அரவம் வந்த வீடுதான் வரமாய் வந்ததா?
January 23, 2021-ஜீவா சதாசிவம்
மலையகம் என்றாலே அழகு நிறை தேசம்தான். அதிலும் விடியும் வேளை அந்த சிவனொளி பாத மலையை கண்கொண்டு பார்க்கும் அழகையும், ஐந்து நிமிடம் நடந்தால் அழகிய காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கால் நனைத்து மகிழும் சுகத்தையும் அனுபவித்து விடலாம் என எண்ணும், அட்டனிலிருந்து 10 கி.மீ தூரத்தில் நோட்டன் வீதியில் அமைந்துள்ள ஒஸ்போன் தோட்டத்தில் வசித்த பாலகன் ஒருவன் படுக்கையிலேயே பாம்பு கடித்து இறந்துவிட்டான் எனும் செய்தி அந்த அழகை அழுகையாக மாற்றிவிட்டது.
'My Friends ' எனும் யூ டியூப் குழுவினரின் வி.ஜெனிஸ்டன் தயாரிப்பில் வெளியான 'பசித்தவன்' (7-10 நிமிட) குறுந்திரைப்படத்தில் மாணவனாக பிரதான கதாப்பாத்திரத்தில் நடித்து ஆயிரக்கணக்கான உள்ளங்களில் தனது பெயரை நிலை நிறுத்திய 12 வயது இளம் கலைஞனான மாணவன் இரவில் தனது வீட்டில் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது பாம்பு கடித்து இறந்ததான செய்தி அதிர்ச்சிக்குரியது.
சிறு வயதிலும் அதிக சுறுசுறுப்பு, பணிவான குணம், அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயற்படும் திறன் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வார்த்தைகள் ஊரவரின் வாய்களில் இருந்து வாய்மொழியாக வந்தவை. 12.01.2021 அன்று அவனது இறுதிகிரியைக்கு சென்றிருந்தப்போது அவ்விடத்தில் கண் கலங்காதவர் எவரும் இருக்க முடியாது.
சிறுவனாக இருந்தாலும் தனது இறப்புக்கு ஆயிரக்கணக்கானவர்கள் வரும் அளவிற்கு உறவுகளை சேர்த்து வைத்து விட்டு இவ்வுலகை விட்டுச் சென்றுள்ளான் எஸ்கர்.
ஏழைத் தொழிலாளியின் வீட்டில் பிறந்த இவன் தன்னுடைய உயிர் எப்படி பிரிந்தது என்று அறியாமலேயே எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றுள்ளான். ஏழைத் தொழிலாளியின் மகனாக பிறந்தது அவனுக்கு நேர்ந்த சாபமா? என்று எண்ணத் தோணுகிறது.
இந்த மரண செய்தியின் பின்னணியாகக் கொண்டு மலையகத்தில் 'வீடு' தேவையின் இன்னொரு பரிமாணம் இங்கே பார்க்கப்படுகிறது.
மலையகம் என்றால் பின்தள்ளப்பட்ட சமூகம் என்றே பலரும் பேசுவார்கள். அது முற்றிலும் பொய் என்று கூறிவிட முடியாது. '21 ஆம் நூற்றாண்டின் நவீன அடிமைகளாக' மலையக மக்கள் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு எஸ்கரின் உயிரிழப்பும் ஒரு வரலாற்று உதாரணமாக தடம் பதித்து விட்டது.
200 வருடகால வரலாறு கொண்ட இந்திய வம்சாவளி மக்களுக்கு இருப்பதற்கு சொந்த இடம்கூட இல்லை என்பது கவலைக்குரியது. பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் வாழும் எமது மக்கள் இன்னும் அடிமைகளாகவே நடாத்தப்படுகின்றார்கள்.
மலையக மக்களின் அரசியல வரலாற்றை எடுத்துப்பாரத்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான போராட்ட கோஷங்களுக்கு அது உட்பட்டு வந்திருப்பதனை அவதானிக்கலாம். மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிற்சங்கம் உருவான 1920 கள் காலப்பகுதியில் அவர்கள் தமது தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்குவததையே தமது போராட்டமாகக் கொண்டிருந்தனர்.
