்தில் உண்மை ஒளியோடு தெளிந்து செய்யும் காரியம் அனைத்திற்கும் இறை அருளும், குரு அருளும் துணை இருக்கும் என்று நம்புகிறோம்.



You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images