மூளை; எமது பிரச்சினைகள் சார்ந்தே யோசனை செய்கிறது- இளம் இயக்குனர் : யுவன்
February 21, 2021தலவாக்கலை லோகி தோட்டத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டுள்ள இளம் கலைஞர் யுவன். 2015 ஆம் ஆண்டு உயர்தர படிப்பை முடித்து பின்பு பலதரப்பட்ட கற்கை நெறிகளை கற்ற இவருக்கு கலைத்துறையிழல் அதீத ஆர்வம். ஆர்வத்தின் விளைவின் சான்றுகளே அவர் தயாரித்துள்ள ஐந்து குறும்படங்கள்.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இளைஞர் அமைப்பின் தலைவராகவும் தேசிய இளைஞர் அமைப்பின் உறுப்பினராகவும் ஹட்டன் - கொட்டகலை ரொட்டறிக் கழகத்தின் உறுப்பினராகவும் செயற்படும் யுவனுக்கு விவசாயம் மீது அதீத ஆர்வம். இவரின் சுயதொழில் விவசாயம்.
இது வரையில் எத்தனை குறும்படங்களை தயாரித்துள்ளீர்கள்? அதன் கதை கருப்பொருள் எவ்வாறானது?
1. சமூக சேவை செய்வது எனக்கு மிக பிடித்தமான ஒன்று அதன் காரணமோ தெரியவில்லை மூளை எமது பிரச்சினைகள் சார்ந்தே யோசனை செய்கிறது. ஆதலால் எமது பிரச்சினைகளை குறும்படங்களூடாக வெளிய கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்திலேயே ஒவ்வொரு குறும்படத்தின் கதை கருவும் அமைந்துள்ளது.
1. சதை - சிறுவயது திருமணத்தின் விளைவுகள் பற்றியான ஒரு கதை. இது இந்த காலத்தில் எல்லாவிதமான சமூகத்திற்கும் பொருத்தமான ஒன்றாகும். முதலாவது குறும்படம் என்பதால் சில குறைநிறைகள் உள்ளன ஆனாலும் எனக்கு சினிமாவை கொஞ்சமாவது கற்றுக்கொடுத்த படம் இதுதான் அதனால் இக்குறும்படத்தின் மீது எனக்கு அன்பு அதிகம்!
2. விஷமி - கைப்பேசிக்கு அடிமைப்பட்டிருக்கும் சமூகத்திற்கு எதிரான குறும்படம். இது புதுவிதமாக ஒரு ஊனமுற்றோர் ஒருவரை நடிக்க வைத்து எடுக்கப்பட்ட குறும்படம்
3. CD4 - பெற்றோர்களை அனாதை இல்லத்தில் விடுபவர்களுக்கு எதிரான குறும்படம். பாசமான ஒரு அம்மாவை மையமாக வைத்து அமைக்கப்பட்ட கதை .
4. தோடு - பெருந்தோட்டத் தொழிலாளர்களின்
1000 ரூபாய் பிரச்சினைக்கு எதிரான குறும்படம். தோட்டத்தொழிலாளியாக வாழும் ஒரு குடும்பத்தின் நிலையை எடுத்துக்கூறும் ஒரு கருத்துள்ள படம். 'ஆயிரம் ஒரு நாள் பல ஆயிரங்களாக மாறும' என்ற தொனிப்பொருளில் எடுக்கப்பட்ட குறும்படம்
5.எனிமி - டெங்கு காய்ச்சல் பற்றிய ஒரு விழிப்புணர்வுமிக்க குறும்படம்.
6. ஏரோபிளேன் - இன்னும் வெளிவரவில்லை. மலையக தொழிலாளர்களின் பிரச்சினைகளை காட்டும் ஒரு குறும்படம்.
02.ஆறு குறும்படங்களை தயாரித்துள்ளீர்கள். இதன் மூலங் உங்களுக்கு கிடைத்த பிரதிபலன்கள் எதேனும் உண்டா?
என்னை யாரென்று உலகுக்கு அறிமுகப்படுத்தியதையே நான் பிரதிபலனாகவே கருதுகின்றேன்.