பிரித்தானியர் ஆட்சிகாலத்தில் கொத்தடிமைகள் போல வைக்கப்பட்ட அந்த சமூகம் குறைந்தபட்சம் அமைப்பாக்கம் பெறும் ஒரே வழிமுiறாக இருந்த தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்கவே அதிகமாக அவர்கள் ஆரம்பத்தில் போராட வேண்டியிருந்தது. எனினும் அந்த செயற்பாட்டில் அவர்கள் கொண்டிருந்த வேகமும் அதற்கு தலைமை கொடுத்த கோ.நடேசய்யரின் தலைமையும் 1930 களிலேயே சர்வஜன வாக்குரிமையுடன் கூடியதாக தமக்கான இலங்கை பிரஜை அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது.
1936 ஆம் ஆண்டுகளிலேயே கோ.நடேசய்யர் மலையக மக்களின் பிரதிநிதியாக சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் செய்து ஒரு அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார். எனவே 1920 – 1940 வரையான காலப்பகுதி என்பது மிக வேகமாக தொழிற்சங்க பலத்தின் ஊடாக அரசியல் அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்த காலமாக அமைந்தது.
1940 முதல் 1952 வரையான காலப்பகுதி அப்போது உருவான அரசியல் எழுச்சியை இன்னும் வேகப்படுத்தியிருந்தது. இலங்கை இந்திய காங்கிரஸின் தோற்றமும் அவர்களின் அரசியல் வியாபகமும் இலங்கை சுதந்திரமடையும் நாட்களில் 7 உறுப்பினர்களை மக்கள் அவையில் இறுத்தியது.
எனினும் சுதேச அரசாங்கம் கொண்டுவந்த குடியுரிமைச்சட்டம் மலையக மக்களை வாக்குரிமை அற்றவர்களாக ஆக்கிவிடவே 1948 முதல் 1978 வரையான 30 ஆண்டு காலப்பகுதியை அரசியல் சூனியமாக்கி விட்டிருந்தது எனலாம்.
இந்த முப்பது ஆண்டுகளில் இவர்களின் போராட்டம் முழுவதும் பிரஜாவுரிமையைப் பெறுவது எனும் போராட்டத்திற்குள்ளேயே அடங்கிப்போனது. இடையில் 1964 ஆம் ஆண்டு இந்த மக்கள் மீது திணிக்கப்பட்ட ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் இந்த மக்களை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் என பங்குபோட்டு பலம் குறைந்தவர்களாக்கியது.
1980ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் பறிக்கப்பட்ட வாக்குரிமை மீளவும் கிடைக்கப்பெற, நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவமும் , அமைச்சுப் பதவிகளும் கூட கிடைக்கப்பெற்றன. மக்களுக்கான வேலைத்திட்டங்கள் செய்யக்கூடியதான நிலையும் உருவாகும் நிலைமை ஏற்பட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் அதன் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் சக்தி மிக்க அமைச்சராகவும் வலம் வந்த காலம் அது.
1994 ஆம் ஆண்டு மலையகத்தின் எழுச்சி இயக்கமாக தோன்றிய மலையக மக்கள் முன்னணி காணி உரிமையையும், தனிவீட்டு கோரிக்கையையும் அரசியல் சுலோகங்களாகக் கொண்டு 1994 ஆம் ஆண்டு ஒரே ஒரு ஆசனத்தை துரும்புச்சீட்டாகப்பெற்றது.
அதுவரை இருந்த 17 அண்டுகால ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை தூக்கியெறிந்து சந்திரிக்கா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு மலையக மக்கள் முன்னணி சயேட்சையாக பெற்றுக்கொண்ட அந்த ஒற்றை ஆசனமே கைகொடுத்தது என்பது வரலாறு.
அந்த அரசியல் பலத்தினைக் கொண்டு மலையக மக்களின் காணி, தனிவீட்டு விடயத்தை ஒரு பிரகடனமாகக் கொண்டு சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்திய இருக்கவேண்டும். ஆனால் இதுவரையிலும் அது முழுமைப்பெறவில்லை.
இது இவ்வாறிருக்க 1996 ஆம் ஆண்டு சந்திரிக்காவினால் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டபோது, பெருந்தோட்ட மக்களுக்கு வீட்டுத் தேவைகள் பற்றி பேசபட்டிருந்தாலும் அது உறுதியாக முன்வைக்கப்படவில்லை. பின்னர் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இ.தொ.கா வசமானது.
