பாரம்பரிய கலைகளை பாதுகாக்க வேண்டியது கலைஞர்களாகிய எமது கடமையாகும்

February 19, 2021

 இந் நவீன யுகத்தில் பரதக் கலையை பயில்வதன் மூலம் ஒருவிதமான மன அமைதி, மன தைரியம், போன்றவைகளை உணர முடிகிறது . உலகமே இப்போது இயந்திர மயமாகியுள்ள நிலையில், நமது பாரம்பரிய கலைகளின் பாவணை  குறைவடைந்தும் வருகின்றது.  இந்நிலையில் அதனை பாதுகாக்க வேண்டியது கலைஞர்களான எமது கைகளிலேயே  உள்ளது என்கிறார் சிவக்ஷேத்திரம் நாட்டியப்பள்ளியின் ஸ்தாபக இயக்குநர் , இளம் பரத நாட்டிய ஆசிரியருமான  வீரசிங்கம் விஜேந்திரன்.

  திருகோணமலையை பிறப்பிடமாகவும் நாவலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட பரத நாட்டிய கலைஞர் வீரசிங்கம்  விஜேந்திரன் தனது ஆரம்பக்கல்வியை கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்திலும் உயர்தர வகுப்பினை கதிரேசன் கல்லூரியிலும் கற்றுள்ளார். 

ஸ்ரீமதி துஷ்யந்தி பெரியசாமியை குருவாக கொண்ட இவர் , கல்லூரி காலத்தில் பல நிகழ்ச்சிகள், போட்டிகளில் பங்குபற்றி பல முதலிடங்களைப் பெற்று தங்கப்பதங்கங்களைப் பெற்றுள்ளேன். இதுவே கலைத்துறைக்குள் நுழைவதற்கு அடித்தளமாக இருந்ததாகவும்;  பரத நாட்டிய ஆசிரியர்  வீரசிங்கம் விஜேந்திரன்  தெரிவித்துள்ளார். 

 எதிர்வரும் 20ஆம் திகதி தனது 22 ஆவது மாணவியை அரங்கேற்றத்திற்கு தயாரப்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பில்,  அவர் எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்கள் எமது வாசகர்களுக்காக....

.


கலாஷேத்திராவிற்கு கல்வி கற்க செல்வதற்கு அடித்தளமாக இருந்தது எவை என்பது பற்றி கூறமுடியுமா? 

 அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற நாட்டிய பயிற்சி பட்டறையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர். இப்பயிற்சி பட்டறையை நடத்துவதற்கு சென்னை கலாஷேத்திராவில் இருந்து  சிரேஷ்ட விரிவுரையாளர்கள் வருகைத் தந்திருந்தனர்.  பத்து நாட்கள் நடத்திய பயிற்சி பட்டறையில் இறுதி நாளன்று சென்னை கலாஷேத்திராவில் கல்வி கற்பிப்பதற்கு நான் தெரிவானேன். அதன் பின்னர் நாட்டியம் பயில்வதற்காக சென்னை சென்றேன். முழுமையான பயிற்சி பெற்று வந்த நான் இப்போது நாடளாவிய ரீதியில் பல வகுப்புக்களை உருவாக்கி நடாத்தி வருகின்றேன். 


மாணவனாக, கலைஞனாக இருந்து இப்போது குருவாக உயர்ந்துள்ளீர்கள் அதன் அனுபவங்கள் எத்தகையது?

மாணவனாக இருக்கும் போது ஆசிரியர்களின் வழிகாட்டலில் என்னை மெருகேற்றிக் கொண்டேன். அதே போன்று இத்துறையில் பிரகாசிக்க வைப்பதற்காக என்னை ஒரு மாணவனாக என் குருவின் வழிநடத்தலில்   திறம்படக் கற்றுக்கொண்டேன். 

