ராம்ஜீ
தமிழ் இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத மரபுக் கவிஞராய் இலக்கியவாதிகளை அண்ணாந்து பார்க்க வைத்தவர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன். பவளவிழாக் கண்ட காவியப் புலவர. கிழக்கு மண்ணின் ஈடிணையற்ற தமிழ் ஆளுமையான புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீனின் இலக்கிய வாரிசு இவர். 1965களில் ஆரம்பித்த இவரது இலக்கியப் பணி இன்றுவரை சுமார் 5 தசாப்தங்களையும் கடந்துச் செல்கின்றது.
தமிழ் இலக்கியத்தின் பல்பரிமாண ஆளுமை கொண்ட இவர், பல காவியங்கள் படைத்ததோடு சிறுகதை, புதினம், சிறுவர் இலக்கியம், மொழிமாற்றம் போன்ற இதர துறைகளிலும் தடம் பதித்தவர். பத்தாயிரத்துக்கும் அதிகமான செய்யுள்களைக் கொண்டு பதினொரு காவியங்கள் படைத்து இந்த நவீன இலக்கிய மரபின் ஆளுகைக்குள்ளும் படைத்துக் காட்டியவர். சுமார் ஐந்து தசாப்தங்களாக இலக்கியப் பணி புரியும் இலக்கிய உழைப்பாளி.
தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராக, பொதுச்செயலாளராக பணியாற்றிய இவர் தமிழ்_ முஸ்லிம் உறவுகளின் ஐக்கியச் சின்னமாக இருந்து வருகிறார்.
இவர் எழுதிய பண்டார வன்னியன் காவியம், எல்லாள காவியம் போன்ற படைப்புக்கள் ஈழத்து சமூகவியல், அரசியல் வரலாற்றுத் துறைகளின் இலக்கிய ஆவணமாக மாறியுள்ளமை தமிழர்களின் இருப்பையும், தமிழின் இருப்பையும் இலங்கையில் உறுதி செய்துள்ளது. அது ஜின்னாஹ்வின் தமிழ் சார்ந்த மாபெரும் இலக்கிய அரசியலில் ஆவணப்படுத்தலாகும்.
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஸ்தாபகத் தலைவரான காப்பியக்கோ,இலங்கையில் இரண்டு உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளைத் தலைமை ஏற்றுச் சிறப்புற நடாத்தியிருந்தார். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அவருக்கிருந்த அங்கீகாரங்களின் மூலம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் இலங்கையில் வெற்றிகரமாக நடந்தேறின.
முத்துநகை–(1989), பாலையில் வசந்தம்(1989, மஹ்ஜபீன் காவியம் (1992), புனித பூமியிலே காவியம் (1998) பனிமலையின் பூபாளம் (1995), கருகாத பசுமை (புதினம்) (2000) , ஜின்னாஹ்வின் இரு குறுங் காவியங்கள் (2001) , கடலில் மிதக்கும் மாடிவீடு (2002), அகப்பட்ட கள்வன் (2003), பெற்றமனம் - சிறுகதைத் தொகுப்பு (2003) , எங்கள் உலகம் (2003), பண்டார வன்னியன் காவியம -(2005), திருநபி காவியம் (2006), திருமறையும் நபிவழியும் (2007), வேரறுந்தநாட்கள் (2008), ராகுலுக்கு ஓருபுதுவண்டி (2008), சிறுமியும் மந்திரக் கோலும் (2010), தீரன் திப்புசுல்தான் காவியம் (2010), அன்பின் கருணையின் பேரூற்று (2010), வாத்தியார் மாப்பிள்ளை காவியம் (2011), 'கேள்வியும் பதிலும்' (2011), எல்லாள காவியம் (2013), நாயனொடு வசனித்த நந்நபி (மூஸாநபி காவியம்) (2014), அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும் காவியம் (2017) முக்காழி -புதினம் (2018), மைவண்ணன் இராமகாவியம்(2020),
தேசிய சாஹித்திய விருது , தமிழியல் விருது, கிழக்குமாகாண சாஹித்தி விரதுகள் உட்பட நூற்றுக்கணக்கான விருதுகளையும் உள்நாடு, வெளிநாடுகளில் சிறந்த கௌரவங்களையும் விருதுகளையும் பெற்ற எழுத்தாளராக திகழும் ஜின்னாஹ் ஷரிபூத்தீன் இன்று தனது நூல் ஒன்றையும் வெளியிடவுள்ளார்.
'மைவண்ணன் இராமகாவியம்' என இவரது நூல் இன்று வெள்ளவத்தை, கொழும்புத்தமிழ்ச்சங்கத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இன்று 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணிக்கு இடம்பெறவுள்ளது.
எஸ்.டி.சிவநாயகம் அரங்காக, கொழும்புத்தமிழ்ச்சங்கத்தின் தலைவர் ஆ.குகமூர்த்தி தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில்,பேராசிரியர் சோ. சந்திரசேகரம், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் . ஏ.பீ.எம்.அஷ்ரப் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.