உண்மையிலேயே இந்த குறும்படங்கள் எனக்கு நிறைய அந்தஸ்தை தந்துள்ளது. புகைப்படக்கலையை இலவசமாக படிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. இரண்டு விருதுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
சினிமாவை பற்றியதான அடிப்படையான அனுபவங்கள் பலவற்றையும் பெற்றுக்கொடுத்துள்ளது. அது மாத்திரமன்றி இதன் மூலம் எனக்கு பல வழிகளிலும் வாய்ப்புக்கள் கிடைத்த வண்ணமாகவே உள்ளது. இவற்றையே நான் பிரதிபலனாகக் கருதுகின்றேன்.
03.கதாப்பாத்திரங்களுக்கான கலைஞர்கள் என யாரைத் தெரிவு செய்தீர்கள்? அதில் உள்ள சவால்கள் எத்தகையது?
ஆரம்பத்தில் நான் குறும்படம் செய்யும்போது என்னை நம்பி நடிப்பதற்கு யாரும் இருக்கவில்லை. ஆதலால் என் நண்பர்களே நடித்து உதவி செய்தனர். பின்பு என்னை சற்று நான் நிலைநிறுத்திய பின் நிறைய பேர் நடிப்பதற்கு வருவர். எமது பிரதேசத்தில் சினிமாதுறை வளர்ச்சி மிகவும் குறைவு . ஆதலால் நாங்களே எங்களுக்கு தெரிந்தவர்களை வைத்து குறும்படங்களை இயக்கி வருகிறோம். பணம் கொடுத்து யாரையும் நடிக்க வைப்பதற்கான வசதி எம்மிடம் இல்லலை. இருக்கும்வளங்களைக் கொண்டே இதில் அதீத ஆர்வத்துடன் என்னை ஈடுபடுத்தி வருகின்றேன்.
04. இத்துறையில் உங்களுக்கு எவ்வாறு ஆர்வம் எற்பட்டது என்பது பற்றி...?
எனது நண்பனுடனான கலந்துரையாடலில் தான் எனக்கு குறும்படம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. 2018 ஆம் ஆண்டு கலப்பகுதிக்கு பின்னரே நான் இத்துறைக்கு வந்தேன். மலையகத்தில் சினிமாவிற்கென ஒரு தனி அங்கீகாரத்தை கொண்டுவருவதே எனது நோக்கம். அத இரண்டு குறுபடங்களைத் தவிர ஏனைய படைப்புக்களுக்கு யாரிடமிருந்தும் எனக்கு உதவி கிடைத்ததில்லை.
குறும்படம் என்றால் என்ன? என்பது பற்றியதான போதி வளக்கம் எமது சமூக மட்டத்தில் இல்லாமையினாலேயே யாரும் உதவி செய்ய முன்வரவில்லை என நான் நினைக்கின்றேன். ஆகையால் எம்மவர் மத்தியில் அதன் விழிப்புனர்வை கொண்டுவர முயல்கிறோம்.
05 எதிர்காலத்தில் எவ்வாறான படைப்புகளை தரவுள்ளீர்கள்?
எதிர்காலத்தில் ஒரு முழுநீளத் திரைப்படம் ஒன்றை உருவாக்குவதே என்னுடைய அவா! அதற்கான வேலைத்திட்டங்களைதான் இப்போது செய்து வருகிறேன் அத்தோடு இந்த மாதம் இன்னுமொரு குறும்படமும் இயக்கவுள்ளேன். எந்த படம் பன்னினாலும் உடன் இருந்து உதவி செய்யும் நண்பன் கமேஷ்க்கு இத்தருணத்தில் நன்றி கூருகின்றேன் எதிர்காலத்தில் ஒரு தரமான படைப்பை தருவேன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
அத்தோடு இனி சிறப்பாக நடிக்க கூடியவர்களையும் சினிமா சார்ந்த ஆர்வம் உள்ளவர்களையும் என்னோடு இணைத்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.
அது என்னுடைய முழுநீளப் படத்திற்கு உதவியாக அமையும்! மற்றும் யதார்த்தமான படைப்பாக அது இருக்கும்.
0 comments