சென்னை கலாஷேத்திராவில் கற்ற போது பல நாட்டிய நாடகங்கள், நாட்டிய நிகழ்வுகள் போன்றவற்றில் கலந்துக்கொண்டேன். இலங்கைக்கு  வந்ததும் பல நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் அழைப்பு வந்தது. அதன் பின்னர் பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு என்னை ஒரு நாட்டிய கலைஞனாக நம் நாட்டில் நிலைநிறுத்திக்கொண்டேன்.

தற்போது குருவாக உயர்ந்திருப்பது எனக்குப் பெருமையாக இருக்கின்றது. இதற்கு எல்லாம் வல்ல நடராஜ பெருமானின் ஆசியும் எனக்கு உறுதுணையாக உள்ளது.  தற்போது, ஒரு குருவாக அதிகளவான பொறுப்புக்கள் என்முன்னுள்ளது. 

மாணவர்களுக்கு சரியான விதத்தில் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களை ஒரு கலைஞனாக உருவாக்குவது எம் கைகளிலேயே இருக்கின்றது என்ற அதீத பொறுப்புக்களை சுமந்தவனாக செயற்படுகின்றேன்.

  சகோதர மொழி பேசும் மாணவர்கள் என்னிடம் அதிகளவாக கற்பதனால் அவர்களுக்கு அவர்களது மொழியில் புரியும் படி கற்றுக்கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு என்னிடம் உள்ளது. ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் இப்போது அவற்றை இலகுவாக மாற்றிக்கொண்டேன். இது மனதிற்கு பெரும் மகிழ்ச்சி. 

இதுவரையில் 21 அரங்கேற்றங்கள் செய்துள்ள நீங்கள் உங்களது அரங்கேற்றத்தை பற்றியும் , உங்களது மாணவர்களை நீங்கள் அரகேற்றம் செய்யவது பற்றியும் எம்முடன் பகிர்ந்துக்கொள்வீர்களா?

நான் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தபோது எதேட்சையாக எனக்கு புலமைப்பரிசில் பெற்று சென்னை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் நான் அரங்கேற்றம் செய்யும் நிலை மாறியது. அதன் பின்னர் இலங்கை வந்ததும் பல மேடை நிகழ்ச்சிகள் செய்வதற்கு  ஆரம்பித்தும் அந்த எண்ணம் கை விடப்பட்டது.

எனது நாட்டியப்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்து இதுவரை 21 மாணவர்களுக்கு அரங்கேற்றங்களை நடாத்தியுள்ளேன். அரங்கேற்றங்கள் நடத்தியுள்ளேன்.  இவற்றுள் 16 மாணவிகள் சகோதர மொழி பேசுபவர்கள் என்பது இங்கு குறிப்பிட்டத்தக்கது 

கடந்த வருடம் 10 வயது சிறுமியின் அரங்கேற்றம் நடைபெற்றது அது பலரது பாராட்டையும் பெற்றதாக அமைந்தது 

பொதுவாக ஆண்கள்  இத்துறைக்குள் பிரவேசிப்பது அரிதான நிலையில் நீங்கள் இத்துறையில் தொடர்ச்சியாக மிளிர ஏதுவாக இருந்த விடயங்கள் பற்றி?

ஆரம்ப காலத்தில் இந்தியாவை போன்று ஆண் நடன கலைஞர்கள் குறைவாகவே இருந்தனர் ஆனால், இப்போது நிலைமைமாறி இலங்கையிலும் பெரும்பாலான ஆண்கள் நாட்டிய கலைஞர்களாக  இருக்கின்றனர்.   

எனது நடன அமைப்புக்கள் கூடுதலாக நிருத்ததிற்கு முக்கியத்துவம் தரப்படுவதாக இருக்கும் அதே போன்ற நான் இன்று இத்துறையில் மிளிர்வதற்கு எல்லாம்; வல்ல நடராஜபெருமனின் ஆசியும் எனது குருக்களின் ஆசியும் எனக்கு கிடைத்த திறமையான மாணவர்களுமே நான் இன்று இத்துறையில் மிளிர்வதற்கு காரணம் என நான் நினைக்கிறேன்.