2009 ஆம் ஆண்டு மகிந்த ஆட்சிக் காலத்தில் அந்த அமைச்சு இல்லாமல் ஆக்கப்பட்டது. அமைச்சும் இல்லை, வீடும் இல்லை என்ற நிலையானது. இந்த அமைச்சு இல்லாமல் போன காலப்பகுதியில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 11 பேர் பாராளுமன்றத்தில் வீற்றிருந்தனர் என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு எனும் நவீன அமைச்சு முறைமை உருவாக்கப்பட்டு இந்திய அரசாங்கத்தின் நிதியுடவியுடனும் இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புடனும் தோட்டப்பகுதிகளில் வீடமைப்பு பணிகள் கிரமமாக முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் பரவலாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான வடக்கு கிழக்கு மாகாணங்களில் வீடமைப்பில் அதிக கவனமெடுத்தது. அதனோடு இணைந்ததாக மலையகத்துக்கான இந்திய வீடமைப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்திலும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டன். பெரும்பாலான வீடுகள் உரிய பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது. அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால், அடிக்கல் நாட்டப்பட்டு அடித்தள வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட தோட்ட மக்களுக்கான இன்னும் ஆயிரக்கணக்கான வீடமைப்பு வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
ஆனாலும் இப்போதும் இந்த வீடமைப்புக்கு பொறுப்பான அமைச்சு இந்த மக்களின் பிரதிநிதிகள் வசமே உள்ளது என்ற விடயத்தை மறந்துவிடாமலேயே இந்த இளங்கலைஞனின் மரணத்தின் பின்னணியில் மலையக வீட்டுத்திட்டத்தை நோக்க வேண்டியுள்ளது.
பாம்புக்கு பலியான எஸ்கரின் வீடமைப்பு கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு மூங்கிலிலான வரிச்சிலுடன் மண்ணால் கட்டப்பட்ட வீடு. அங்கு அறைகள் என்று சொல்லும் அளவிற்கு ஒன்றுமில்லை. அந்த வீட்டை சுற்றி காணிப்பரப்பு என்று அடையாளப்படுத்தவும் ஓர் இடமில்லை. இன்றைய நவீனயுகத்திலும் இப்படியான வீடுகளில் வாழும் ஒரு துர்ப்பாக்கிய நிலை மலையகத்தவருக்கு மட்டுமா? இது வரமா? சாபமா?
நான்கு பிள்ளைகள் உட்பட தாய், தந்தை என ஆறுபேர் இந்தவீட்டிலேயே அத்துனை வருட காலத்தையும் கழித்துள்ளனர். பிள்ளைகள் திறமைசாலிகள் இது ஊரார் பேசுவது. தேயிலை தொழில் செய்து நான்கு பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்து அவர்களை பராமரித்து பாடசாலைக்கு அனுப்புவதற்கு அந்த பெற்றோர்களான தொழிலாளிக்கு இயலுமான காரியமா?
அத்தியவசியத் தேவை என்றால் உணவு, உடை, உறையுள் என்ற இந்த மூன்று சொற்கள் அடங்கிய தேவைகள் தான் நமது வாயில் வரும். இந்த மூன்றையும் கடந்த தேவைகள் இன்று தேவைப்படும் பட்சத்தில் அந்த அடிப்படையான மூன்றையுமே பெறாத நிலையில் வேறு எதனைத்தான் சிந்திக்க முடியும்.
காலம் காலமாக மலையகத்தை ஆள்வதாக கர்ச்சித்துவரும் மூத்த தொழிற்சங்கங்கள் மாடாய் உழைத்து தேய்ந்து போகும் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் கரிசனை கொண்டிருந்தால் மண் சுவர் கொண்டு கட்டிய வீட்டில் வாழும் நிலை மாறி இருக்கும் அல்லவா?
தோட்ட மக்களின் வாழ்க்தைத்தரத்தை உயர்த்த வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் தோட்ட முகாமைத்துவத்திற்கு உரியது. இதனை கடந்து விட்டு மக்களிடம் வருவாயை மாத்திரம் எதிர்ப்பார்த்து விடமுடியாது. அதற்கமைய தோட்ட நிர்வாகத்திடம் முறையாக அணுகி தங்களது தேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டியது அந்தந்த தோட்ட மக்களின் கடமை எனவும் இவ்விடயத்தில் வலியுறுத்த வேண்டும்.
உரிய சந்தர்ப்பங்களில் தங்களது தேவைகளை பெற்றுக்கொள்வதற்கு மலையக சமூகம் எத்தணிக்காமல் இருந்தமையினாலேயே ஏனைய சமூகத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இன்றும் பின்னடைந்த நிலையில் இருக்கின்றோம். இவ்வாறான நிலையில் இருந்து மலையகம் விடுபட வேண்டுமாயின் இன்றைய தலைமுறையாயினும் சுய விழிப்புணர்வுடன் இருந்தால் மாத்திரமே சாத்தியமாகும்.
0 comments