பரதக்கலையில் உங்களது ஆஸ்த்தான குரு யார்.? அத்துடன் உங்களைப்பற்றி எம்முடன் பகிர்ந்துக்கொள்வீர்களா?

பரத நாட்டியதில் எனது 03 வயதில் ஆசிரியை ஸ்ரீமதி சுமதி சன்முகவேலிடம் ஆரம்பித்தேன் அதன் பிறகு கல்லூரியில் ஸ்ரீமதி துஷ்யந்தி பெரியசாமி அவர்தான் என்னுடைய என்னை நாட்டிய கலைஞனாக இந் நிலைக்கு உயர்த்தியவர்.  அதே போன்று மேலதிக   வகுப்பை ஸ்ரீமதி சிவாந்தி இராமமூர்த்தியிடம் கற்றேன் 

ஆனால், இன்று பல நடன யுக்திகளையும் பல விடயங்களையும் கற்றுத்தரும் ஒரு ஒரு ஆசானாக என்னை தொடர்ச்சியாக வழிநடத்திச் செல்பவர் ஸ்ரீமதி வைஜெயந்திமாலா செல்வரட்ணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நவீன யுகத்தில் கலைத்துறையில் ஈடுபடுபவர்களின் நிலை எவ்வாறான உள்ளது? மாணவர்கள் ஆர்வத்துடன் செயற்படுகின்றார்களா?

மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் இக் கலையை கற்கின்றனர் அவர்களுக்கு சிறந்த முறையில் இக்கலை குருவாக எம்மால் சென்றடைய வேண்டும் என்பதில் எமக்கு பெரும் பங்கு உள்ளது. ஏனெனில் நாளை சிறந்த கலைஞர்களாக உருவாக வேண்டியவர்கள் அவர்களே.

இந்த நவீன யுகத்தில் பரதக் கலையை பயில்வதன் மூலம் ஒருவிதமான மன அமைதி, மன தைரியம், போன்றவைகளை உணர முடிகிறது. உலகமே இயந்திரமயமாகியுள்ள நிலையில்,  மன அழுத்தத்தை போக்குவதற்கு இன்று பெரும்பாலானவர்கள் நடனத்தை விரும்பி கற்கின்றனர்.

அத்தோடு நவீன யுகத்தில் நமது பாரம்பரிய கலைகளின் பாவணை  குறைவடைந்தும் வருகின்றது. இந் நிலையில் அதனை பாதுகாக்க வேண்டியது கலைஞர்களான எம் கையில் உள்ளது. 


எதிர்வரும் சனிக்கிழமை உங்களது மாணவியொருவரின் அரங்கேற்ற நிகழ்வு இடம்பெறவுள்ளது. அது பற்றி எம்முடன் பகிர்ந்துக்கொள்ள முடியுமா?

 எதிர்வரும் 20 ஆம் திகதி மாலை 05.15 க்கு புதிய கதிரேசன் குமாரி தாருண்யா மகேஸ்வரனின் பரதநாட்டியம் அரங்கேற்றம் நடைபெறவுள்ளது

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக செல்வி சுகிர்தா தேவி முத்துசாமி கௌரவ அதிதிகளாக கலாபூஷணம் வைஜயந்திமாலா செல்வரட்ணம் கலைமாமனி ஷாமினி ராமநாதன் கலைமாமனி சிவாந்தி ராமமூர்த்தி , மற்றும் சிறப்பு அதிதியாக பிரதீப் குமார் முத்துசாமி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்

 இந்நிகழ்வில, குரலிசை- ஸ்ரீ திவாககர் செல்வரட்ணம், மிருதங்கம் ஸ்ரீ லோகேந்திரன் மகேந்திரன், வயலின் ஸ்ரீ திபாகரன், தாள தரங்கம் - ஸ்ரீ ரட்ணம் ரட்ணதுரை, புல்லாங்குழல் - ஸ்ரீ பிரியந்த ஆகியோர் அணிசேர் கலைஞர்களாக செயற்படவுள்ளனர். 





You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images